மேற்கு வங்க மாநிலத்தில் (West Bengal) திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் (TMC) 58 எம்.எல்.ஏ.க்கள், தாங்களே “உண்மையான திரிணாமுல் காங்கிரஸ்” கட்சி என அங்கீகரிக்கக் கோரி சபாநாயகரிடம் மனு கொடுத்துள்ளனர். அத்துடன், இந்த 58 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு பெற்றவரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவருமான ரிதாப்ரதா பானர்ஜியையே சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக சபாநாயகர் அறிவித்துள்ளது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் 15 ஆண்டுகாலம் தொடர்ந்து ஆட்சியை நடத்திய மமதா பானர்ஜியின் (Mamata Banerjee) திரிணாமுல் காங்கிரஸ், இந்தத் தேர்தலில் பெரும் தோல்வியைத் தழுவியது. இம்மாநிலத்தில் முதல் முறையாக பாஜக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
மேற்கு வங்கத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தோல்வியடையக் காரணமே, மமதா பானர்ஜியின் அண்ணன் மகனும் (Nephew) கட்சியின் தேசிய பொதுச் செயலாளருமான அபிஷேக் பானர்ஜிதான் என்பது அக்கட்சியின் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மூத்த தலைவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. அபிஷேக் பானர்ஜியின் தன்னிச்சையான செயல்பாடுகள்தான் கட்சியின் படுதோல்விக்குக் காரணம் என அவர்கள் கொதித்து வந்தனர்.
இதனிடையே, கட்சியை அடிமட்டத்திலிருந்து சீரமைக்கும் நோக்கில், திரிணாமுல் காங்கிரஸின் அனைத்துக் குழுக்களையும் மமதா பானர்ஜி அதிரடியாகக் கலைத்து உத்தரவிட்டிருந்தார். அதேநேரத்தில், மமதா பானர்ஜி அவசரமாகக் கூட்டிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைப் பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்தனர்.
தொடர்ந்து, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக மூத்த தலைவர் சோவன்தேவ் சட்டோபாத்யாயாவைத் தேர்வு செய்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைமை சபாநாயகருக்கு அனுப்பி வைத்தது. ஆனால், அதற்குள் அதிரடி திருப்பமாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 58 எம்.எல்.ஏ.க்கள், “நாங்கள் ரிதாப்ரதா பானர்ஜியை சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்வு செய்துள்ளோம்; நாங்கள்தான் உண்மையான திரிணாமுல் காங்கிரஸ்” என்று சபாநாயகரிடம் மனு கொடுத்தனர். மேற்கு வங்க மாநில சபாநாயகர் ரதிந்திர போஸும் இதனை ஏற்றுக்கொண்டு, ரிதாப்ரதா பானர்ஜியை அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரித்துள்ளார்.
கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக மமதா பானர்ஜியால் கட்சியை விட்டு நீக்கப்பட்ட ஒருவரை, சபாநாயகர் எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரித்திருப்பது மமதா பானர்ஜிக்குக் கிடைத்த மிகப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில், “நாங்கள் மமதா பானர்ஜியை எதிர்க்கவில்லை; அவரே எங்களது முதன்மை ஆலோசகராக (Prodhan Poramorshodata) நீடிக்க வேண்டும்” என்றும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தியுள்ளனர். இதன் மூலம், அண்ணன் மகன் அபிஷேக் பானர்ஜியின் பிடியிலிருந்து மமதா பானர்ஜியை “மீட்கும்” முயற்சியாகவே தங்களின் இந்த அதிருப்திப் போக்கை அவர்கள் சித்தரித்து வருகின்றனர்.
