விஜய்க்கு முன் சோபா வந்தது குறித்து திருமா விளக்கம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay

விஜய் வருகைக்காக சோபா ஆர்டர் செய்யப்படவில்லை. ஏற்கனவே ஆர்டர் செய்த சோபா தான் அலுவலகத்திற்கு வந்தது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அதிமுக முதலமைச்சர் சி.வி. சண்முகம் ஒரு தலித் முதலமைச்சராகும் வாய்ப்பு தமிழக அரசியலில் உருவாகி உள்ளது என என பேசிய கேள்விக்கு, “அது பத்தி எனக்கு எதுவும் தெரியாது. அங்க என்ன நடந்தது? அவர்களுக்குள் என்ன உரையாடல் நடந்தது? எதுவும் எனக்குத் தெரியாது. ஏற்கனவே நான் சொன்னேன். எனக்குத் தெரிந்த எனக்கு நெருங்கிய சில நண்பர்கள் என்னிடத்தில் இப்படி ஒரு பேச்சு போய்க் கொண்டிருக்கிறது என்ற தகவலைச் சொன்னார்கள்.

ADVERTISEMENT

மற்றபடி பின்னால் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது. நாங்கள் அதற்காகத்தான் காத்திருந்தோம். காலம் தாழ்த்தினோம் என்பதைப் போன்ற ஒரு தோற்றத்தைத் திரும்பத் திரும்பப் பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலர் த.வெ.க.வோடு நாங்கள் பேரம் பேசிக் கொண்டிருக்கிறோம். பேரம் படிவதற்காகத்தான் காலம் தாழ்த்துகிறார்கள் என்று வாய்க்கு வந்தவையெல்லாம் வாரி இறைத்தார்கள்.

எங்களுடைய நடவடிக்கை நான் தொடக்கத்திலேயே சொன்னேன். மீண்டும் சொல்லுகிறேன். அழுத்தமாகச் சொல்லுகிறேன். தெளிவாகச் சொல்லுகிறேன். இடதுசாரி கட்சிகள் எடுக்கிற முடிவை ஒட்டி எங்கள் கட்சியின் உயர்நிலைக் குழுவில் நாங்கள் விவாதித்து அதை ஒட்டி முடிவை எடுப்போம் என்று சொல்லியிருந்தேன். அதில்எந்தத் தடுமாற்றமும் எங்களுக்கு இல்லை.” என்றார்.

ADVERTISEMENT

மேலும் விசிக அலுவலகத்திற்கு சோபா வந்தது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “சோபா விவகாரத்தை பொறுத்தவரை, நாங்கள் ஏற்கனவே ஆர்டர் செய்த சோபா தான் அலுவலகத்திற்கு வந்தது. விசிக அலுவலகத்திற்கு சோபா வந்ததை குறிப்பிட்டு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறவில்லை. அதிமுகவில் உருவாகியிருக்க ஒரு அணியின் தலைவரை, சட்டமன்ற உறுப்பினர்களை சந்திக்க முதல்வர் சென்றதை உதயநிதி சுட்டிக்காட்டியிருக்கிறார் என்று கருதுகிறேன். இது தற்செயலாக நடந்தது. விஜய்யின் வருகைக்காக ஆர்டர் செய்யவில்லை. இந்த விஷயத்தில் தவறான தகவலை பரப்ப வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share