கோவையில் கொடூரம்: கடத்தப்பட்ட 10 வயது சிறுமி சடலமாக மீட்பு; நள்ளிரவில் உறவினர்கள் போராட்டம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Coimbatore

சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த பள்ளபாளையம் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர், நேற்று (மே 22) மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போனார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியைப் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இரவில் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

ADVERTISEMENT

பெற்றோரின் புகாரைத் தொடர்ந்து சூலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

சடலமாகக் கண்டெடுப்பு:

இந்நிலையில், கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள குளக்கரையில் சிறுமியின் சடலம் கிடப்பதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சிறுமியின் உடலைக் கைப்பற்றி கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

ADVERTISEMENT

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பின்னர் கொலை செய்யப்பட்டுக் குளத்தில் வீசப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்த நிலையில் அதுகுறித்து போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டனர்.

அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், சந்தேகத்தின் பேரில் இருவரைப் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இச்சம்பவம் தொடர்பாகப் போக்சோ (POCSO) சட்டப் பிரிவுகளின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

காவல் நிலையம் முற்றுகை:

சந்தேக நபர்கள் இருவர் பிடிபட்ட தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோரும் உறவினர்களும், கைது செய்யப்பட்டவர்களைத் தங்களிடம் காட்ட வேண்டும் என்று வலியுறுத்தி சூலூர் காவல் நிலையம் முன்பாகத் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி சாலையில் 3 மணி நேரத்திற்கும் மேலாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதன்பின், காவல்துறையினர் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். உறவினர்கள் போராட்டத்தை கைவிட மறுத்த நிலையில் நள்ளிரவிலும் போராட்டம் தொடர்கிறது. இதன் காரணமாக அப்பகுதி வழியாக செல்லும் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. போராட்டம் தொடர்வதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இச்சம்பவம் குறித்து பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே, கண்ணம்பாளையம் பேரூராட்சியில் 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டு, உடல் வீசப்பட்டுள்ள மனிதநேயமற்ற கொடூரச் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. ஒரு குழந்தையை இப்படி படுகொலை செய்துள்ள மிருகத்தனமான குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசு மற்றும் காவல்துறையை வலியுறுத்துகிறேன்.

கடந்த திமுக ஆட்சியில் நிலவிய அதே பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பற்ற சூழல் தற்போதும் தொடர்வது கவலைக்குரியது. தவெக அரசு ஆட்சிக்கு வந்து சுமார் இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. பதவியேற்பு வைபவங்களுக்கு மத்தியில், முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கான தீவிரமான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டிய சூழலில் இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளர். அவர் தனது எக்ஸ் பதிவல், கோவை மாவட்டம், சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில், 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் மன வேதனையும் அடைந்தேன்.

பெற்றெடுத்த குழந்தைச் செல்வத்தைப் பிரிந்து வாடும் அச்சிறுமியின் குடும்பத்திற்கு எனது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இக்கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்ட கொடுங்குற்றவாளிகள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பில் இப்புதிய அரசு சிறப்பு கவனம் செலுத்திட வேண்டும் என்றும், கடந்த திமுக ஆட்சியில் நடைபெற்றக் கொடூரச் சம்பவங்கள் மீண்டும் நிகழாதவண்ணம் உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share