பதவி ஆசைக்காக துரோகம்: சிவி சண்முகம், வேலுமணி மீது எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு!

Published On:

| By Kavi

தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 25 பேர் ஆதரவு தெரிவித்த நிலையில், அவர்கள் கட்சி பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து சிவி சண்முகம், வேலுமணி ஆகியோர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம்சாட்டி பேட்டி அளித்தனர்.

ADVERTISEMENT

இந்தநிலையில் இன்று (மே 14) அதிமுக பொதுச் செயலாளர் ஈபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“2026, சட்டமன்றப் பொதுத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டோம். இத்தேர்தல்  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமைய வேண்டும் என்று தமிழக மக்கள் வாக்களித்தனர்.

ADVERTISEMENT

ஆனால், வெற்றி பெற்ற ஒருசில முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், ஆளும் கட்சியுடன் தங்களை இணைத்துக்கொண்டு அமைச்சர் பதவி, வாரியத் தலைவர் பதவி பெற வேண்டும் என்ற பேராசையுடன் நேற்றைக்கு (13.5.2026) நடைபெற்ற, தற்போதைய அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், கழகத்தால் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட கொறாடாவின் உத்தரவிற்கு மாறாக, ஆளும் அரசின் ‘நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு’ ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

இவர்களது இந்தச் செயல் கட்சிக்கு செய்த மாபெரும் துரோகமாகும்.

ADVERTISEMENT

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், 1980-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 2 இடங்களிலும்; 1996 சட்டமன்றத் தேர்தலின்போது 4 இடங்களிலும் வெற்றி பெற்றது. அப்போதும் சில முக்கிய தலைவர்கள் கட்சியில் இருந்து விலகிச் சென்றனர். அப்போதும் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தொண்டர்கள் கட்சியைக் காத்து நின்றார்கள்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 2021-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கழகம் 66 தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சிகள் 9 தொகுதிகளிலும் என்று 75 இடங்களில் வெற்றிபெற்றது. தற்போது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கழகம் 47 இடங்களிலும், கூட்டணிக் கட்சிகள் 6 இடங்களிலும் என்று 53 இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம்.

வெற்றியும், தோல்வியும் அரசியலில் மாறி மாறி வருவது இயல்பு. தற்போது கழகம் வெற்றி வாய்ப்பை இழந்த நிலையில், வெற்றி பெற்ற சில முன்னாள் அமைச்சர்கள், ஆளும் கட்சியுடன் இணைந்தால் 6 அமைச்சர்களும், 10 வாரியத் தலைவர் பதவிகளும் கொடுக்கப்படும் என்ற ஆசை வார்த்தைக்கு மயங்கி, தங்கள் சுயநலத்திற்காக ஆளும் கட்சிக்கு ஆதரவு அளித்துள்ளனர். இவர்களின் செயல்களை ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் பார்த்து கழகத்தின் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
கழகத்திற்கு துரோகம் இழைத்துள்ளவர்கள், தங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக, என்மீது பல்வேறு அவதூறு கருத்துகளை, பழி பாவங்களை சுமத்தி வருகின்றனர்.

 நான் AC அறையில் அமர்ந்துகொண்டு அரசியல் செய்வதாக ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் செய்தி பரப்பி வருகின்றனர்.

தொண்டர்களை நான் நேரில் பார்ப்பதில்லை என்று உண்மைக்கு மாறாக சொல்கின்றனர்.

2021-ல் கழகம் ஆட்சிப் பொறுப்பை இழந்தது முதல் இன்றுவரை, இந்த இயக்கத்தை கட்டிக் காப்பதற்காக பல்வேறு போராட்டங்களை நான் சந்தித்து வருவதை, ஒவ்வொரு உறுப்பினரும் நன்கு அறிவார்கள். 

நான் முதலமைச்சராகவும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றியபோது, நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் எந்த நேரத்தில் என்னைப் பார்க்க வந்தாலும், நான் அவர்களை சந்தித்து வந்தது அனைவருக்கும் நன்றாகவே தெரியும்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் தமிழ் நாடு முழுவதும் 196 சட்டமன்றத் தொகுதிகளில் எழுச்சிப் பயணம் மேற்கொண்டு மக்களை நேரில் சந்தித்து கட்சியை நான் வலுப்படுத்தி இருக்கிறேன்.

* தேர்தலில் சிறப்பான கூட்டணியை அமைத்தோம்.

* தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தமிழ் நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்தேன்.

எடப்பாடி தொகுதியில், தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன்.

ஆனால் தற்போது, தங்களது பதவி ஆசைக்காக கழகத்திற்கு துரோகம் இழைத்துள்ளவர்கள், என்னைப் பற்றி அவதூறு பிரச்சாரம் செய்வது மிகவும் வேதனைக்குரியதும், கண்டிக்கத்தக்கதுமாகும்.

மந்திரி மற்றும் வாரியப் பதவிகளுக்காக சுயநலத்துடன் செயல்படும் ஒருசில முன்னாள் அமைச்சர்களிடம், கட்சியின் அனைத்து நிலைகளிலும் பணியாற்றிவரும் நிர்வாகிகளும், தொண்டர்களும் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இந்த இயக்கத்தின் சாதாரண தொண்டன் என்ற உணர்வோடுதான் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஒவ்வொரு நாளும் பயணம் செய்து வருகிறேன்.

“எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்” என்று சூளுரைத்த ஜெயலலிதாவின் நம்பிக்கையை மெய்ப்பிக்க எந்தத் தியாகத்தையும் செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன். தற்போது வெற்றி வாய்ப்பை இழந்தாலும், நாம் உணர்வுப்பூர்வமாக செயல்பட்டு மீண்டும் கழகத்தின் நல்லாட்சி அமைந்திட  பணியாற்றுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share