“ஒரு மணி நேரமாக செப்டிக் டேங்கில் கிடந்த குழந்தை” : விழுப்புரத்தில் நடந்தது என்ன?

Published On:

| By Kavi

விழுப்புரத்தில் பள்ளி சிறுமி செப்டிக் டேங்கில் விழுந்து ஒரு மணி நேரத்துக்கு பின்னரே மீட்கப்பட்டது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் செயின்ட் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த பழனிவேல் – சிவசங்கரி தம்பதியினரின் மூத்த மகள் லியோ லட்சுமி (வயது 4) எல்.கே.ஜி படித்து வந்தார்.

வழக்கம் போல் நேற்று (ஜனவரி 3) சிறுமியின் பெரியம்மா, தனது பிள்ளையையும் லியோ லட்சுமியையும் பள்ளிக்கு அழைத்து சென்று விட்டுவிட்டு வந்தார். லியோ லட்சுமியும் பெரியம்மாவுக்கு டாட்டா காண்பித்து விட்டு வகுப்பறைக்கு வந்தார்.

இந்தநிலையில் தான் பள்ளியிலேயே சிறுமி உயிரிழந்துள்ளார். பள்ளியில் இருந்த செப்டிக் டேங்கில் விழுந்து உயிரிழந்ததாக பள்ளி நிர்வாகம் கூறுகிறது. துரு பிடித்து, மறித்து போயிருந்த செப்டிக் டேங்க் மூடி மீது ஏறியதில், சிறுமி உள்ளே விழுந்திருக்கிறார்.

இதனையடுத்து பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களின் பெற்றோர்களுக்கும் “எமர்ஜென்சி.. உங்கள் பிள்ளைகளை வந்து அழைத்துச் செல்லுங்கள்” என்று பள்ளி நிர்வாகம் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது.

இதையடுத்து லியோ லட்சுமியின் பெரியம்மா உள்ளிட்டோர் பள்ளிக்குச் சென்ற போது அங்கு வந்திருந்த பெற்றோர்கள்… யாரோ ஒரு குழந்தை செப்டிக் டேங்க் உள்ளே விழுந்து இறந்துவிட்டது என்று பேசிக் கொண்டிருந்துள்ளனர்.

இதனையடுத்து, பள்ளிக்கு சென்ற லியோ லட்சுமியின் பெற்றோருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தங்கள் பிள்ளை எங்கே என்று கேட்டபோது குழந்தை உயிரிழந்துவிட்டது என்று கூறியிருக்கின்றனர்.

தொடர்ந்து அந்த பள்ளியில் படிக்கும் மற்ற மாணவர்களின் பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். “ செப்டிங் டேங்க்ல பிள்ளை விழுந்துருச்சுனு சொல்றாங்க… இதுக்குள்ளதான் குழந்தை விழுந்துச்சுனு முதல்ல நிர்வாகத்துக்கு எப்படி தெரியும்?

யார் குழந்தையை தூக்கினது? பெற்றோருக்கு தாமதமாக தகவல் தெரிவித்தது ஏன்? இதை எல்லாம் பள்ளி நிர்வாகம் விளக்கமாக கூற வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர்.

அந்த பள்ளி பேருந்து ஓட்டுநர் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “செப்டிக் டேங்க்குல பிள்ளை விழுந்துருச்சுன்னு கூப்டாங்க… அங்கு, போய் பார்த்தபோது ஒரு ஷூ மட்டும் மிதந்துச்சு.. அப்போது குச்சி, இரும்பு கம்பியை உள்ளே விட்டு அலசி பார்த்தபோது, குழந்தை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் குழந்தையின் டிரஸ்ஸில் கம்பியை மாட்டி மேலே தூக்கினோம்” என்று கூறினார்.

இந்நிலையில், குழந்தையின் தந்தை பழனிவேல், “என் குழந்தை இயற்கையான முறையில் இறக்கவில்லை. இதில் சந்தேகம் உள்ளது” என விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். செப்டிக் டேங்க் அருகே கிடந்த குழந்தையின் உள்ளாடை நனையாமல் காய்ந்த நிலையில் இருந்ததாகவும் பெற்றோர்கள் சந்தேகம் எழுப்பினர்.

இந்த புகாரின் அடிப்படையில் விக்கிரவாண்டி போலீசார் சந்தேகம் மரணம், பணியில் நிர்வாக கவன குறைவு ஆகிய பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இதுகுறித்து விழுப்புரம் காவல்துறை வட்டாரத்தில் நாம் கேட்டபோது,
“குழந்தை பாத்ரூம் போக வேண்டும் என்று சொல்லி ஒரு ஆயம்மாவை அழைத்துக்கொண்டு சென்றிருக்கிறது. அவர் குழந்தையை பாத்ரூமில் விட்டுவிட்டு சென்றுவிட்டார்.

இந்நிலையில், பாத்ரூமில் இருந்து வெளியே வந்த குழந்தை மறித்துபோன செப்டிக் டேங்க் மூடி மேலே ஏறியதால் அது உடைந்து விழுந்தது. அப்போது குழந்தையும் உள்ளே விழுந்து உயிருக்கு போராடி கத்தியுள்ளது.

சுமார் ஒரு மணி நேரமாக செப்டிக் டேங்கிற்குள் மூழ்கி கிடந்த நிலையில், அதன் பிறகுதான் வகுப்பு ஆசிரியர், லியோ லட்சுமியை காணவில்லை என்று பள்ளி வளாகத்தில் தேடியிருக்கிறார்.

அப்போது செப்டிக் டேங்க் மூடி உடைந்து ஒரு ஷூ மட்டும் உள்ளே கிடந்ததை பார்த்த ஆசிரியர், பள்ளி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.

பின்னர் குழந்தையை மேலே தூக்கியதும் குழந்தை இறந்துபோனது தெரியவந்தது. எனினும் பெரிய பிரச்சினை ஆகிவிடும் என்று பயந்த பள்ளி நிர்வாகத்தினர் குழந்தை உயிருடன் இருப்பதுபோலவே, ஆம்புலன்சை வரவழைத்து மருத்துவமனைக்கு தூக்கி சென்றிருக்கின்றனர்.

ஆனால், மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்திருக்கிறது. இறந்த குழந்தையைத்தான் தூக்கி வந்துள்ளீர்கள் என்று கூறியிருக்கின்றனர். அதன்பின் தான் போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது” என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தில்.

குழந்தையின் உடல் முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, இன்று காலை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சிறுமியின் தந்தை பழனிவேல் தனது குழந்தையின் உடலை கட்டி அணைத்து, “எழுந்திரும்மா… அப்பாவோட வீட்டுக்கு வந்துரும்மா” என கண்ணீர்விட்டு கதறும் காட்சி பார்ப்பவர்களின் மனதை சோகத்தில் ஆழ்த்தியது.

இறுதி அஞ்சலிக்காக குழந்தையின் உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில், வனத்துறை அமைச்சர் பொன்முடி, விக்கிரவாண்டி எம்.எல்.ஏ அன்னியூர் சிவா உள்ளிட்டோர் அங்கு சென்றனர்.

அப்போது, முதல்வர் அறிவித்த ரூ.3 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் பொன்முடி, சிறுமியின் தாயார் சிவசங்கரியிடம் வழங்கினார். அதை சிவசங்கரி வாங்க மறுத்தார்.

உடனே அருகில் இருந்த சிறுமியின் பெரியம்மா, குழந்தையின் இறப்புக்கு அமைச்சரிடம் நியாயம் கேட்டார்.

அவர் அமைச்சரிடம் கூறுகையில், “ காலைல 9 மணிக்கு லியோ லட்சுமிய ஸ்கூல விட்டுட்டு வந்தேன். டாடா சொல்லிட்டு க்ளாஸுக்கு போனா. என் புள்ளையும் இதே ஸ்கூல்லதான் 1ஆம் வகுப்பு படிக்கிறா… லியோ எல்.கே.ஜி படிக்கிறா. நேற்று மதியம் 3.09 மணிக்கு 1ஆம் வகுப்பு மிஸ் என் செல்லுக்கு மெசேஜ் அனுப்பினாங்க. ஸ்கூல்லாம் லாக் பண்ணியாச்சு சீக்கிரம் வந்து உங்க பொண்ண கூட்டிட்டு போங்கனு சொல்லியிருந்தாங்க.

அந்த மெசேஜ் கூட லியோ கிளாஸ் மிஸ் பண்ணல. 3.25க்கு பிள்ளைங்கள கூப்பிட போனேன். எல்.கே.ஜி லியோ லட்சுமி எங்கேனு கேட்டேன். அப்ப மிஸ் என்ன சொல்லனும், இது மாதிரி பாப்பா விழுந்து இறந்துடுச்சுனு சொல்லனுமா… இல்லையா… சொல்லவே இல்லை.

11 மணிக்கு சம்பவம் நடந்ததாக சொல்றாங்க… நியூஸ் எல்லாம் ஓடுது… ஆனால் எங்க புள்ளதானு எங்களுக்கு தெரியாம போச்சு” என்று கதறி அழுதார்.

தொடர்ந்து சிறுமியின் தாயாரிடம், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறோம் என்று ஆறுதல் கூறிய அமைச்சர் பொன்முடி, காசோலையை வாங்கிக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

ஆனால் தாயார் சிவசங்கரி, “யாருக்கு சார் வேணும் உங்க காசு. ஒரு கோடி கொடுத்தாலும் என் புள்ள வருமா… தவமா தவமிருந்து பெத்தேனே… எனக்கு இந்த பணம் வேண்டவே வேண்டாம்” என்று வாங்க மறுத்த போது, அருகில் இருந்த உறவினர் ஒருவர் அந்த காசோலையை வாங்கி சிவசங்கரியின் கையில் கொடுத்தார்.

அதையும் அங்கிருந்து அமைச்சர் கிளம்பிய அடுத்தநொடி, சிறுமி வைக்கப்பட்டிருந்த ஐஸ் பெட்டி மீது வீசிவிட்டார் சிவசங்கரி. இவருக்கு ஒரு மாதத்துக்கு முன்னர்தான் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் வேளையில் மூத்த பிள்ளையை பறிகொடுத்த சோகத்தில் மூழ்கியுள்ளது லியோ லட்சுமியின் குடும்பம்.

இதற்கிடையே, சிறுமி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பள்ளி தாளாளர் எமில்டா, பள்ளி முதல்வர் டோம்னிக் மேரி மற்றும் வகுப்பாசிரியர் ஏஞ்சல் மேரி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் இன்று (ஜனவர் 4) விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டோமோனிக் மேரி ஆகியோரை வரும் ஜனவரி 10ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், காவல்துறை முக்கிய அறிவுறுத்தல்களை பள்ளி நிர்வாகங்களுக்கு வழங்கியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி பொறுப்பாளர்களும் தங்களது பள்ளி வளாகங்களில் உள்ள கழிவுநீர் தொட்டிகள், குடிநீர் தொட்டிகள், கிணறுகள், கழிவறைகள், தரைதள நீர்தேக்க தொட்டிகள், சுற்றுசுவர், அடுக்குமாடி கட்டிடங்களின் வராண்டாவிலுள்ள கைப்பிடி சுவர்கள் முதலியவற்றின் உறுதி தன்மையினை சுயஆய்வு செய்து தங்களது கல்வி நிலையங்களின் அனைத்து இடங்களையும் சுத்தம் செய்து குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

அதுபோன்று பெற்றோர்கள், மூன்று மாதத்துக்கு ஒருமுறையாவது பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். எல்.கே.ஜி. யு.கே.ஜி பிள்ளைகள் பாத்ரூம் போகும் போது உடன் ஒரு ஆயம்மா கண்டிப்பாக போக வேண்டும். அனைத்து பிள்ளைகளும் வகுப்பறையில் இருக்கிறார்களா என அடிக்கடி உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா, வணங்காமுடி

14 வயது மனைவி டெலிவரிக்காக அட்மிட் : 17 வயது சிறுவன் மீது போக்சோ வழக்கு!

’தமிழக அரசுக்கு எதிராக போராட வேண்டியிருக்கும்’ : திமுகவுக்கு சிபிஎம் தலைவர்கள் எச்சரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel