தமிழகத்தில் போக்குவரத்து துறை மின்சாரத் துறை போன்ற முக்கிய துறைகள் வருவாய் இழப்பை சந்தித்து வருவதாக நிதி அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற விஜய் தமிழகத்தின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
அந்த வகையில் ஆட்சிப் பொறுப்பேற்று 46 நாட்களுக்குப் பிறகு இன்று நிதியமைச்சர் மரிய வில்சன் வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்.
அப்போது அவர், தமிழ்நாடு போக்குவரத்து துறைக்கு 72 ஆயிரத்து 667 கோடி ரூபாய் மொத்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
போக்குவரத்து துறையில் ஒரு பேருந்தை ஒரு கிலோமீட்டர் இயக்குவதற்கு தமிழக அரசுக்கு, எரிபொருள், ஓட்டுநர், நடத்துனர் செலவு, பேருந்து செலவினம் என ரூ.78.81 ரூபாய் செலவாகிறது. அதேசமயம் அரசுக்கு ரூ.25.97 வருவாய் மட்டுமே கிடைக்கிறது.
அந்த வகையில் ஒரு கிலோ மீட்டர் தொலைவுககு பேருந்துகளை இயக்க ஒவ்வொரு பேருந்துக்கும் கிட்டத்தட்ட ரூ.52.84 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.

2020 -21 முதல் 2025- 26 வரை மொத்த செலவுகள் இரு மடங்காக உயர்ந்துள்ளன. அதேசமயம் 2019-20 நிலையை ஒப்பிடுகையில் செயல்பாட்டு வருவாய் 13 சதவிகிதம் குறைந்துள்ளது என்று வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று மின்வாரிய குழுமம் 2,47,130 கோடி ரூபாய் கடனில் உள்ளதாகவும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நடப்பு மூலதன கடன் 27,181 கோடி என்றும், குடிநீர் வழங்கல் வாரியத்தின் கடன் 7776 கோடி ரூபாய் என்றும் நிதிநிலை அறிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
