தமிழகத்தின் மிக முக்கியத் துறையான உளவுத் துறை ஐஜியாக அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்துள்ளது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் நிலையில், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில் உளவுத் துறை ஐஜி மாற்றப்பட்டிருக்கிறார்.
முன்னதாக உளவுத் துறை ஐஜியாக செந்தில் வேலன் செயல்பட்டு வந்தார். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 4 நாட்களே இருந்த நிலையில் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக அவினாஷ் குமாரை உளவுத் துறை ஐஜியாக தேர்தல் ஆணையம் நியமித்தது.
இந்தநிலையில் புதிய அரசு பொறுப்பேற்று, அவினாஷ் குமாரை மாற்றி அவரது இடத்தில் ஐஜி அஸ்ரா கார்கை நியமித்துள்ளது.
யார் இந்த அஸ்ரா கார்க்?

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா பகுதியைச் சேர்ந்தவர். எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர். தொடர்ந்து குடிமை பணி தேர்வை எழுதி தேர்ச்சி பெற்று 2004 பேட்ச் தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரி ஆனார்.
இவர் பஞ்சாபி,இந்தி மட்டுமின்றி தமிழிலும் சரளமாக பேசக் கூடியவர். இந்த மொழிப் புலமை என்பது வெறும் தகவல் தொடர்புத் திறன் மட்டுமல்ல, ஒரு உள்ளூர் நபரைப் போன்ற நுணுக்கத்துடன் கையாள்வதற்கும், மக்களுடன் பிணைப்பை ஏற்படுத்துவதற்கும் அவருக்கு பாலமாக இருந்தது.
முதலில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உதவி எஸ்.பியாக தனது பணியை தொடங்கினார்.
2008-ஆம் ஆண்டில், அஸ்ரா கார்க் திருநெல்வேலி எஸ்பி-யாகப் பொறுப்பேற்றார். அப்போது கந்து வட்டி கொடுமையால் திருநெல்வேலி கிராமபுற மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர். இதை அறிந்த அஸ்ரா கார்க் கந்துவட்டி நடைமுறைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார். கந்துவட்டி கொடுமையை முடிவுக்கு கொண்டு வர தனிப்படை அமைத்தார்.
அப்போது பாதிக்கப்பட்டவர்கள் தன்னை அழைக்க ஏதுவாக, தனது தொலைபேசி எண்ணை ஒரு பலகையில் எழுதி வைக்குமாறு அனைத்து உள்ளூர் நிலையங்களுக்கும் உத்தரவிட்டார் . அவர் எடுத்த நடவடிக்கையின் காரணமாக தலைவிரித்தாடிய கந்துவட்டி கொடுமை படிப்படியாக குறைந்தது.
அஸ்ரா கார்க், நெல்லையில் எஸ்.பியாக இருந்த காலத்தில் இவரை கண்டால் ரவுடிகள் அலறி ஓடுவார்கள். நெல்லையில் சாதி மோதல்களை குறைத்ததிலும் அஸ்ரா கார்கிற்கு முக்கிய பங்குண்டு.
இப்படி நெல்லையில் ரவுடிகளை ஓடவிட்ட அஸ்ரா கார்க் 2010ஆம் ஆண்டு மதுரை எஸ்.பியாக மாற்றப்பட்டார். அப்போது மதுரையில் கிரானைட் குவாரி முறைகேடு, நில அபகரிப்பு புகார்கள் என பல சவால்கள் அஸ்ரா கார்க் முன்பு இருந்தது. அதிலும் அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் நடவடிக்கை எடுத்தார்.
2011-ல், வாக்காளர்களுக்குப் பணம் வழங்கியதாகக் குற்றம் சாட்டி, திமுக கொட்டம்பட்டி ஒன்றியச் செயலாளர் மீது வழக்குப்பதிவு செய்தார். மதுரையில் பணப்பட்டுவாடாவை தடுத்தி நிறுத்தியதற்காக அப்போது தேர்தல் ஆணையம் அஸ்ரா கார்கை பாராட்டியது.
குற்றங்களைக் கையாள்வதில் அஸ்ரா கார்க் எப்போதுமே புதுமையான வழிகளை கையாள்வதுண்டு. தன் கணவனைக் கொலை செய்த உஷா ராணியை வழக்கில் இருந்து விடுவித்தது ஒரு சிறந்த உதாரணமாகும். அதாவது தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்டபோது, அதை தடுப்பதற்காக தாக்கியதில் அவரது கணவர் இறந்துவிட்டார். இது அஸ்ரா கார்க்கின் புலன் விசாரணையில் தெரியவந்தபோது, அந்தப் பெண் தற்காப்புக்காகவே அவ்வாறு செயல்பட்டார் என்று இந்தியத் தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவு 100-ன்கீழ் அவரை விடுவிக்க உத்தரவிட்டார். சட்டமானது எப்போதும் கண்மூடித்தனமாக இருப்பதில்லை என்பதற்கான ஒரு உதாரணமாக இந்தச் சம்பவம் பார்க்கப்பட்டது.

மதுரை உத்தபுரத்தில் இரு சமுதாயத்தினர் மத்தியில் பல ஆண்டுகளாக நிலவி வந்த சாதிய மோதலில் சமாதானப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்தார். வெறும் காவல் பணியோடு நின்றுவிடாமல், பல தசாப்தங்களாகத் தொடர்ந்த ‘இரட்டைத் குவளை முறையை ஒழிக்க தீவிரமாகச் செயல்பட்டார். அமைதியை நிலைநாட்டுவதில் அவர் மேற்கொண்ட இந்தத் தனித்துவமான முயற்சி, சமூக சீர்திருத்தத்திற்கான ஒரு மைல்கல் என சென்னை உயர் நீதிமன்றத்தால் பாரட்டப்பட்டது.
நில அபகரிப்புக்கு எதிராக மாநில அளவில் தனிப் பிரிவு உருவாவதற்கு முன்பே, அஸ்ரா கார்க் தலைமையின்கீழ் காவல்துறை நில அபகரிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களது நெட்வொர்க்கை உடைத்தது.
இவர் தருமபுரி மாவட்ட எஸ்பி-யாக இருந்தபோது, நில அபகரிப்பு எதிர்ப்பு சிறப்புப் பிரிவு மூலம் மாநிலத்தின் முதல் தண்டனை பெற்றுத்தரப்பட்டது. அஸ்ரா கார்க் உடல் உறுப்பு கடத்தல் கும்பல்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளார்.
தேனியில் எச்ஐவி-யால் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞருடன் திருமணம் நடக்க இருந்த பெண்ணை கடைசி நேரத்தில் காப்பாற்றி அந்த திருமணத்தையும் தடுத்து நிறுத்தினார்.
2016ஆம் ஆண்டு மத்திய பணிக்கு சென்றார். அப்போது நாட்டையே உலுக்கிய குர்கான் பள்ளி சிறுவன் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நடத்துனர் அப்பாவி என்பதையும், உண்மையான குற்றவாளி யார்? என்பதையும் தனது தனித்துவமான விசாரணை மூலம் வெளியே கொண்டு வந்தார்.
சிபிஐயில் இருந்தபோது தனக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்ற ஹைதராபாத் சோமா என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் ராமச்சந்திர ராவ், உள்துறையில் பணியாற்றிய அதிகாரி தீரஜ் குமார் சிங் ஆகியோரை கைது செய்தார்.
பின்னர் மீண்டும் தமிழ்நாடு கேடருக்கு வந்த அஸ்ரா கார்க், தென்மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டார். தென் மண்டல ஐஜியாக பொறுப்பேற்றதும் கஞ்சா விற்பனைக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார். கஞ்சா வியாபாரிகளின் டேட்டாக்களை சேகரித்து, அவர்களிடம் ‘இனி இதுபோன்று கஞ்சா விற்கமாட்டேன்… சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடமாட்டேன்’ என கையெழுத்து வாங்கினார்.

அதையும் மீறி தொழிலில் ஈடுபட்டவர்களை கைதுசெய்தது மட்டுமின்றி, சிறப்புச் சட்டத்தின் மூலம் அவர்களின் சொத்துகள், வங்கி முதலீடுகள் அனைத்தும் முடக்க நடவடிக்கை எடுத்தார். சுமார் நூற்றுக்கணக்கான கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பின்னர், சென்னை தெற்கு மண்டல சட்டம் ஒழுங்கு பிரிவின் கூடுதல் போலீஸ் கமிஷனராக செயல்பட்டார். 2024ம் ஆண்டில் வடக்கு மண்டல ஐஜியாக பணியாற்றினார். அப்போது, திருவள்ளூரில் சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராம் கார் பயன்படுத்தப்பட்டது தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தனது எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த இந்த குற்றம் தொடர்பாக விசாரித்த அஸ்ரா கார்க், தனக்கு உயர் பதவியில் இருக்கும் அதிகாரி என சற்றும் தயங்காமல், வழக்கின் ஒட்டுமொத்த ஆதாரங்களையும் திரட்டி நீதிமன்றத்தில் சமர்பிக்க உத்தரவிட்டார். பின்னர் இந்த வழக்கில் ஏடிஜிபி ஜெயராம் கைது செய்யப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
2025-ஆம் ஆண்டு தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்; அந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவின் (SIT) தலைவராக அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டார். உடனடியாக கரூருக்கு சென்று விசாரணை மேற்கொண்டார். சுமார் 10 நாட்கள் அஸ்ரா கார்க் தலைமையில் விசாரணை நடந்த நிலையில் வழக்கு உச்ச நீதிமன்ற உத்தரவுபடி சிபிஐக்கு மாற்றப்பட்டது. இருப்பினும், அஸ்ரா கார்க்கின் நிபுணத்துவம் முக்கியமானதாகக் கருதப்பட்டதால், ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையிலான சிபிஐ கண்காணிப்புக் குழுவில் அவர் சேர்க்கப்பட்டார்
இப்படி மக்களின் பாதுகாப்புக்காக அதிரடி நடவடிக்கைகளை எடுத்து, தனது ஐபிஎஸ் பணி தொடக்க காலம் முதலே எந்த விமர்சனத்துக்கும் ஆளாகாமல் நேர்மையாக செயல்பட்டு வந்த அஸ்ரா கார்க் தற்போது உளவுத் துறை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
“காவல்துறையில் யாரேனும் லஞ்சம் வாங்குகிறார்கள் என தெரிந்தால், அரசாங்கம் சம்பளம் கொடுக்கிறது. பிறகு எதற்கு இப்படி பணம் வாங்குகிறீர்கள் என கண்டிக்கக் கூடிய நேர்மையான அதிகாரி. அதோடு தான் பணி புரியும் இடங்களில் முக்கிய அதிகாரிகள் யார் யார் பினாமி பெயர்களில் சொத்து வாங்குகிறார்கள் என்ற தகவலையும் சேகரித்து வைத்திருக்கிறார்.

இவரை உளவுத்துறையில் போட வேண்டாம், எது சொன்னாலும் கேட்கமாட்டார் என முக்கியமான ஒருவர் முதல்வர் விஜய்யிடம் பல தடைகளை போட்டுள்ளார். ஆனால் அஸ்ரா கார்க்கின் முழு பின்னணியை வாங்கி பார்த்த முதல்வர் விஜய், அவரை முக்கிய துறையான உளவுத் துறையில் நியமித்திருக்கிறார். ”முதல்வர் விஜய்யை பொறுத்தவரை அரசை நேர்மையாக நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அதனால்தான் செந்தில்குமார் ஐஏஎஸ்-ஐ தனது தனி செயலாளராக நியமித்துள்ளார். அடுத்து அஸ்ரா கார்கை உளவுத்துறை ஐஜியாக நியமித்துள்ளார் ” என்கிறார்கள் முதல்வரை சுற்றியுள்ளவர்கள்.
