தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது.
தமிழகத்தில் சாலைகளை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்தவகையில் நேற்று (ஜனவரி 3) மதுரை, திருச்சி, ஈரோடு, திருப்பூர் என மொத்தம் 6 மாவட்டங்களில் பல்வேறு சாலை விரிவாக்க பணிகளுக்காக மத்திய அரசு ரூ.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்திருந்தார்.
அதில், ஈரோடு மாவட்டத்துக்கு எஸ்எச்-20ஐ இருவழிப்பாதையாக விரிவுப்படுத்துதல், மழைநீர் வடிகால் பணி மற்றும் உயர்மட்ட பாலம் அமைத்தல் ஆகியவற்றுக்காக ரூ.36.45 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், மேட்டுக்கடை-மூத்தம்பாளையம் சாலையை விரிவுப்படுத்துதல், .2 கி.மீ.க்கு தடுப்புச்சுவர் கட்டுதல் ஆகியவற்றுக்காக 6.84 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில், SH-154 ஐ அகலப்படுத்தவும், மேம்படுத்தவும் வடிகால் பணிகள், மண்டல சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் ரூ.18.29 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில், 9.4 கி.மீ தொலைவு இணைப்பை மேம்படுத்தும் வகையில், மேலத்தூர்-பத்தலப்பேட்டை சாலையை ஒற்றைப் பாதையில் இருந்து இருவழியாக விரிவுபடுத்த ரூ. 20.52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில், தர்மத்துப்பட்டி-ஆடலூர்-தாண்டிக்குதி சாலையை விரிவுபடுத்தவும், பலப்படுத்துதல், கால்வாய் புனரமைப்பு மற்றும் தடுப்புச்சுவர் கட்டுதல், 4.4 கி.மீ.க்கு பாதுகாப்பான மற்றும் திறமையான போக்குவரத்தை உறுதி செய்யதல் ஆகியவற்றுக்காக ரூ. 5.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய சாலை நிதி திட்டத்தின் கீழ் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.
அதைத்தொடர்ந்து, நேற்று மாலை 6 மணிக்கு திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கான சாலை திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்திருந்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில், இரண்டு உயர்மட்டப் பாலங்கள் கட்டுவதற்கு ரூ. 22.57 கோடியும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 உயர்மட்ட பாலங்களுக்கு ரூ.30.59 கோடியும்,
விழுப்புரம் மாவட்டத்தில், ஒலக்கூர் ரயில்வே ஃபீடர் சாலையில் உயர்மட்ட பாலம் அமைக்கவும், ஏற்கனவே உள்ள தரைப்பாதையை மாற்ற ரூ.12.14 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று (ஜனவரி 4) மீண்டும் திருப்பூர் உட்பட மூன்று மாவட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
அதில், திருப்பூர் மாவட்டம், பொள்ளாச்சி-தாராபுரம்-கரூர் சாலையிலும், ஈரோடு-முத்தூர்-வெள்ளக்கோவில்-புதுப்பையில் சாலையிலும் என இரு மேம்பாலங்கள் அமைக்க 9.22 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில், கன்னங்குடி சாலை வழியாக தேவகோட்டை-புதுக்கோட்டை மாவட்ட எல்லைச் சாலையில் உயர்மட்ட பாலம அமைக்க, 8.26 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில், போக்குவரத்து உள்கட்டமைப்பை உறுதி செய்வதற்காக, கொடுக்கூர்-காடுவெட்டி சாலையில் மேம்பாலம் கட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்காக 5.89 கோடியும்,
ராமநாதபுரம் மாவட்டத்தில், உப்பூர்-கோட்டையூர் சாலை, திருவாடனை பட்டினம் சாலை என இரு மேம்பாலங்கள் அமைக்க ரூ. 19.47 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில், முதுகளத்தூர்-வீரசோழன் சாலையில் உயர்மட்டப் பாலம் கட்டுவதற்கு ரூ10.64 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளார்.
மொத்தமாக 12 மாவட்டங்களுக்கு 176 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது மத்திய அரசு.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
“ஒரு மணி நேரமாக செப்டிக் டேங்கில் கிடந்த குழந்தை” : விழுப்புரத்தில் நடந்தது என்ன?