சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 121 கிலோ தங்க ஆபரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
உலகின் பணக்கார கோயிலாக கருதப்படுகிறது திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயில்.
இங்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
அப்படி வரும் பக்தர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு காணிக்கை செலுத்துவார்கள்.
கடந்த 2025 – 26 ஜூலை வரையிலான காலகட்டத்தில் 1738 கோடி ரூபாயை உண்டியல் மூலம் காணிக்கையாக பெற்றுள்ளது திருப்பதி ஏழுமலையான் கோயில் தேவஸ்தானம்.
இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் வர்தமன் ஜெயின் 121 கிலோ எடை கொண்ட தங்க நகைகளை இன்று (நவம்பர் 26) நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இதையொட்டி திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான லாரியில் பெட்டி பெட்டியாக தங்க நகைகள் நேற்று வந்து இறங்கின.
அவற்றை இன்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்னிலையில் கோயில் நிர்வாகம் பெற்றுக்கொண்டது.
இதன் மொத்த மதிப்பு 160 கோடியிலிருந்து 200 கோடி ரூபாய் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த காணிக்கையில் மொத்தம் 45 தங்க ஆபரணங்கள் இடம் பெற்றுள்ளன. இவை ஒன்பது தொகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏழுமலையான் மற்றும் உற்சவம் மூர்த்திகளுக்கு அணிவிப்பதற்காக பிரத்தியேகமாக இந்த ஆபரணங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
சீனிவாச பெருமாளுக்கான கிரீடம், பத்ம பாதங்கள் எனப்படும் தாமரை வடிவிலான பாத அணிகலன்கள் உள்ளிட்ட பாரம்பரிய ஆபரணங்கள் இடம்பெற்றுள்ளன.
இடுப்பு பட்டை, தோள்பட்டை அணிகலன்கள், சங்கு, அபய ஹஸ்தம் எனப்படும் கைகளுக்கான அணிகலன்கள் உள்ளிட்டவை இதில் அடங்கும்.
இந்த நகைகள் எல்லாம் சென்னையைச் சேர்ந்த ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் நிறுவனம் மூலம் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. பின்னர் பலத்த பாதுகாப்புடன் திருமலைக்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்த ஆபரணங்களை பார்வைக்கு வைப்பதற்காக ரங்கநாயகுல மண்டபத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருப்பதி கோயில் வரலாற்றில் தனிநபர் ஒருவர் வழங்கும் மிகப்பெரிய காணிக்கை இதுவாகும்.
யார் இந்த வர்தமன் ஜெயின்?
சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர். லயோலா கல்லூரியில் இளங்கலை பட்டம் பயின்றுள்ளார். பின்னர் அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.
மருத்துவத் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் சர்வதேச அளவில் தொழில் செய்து வருகிறார்.
மருத்துவத்துறைக்கான தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் அக்சஸ் ஹெல்த் கேர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் துணைத் தலைவராக உள்ளார்.

ஏசியா இன்ஜினியரிங் நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார்.
விஷன் ஹெல்த் சோர்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனராக உள்ளார்.
டெல் சர்வீசஸ் பிபிஓ பிரிவில் நிர்வாக இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
2025 ஆம் ஆண்டு வரதமன் ஜெயின் தனது ஆக்சஸ் ஹெல்த் கேர் நிறுவனத்தின் 70% பங்குகளை அமெரிக்காவை சேர்ந்த நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளார். இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் இரண்டு பில்லியன் டாலர்கள் என கூறப்படுகிறது. இந்திய மதிப்புப்படி 16,000 கோடிக்கு அதிகமாகும்.
இதிலிருந்து தான் 121 கிலோ தங்கத்தை அவர் காணிக்கையாக கொடுத்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.
இதுவரை ஏழுமலையான் கோயிலுக்கு செய்தது என்ன?
2019 முதல் தொடர்ந்து அவர் ஏழுமலையான் கோயிலுக்கு நன்கொடை அளித்து வருகிறார்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனலுக்காக 7 கோடி ரூபாய் வரை நன்கொடை, திருப்பதி தேவஸ்தான கோசாலைக்கு 5 கோடி ரூபாய் மதிப்பில் கால்நடை தீவன கலவை ஆலை, உண்டியல் காணிக்கைகளை எண்ணுவதற்கு 1 கோடி ரூபாய் மதிப்பிலான நாணயங்களை வரிசைப்படுத்தும் இயந்திரம், தேவஸ்தானத்தின் போக்குவரத்து தேவைக்காக மின்சார பேருந்துகள் ஆகியவற்றை வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.









