மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை (Vaiko) அவரது இல்லத்தில் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரும் தவெக பொதுச்செயலாளருமான ஆதவ் அர்ஜூனா (Adhav Arjuna) இன்று (ஜூன் 16) சந்தித்து பேசினார்.
திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த மதிமுக சட்டசபை தேர்தலில் 4 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. இதில் சீர்காழி மற்றும் கடையநல்லூர் தொகுதிகளில் மதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் முதல்வர் விஜய் அரசுக்கு திமுகவின் கூட்டணி கட்சிகளாக இருந்த காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை ஆகியவை ஆதரவளித்துள்ளன. காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக் ஆகியவை முதல்வர் விஜய் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளன.
மதிமுகவும் திமுகவை தற்போது விமர்சித்து வருகிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதன்மை செயலாளர் துரை வைகோ, மதிமுக அவைத் தலைவர் அர்ஜூன ராஜ் உள்ளிட்டோர் திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ”திமுகவுடன் இனி ஒட்டும் இல்லை; உறவும் இல்லை; திமுக ஒரு நச்சுப் பாம்பு” என அர்ஜூன ராஜ் விமர்சித்திருந்தார்.
மேலும் திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? இல்லையா? என்பது ஜூன் 27-ந் தேதி கூடும் அக்கட்சியின் பொதுக் குழுவில் முடிவெடுக்கப்பட இருக்கிறது.
ஆதவ் அர்ஜூனா சந்திப்பு குறித்து வைகோ (Vaiko)



இந்த நிலையில் வைகோவை, அமைச்சர் ஆதவ் அர்ஜூனா இன்று சந்தித்து பேசினார்.
இச்சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள வைகோ, “ தமிழக பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் தம்பி ஆதவ் அர்ஜூனா இன்று எனது அண்ணாநகர் இல்லத்தில் என்னை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்” என தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பு தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தமது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாட்டு அரசியலின் முதுபெரும் தலைவரும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளருமான திரு. வைகோ அவர்களை இன்று அவரது இல்லத்தில் சந்தித்து, தமிழ்நாட்டின் நலன் மற்றும் சமூகநீதி அரசியல் பற்றிக் கலந்துரையாடினோம்” என தெரிவித்துள்ளார்.
