ADVERTISEMENT

‘மயிரிழையில் உயிர் தப்பினேன் .. அந்த கொடிய நிமிடங்கள்..’ கோவை குண்டு வெடிப்பை நினைவு கூர்ந்த சி.பி.ராதா கிருஷ்ணன்

Published On:

| By Pandeeswari Gurusamy

CPR

கோவை மாநகரையே உலுக்கிய 1998-ம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் 28-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. உயிரிழந்த 58 அப்பாவி மக்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி, பேரூர் நொய்யல் படித்துறையில் விஸ்வ இந்து பரிஷத்தின் தர்ம யாத்திரா அமைப்பு சார்பில் இன்று (பிப்ரவரி 14) அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிலையில் கோவை குண்டு வெடிப்பில் மயிரிழையில் உயிர் தப்பினேன் என்று குடியரசு துணை தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “14 பிப்ரவரி 1998 அன்று கோயம்புத்தூரில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் உயிரிழந்த அப்பாவி மக்களை இந்நாளில் கனத்த மனதுடன் நினைவுகூர்ந்து எனது ஆழ்ந்த அஞ்சலியை செலுத்துகிறேன். அது நம் தேசத்தின் வரலாற்றில் மறக்க முடியாத, இருண்ட பக்கமாகும்.

ADVERTISEMENT

அன்று, திரு எல். கே. அத்வானி அவர்கள் வந்திருந்த வேளையில் நிகழ்ந்த இந்த கொடூர குண்டுவெடிப்புகள், பல குடும்பங்களின் வாழ்வில் ஆறாத காயங்களை ஏற்படுத்தி, நம் நாட்டின் மனச்சாட்சியையே உலுக்கியது. அந்த நாளின் பயமும் பதற்றமும் நிறைந்த சூழ்நிலை இன்றும் என் நினைவில் ஆறாத வடுவாகப் பதிந்துள்ளது.

அந்த குண்டு வெடிப்புகளில் ஒன்றில் அன்று நான் மயிரிழையில் உயிர் தப்பினேன். குற்றுயிரும் குலையுயிருமாய் கிடந்தவர்களை மருத்துவமனைகளில் சேர்த்து காக்க போராடிய அந்த கொடிய நிமிடங்கள் என் வாழ்வின் துயரம் மிகுந்த காலங்கள்.

ADVERTISEMENT

இந்நாளில் உயிரிழந்த ஒவ்வொரு ஆன்மாவையும் பணிவுடன் நினைவுகூர்ந்து, துயரத்தில் வாழும் குடும்பங்களுடன் ஒருமித்த உணர்வில் நின்று அவர்களது துயரங்களில் பங்கெடுத்துக் கொள்கிறேன்.

இந்நாளில், அனைவரும் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் ஒன்றுபட்டு நின்று, அமைதி, ஒற்றுமை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை காக்கும் வகையில் உறுதி எடுத்துக் கொள்வோம் .”என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share