கோவைக்கு தமிழக அரசு அறிவித்துள்ள மாஸ்டர் பிளானில் , பெரிய பிசினஸ் பிளானே மறைந்துள்ளதாகவும், நகரின் தொழில் வளர்ச்சிக்கு இது உறுதுணையாக இருக்கும் என தொழில் முனைவோர் கருதுகின்றனர். Coimbatore
கோவை பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்த மாஸ்டர் பிளானை தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அந்த இரண்டாவது மாஸ்டர் பிளானில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன குறிப்பாக அதில் வரும் 2041 ஆம் ஆண்டில் கோவை மாநகரின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு ஓட்டல்களின் வளர்ச்சியும் கணக்கிடப்பட்டுள்ளது.
கோவை மாநகரம் தொழில் நகரம் மட்டுமின்றி சுற்றுலா மையமாகவும் இருந்து வருகிறது. தொழில் நிமித்தமாகவும், சுற்றுலா நிமித்தமாகவும் பல்வேறு வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் கோவை வந்து செல்கின்றனர். வால்பாறை, டாப்ஸ்லீப், நீலகிரி, ஆழியாறு, பொள்ளாச்சி என ஏராளமான சுற்றுலா மையங்கள் இங்கு கொட்டிக் கிடக்கின்றன. இது தவிர முக்கிய தொழில் கேந்திரமாகவும் கோவை இருக்கும் நிலையில் கடந்த ஆண்டில் மட்டும் கோவை மாவட்டத்திற்கு 77.6 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய சூழலில் கோவை மாவட்டத்தில் மூன்றாயிரம் ஹோட்டல்கள் மட்டும் இருக்கும் நிலையில் 2041 ஆம் ஆண்டில் இதன் தேவை 12,112 ஹோட்டல்களாக இருக்கும் என கோவை மாஸ்டர் பிளானில் கணக்கிடப்பட்டுள்ளது.
கோவை மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களின் பட்டியலில் இருந்து வரும் நிலையில் நகரின் வளர்ச்சியும் விரிவடைந்து வருகிறது. அவிநாசி சாலை, பாலக்காடு சாலை, சத்தியமங்கலம் சாலை, பொள்ளாச்சி சாலை என முக்கிய சாலைகள் அனைத்தும் விரிவடைந்து வரும் நிலையில், கட்டுமான நிறுவனங்களின் பிரம்மாண்டமான ப்ராஜெக்ட்களும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. மேற்கு புறவழிச் சாலையும் அமைக்கப்பட்டு வருவதன் காரணமாக கோவை நகரின் அனைத்து பகுதிகளும் விரைவாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய நிலையில் ஹோட்டல்களின் எண்ணிக்கையும் மூன்று மடங்காக அதிகரிக்க வேண்டிய தேவை இருக்கிறது என்பதை மாஸ்டர் பிளான் மூலம் தமிழக அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
மூன்று மடங்காக ஹோட்டல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பொழுது அதற்கேற்ற வேலை வாய்ப்புகள் ஏற்படுவதுடன், தரமான தங்குமிட வசதிகளும் சுற்றுலா பயணிகளுக்கும், வெளி மாநிலத்திலிருந்து இங்கு வருபவர்களுக்கும் ஏற்படுத்தி கொடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த 15 ஆண்டுகளில் கோவைக்கு மாஸ்டர் பிளான் மூலம் ஒரு மெகா பிசினஸ் பிளானையும், அதன் மூலம் ஏற்பட இருக்கும் வளர்ச்சி, கட்டமைப்பு மேம்பாட்டையும் தற்போதே கவனத்தில் கொண்டு மாஸ்டர் பிளான் தமிழக அரசால் கவனத்தில் எடுத்து கொள்ளப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.