60 எம்.எல்.ஏக்களை தொடர்ந்து 20 எம்.பி.க்கள் ‘கலக’ குரல்.. டெல்லியில் மமதா பானர்ஜி ’டேரா’!

Published On:

| By Mathi

20 TMC MPs Revolt: Mamata Banerjee Camps in Delhi

மேற்கு வங்காளத்தில் 15 ஆண்டுகால கோட்டையை இழந்த அதிர்ச்சியிலிருந்து திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சி மீள்வதற்குள், டெல்லியில் அக்கட்சியின் எம்.பி.க்களும் மமதா பானர்ஜிக்கு எதிராக கலகக் குரல் எழுப்புகின்றனர். உட்கட்சிப் பூசல் மற்றும் எம்பிக்களின் போர்க்கொடிக்கு மத்தியில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான மமதா பானர்ஜி ஞாயிற்றுக்கிழமை டெல்லி சென்றார்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 207 இடங்களைக் கைப்பற்றி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றது. இதன் மூலம் சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜக அரசு அம்மாநிலத்தில் புதிய ஆட்சியை அமைத்துள்ளது.

ADVERTISEMENT

80 இடங்களில் மட்டும் வெற்றி

அதேசமயம், ஆளும் கட்சியாக இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெறும் 80 இடங்களில் மட்டுமே வென்றது. முதல்வராக இருந்த மமதா பானர்ஜியே பவானிபூர் தொகுதியில் தோல்வியடைந்தார். இந்தத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, மமதாவின் மருமகனும் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவருமான அபிஷேக் பானர்ஜிக்கு எதிராக கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் எம்பிக்கள் பகிரங்கமாக அதிருப்தி தெரிவிக்கத் தொடங்கினர்.

60 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி

மேற்கு வங்க சட்டமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 80 எம்எல்ஏக்களில், 60 பேர் அதிருப்தி குழுவாகப் பிரிந்து, அபிஷேக் பானர்ஜிக்கு எதிராக சட்டமன்ற குழுத் தலைவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். மமதா தரப்பில் தற்போது 20 எம்எல்ஏக்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர்.

ADVERTISEMENT

இதே ‘கொல்கத்தா மாடலை’ டெல்லி நாடாளுமன்றத்திலும் அரங்கேற்ற திரிணாமுல் காங்கிரஸின் அதிருப்தி எம்பிக்கள் காய் நகர்த்தி வருகின்றனர்.

நாடாளுமன்றத்திலும்..

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நாடாளுமன்ற பலம்:

ADVERTISEMENT
  • மக்களவை- 28 எம்பிக்கள்
  • மாநிலங்களவை 13 எம்பிக்கள்

டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் இன்று மமதா பானர்ஜி பங்கேற்க இருக்கிறார். அதே நேரத்தில் திரிணாமுல் காங்கிரஸின் 20க்கும் மேற்பட்ட அதிருப்தி எம்பிக்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் தங்களை தனிக்குழுவாக அங்கீகரிக்க மனு கொடுக்க உள்ளனர்.

அரசியல் சட்டத்தின் 10-வது அட்டவணையின்படி (Anti-Defection Law), ஒரு கட்சியில் இருந்து உறுப்பினர்கள் பிரிந்து சென்று தகுதி நீக்கத்தில் இருந்து தப்பிக்க வேண்டுமானால், அவர்களுக்கு மூன்றில் 2 பங்கு (2/3) உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

ஆம் ஆத்மி மாடல்

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் ராகவ் சதா தலைமையில் 7 மாநிலங்களவை எம்பிக்கள் அண்மையில் பாஜகவில் இணைந்தனர். ஆம் ஆத்மி கட்சியின் மொத்தமுள்ள 10 மாநிலங்களவை எம்பிக்களில் மூன்றில் 2 பங்கு எம்.பி.க்கள் பிரிந்து சென்று பாஜாகவில் இணைந்தனர். இதன் மூலம் ஆம் ஆத்மியின் பலம் 3 ஆகக் குறைந்தது. இந்த ‘மாடலை’ தான் இப்போது திரிணாமுல் அதிருப்தியாளர்களும் கையில் எடுத்துள்ளனர்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில், தகுதி நீக்கத்தில் இருந்து தப்பிக்க 19 எம்பிக்கள் தேவை. அதிருப்தி முகாமில் 20 எம்பிக்கள் தங்களோடு இருப்பதாகக் கூறுகின்றனர். ஆனால், மமதா தரப்போ குறைந்தது 16 எம்பிக்கள் தங்களோடு உறுதியாக இருப்பார்கள் என நம்புகிறது.

மாநிலங்களவையில் தகுதி நீக்கத்தைத் தவிர்க்க 9 எம்பிக்கள் தேவை. மாநிலங்களவையிலும் அபிஷேக் பானர்ஜிக்கு எதிராக அதிருப்தி அலை வீசுவதாக எம்பி சுகேந்து சேகர் ராய் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனிடையே டெல்லி வந்திறங்கிய மமதா பானர்ஜி மற்றும் அபிஷேக் பானர்ஜி, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்துப் பேசினர். ஏற்கனவே தனது எம்பிக்களைப் பறிகொடுத்துப் பரிதவிக்கும் கெஜ்ரிவாலிடம், இந்த எம்பிக்கள் பிளவை எவ்வாறு சட்டரீதியாக எதிர்கொள்வது என்பது குறித்து மமதா ஆலோசித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தை நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லவும் திரிணாமுல் காங்கிரஸ் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வருகிறது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share