மகாராஷ்டிரா மாநிலத்தில் வரலாறு காணாத பெருமழை கொட்டித் தீர்க்கிறது. மும்பையில் 24 மணிநேரத்தில் 30 செ.மீ மழை வெளுத்தெடுத்ததால் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கிப் போனது. மும்பை பெருமழை வெள்ளத்தில் சிக்கி 21 பேர் பலியாகினர்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து வந்தது வானிலை ஆய்வு மையம். மும்பை, தானே, ரத்னகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர் மழை கொட்டித் தீர்க்கிறது.
மும்பை மாநகரத்தில் 24 மணிநேரத்தில் 30 செ.மீ மழை கொட்டியதால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மும்பை மாநகரில் ரயில், விமானப் போக்குவரத்து அனைத்தும் பாதிக்கப்பட்டன. மும்பையில் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கிப் போனது. இதனால் அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
மும்பை பெருமழையால் ரயில் போக்குவரத்து சுமார் 8 மணிநேரம் நிறுத்தப்பட்டது. மும்பை சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. 11 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன; சில விமான சேவைகள் திருப்பிவிடப்பட்டன. m
அந்தரத்தில் நின்ற மோனோ ரயில் – 500 பேர் மீட்பு
மும்பை வடலாவில் இருந்து செம்பூர் நோக்கி கொட்டும் மழையிலும் சென்ற மோனோ ரயில் திடீரென அந்தரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பழுதாகி நின்றது. இதனால் பயணிகள் அலறித் துடித்தனர். மூச்சு திணறல் ஏற்பட்டு கதறி அழுதனர். உடனடியாக தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று ஜன்னல்களை உடைத்து பயணிகளை காப்பாற்றினர். மும்பை மோனோ ரயிலில் சிக்கிய 500 பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
மும்பையில் இன்றும் கனமழை கொட்டும் என ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த் பெருமழை வெள்ளத்தில் சிக்கி 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
