தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், சட்டமன்றத் தேர்தலில் ‘விஜயகாந்துக்கு மவுசு – வாக்கு வங்கியா? காலச் சூழலா?’ என்ற விவாதம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், பாஜக மாநிலச் செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன், சிபிஎம் கட்சியைச் சேர்ந்த அருணன் ஆகியோர் பங்கேற்றனர். சீமானுக்கும் அருணனுக்கும் இடையேயான விவாதம் ஒருகட்டத்தில் வலுத்தது. ‘மார்க்சிஸ்ட் கட்சிக்குக் கொள்கையே கிடையாது’ என சீமான் பேச, ‘நேற்று பெரியாரிசம் பேசிவிட்டு, இன்று பெரியாரை இகழும் உங்களுக்குக் கொள்கை இருக்கிறதா?’ என, அருணன் எதிர்க் கேள்வி கேட்டார். அப்போது கோபமடைந்த சீமான், அருணனை ‘லூசாய்யா நீ…’ எனக் கேட்டார். ‘நான் லூசு இல்ல, நீதான் லூசு…’ என அருணனும் ஒருமையில் பேசினார். நிகழ்ச்சி நெறியாளரும் இந்த உரையாடலைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார். நேரலையில் ஒளிபரப்பான இந்த விவாதத்தில் கலந்துகொண்டவர்கள் உட்பட அனைவரும் இதனால் அதிர்ச்சியடைந்தனர்.
கடந்த 10 ஆண்டுகளில், தமிழகத்தில் செய்தித் தொலைக்காட்சிகளின் எண்ணிக்கை பெருகிவிட்டது. டி.ஆர்.பி. எனப்படும் ரேட்டிங்கில் முதலிடத்தில் வந்தாகவேண்டிய நெருக்கடியில் ஒவ்வொரு தொலைக்காட்சிகளும் முட்டி மோதுகின்றன. தேர்தல் அரசியல் போட்டியில் கட்சிகளும், தலைவர்களும் எப்படி முதலிடம் பிடிக்க வேண்டும்? என்றநோக்கில் மோதும்போது, அது தனிநபர் தாக்குதலாக மேடைகளில் வெளிப்படுகிறதோ அதுபோலவே, தொலைக்காட்சி விவாதங்களிலும், தான் நம்பும் கருத்துக்கு, மாற்றுக்கருத்தை முன்வைப்போர்மீது விவாதங்கள், தனிநபர் தாக்குதலாக மடைமாற்றம் செய்யப்படுகின்றன. ஊடகங்கள் பெருகிவிட்ட இக் காலத்தில், இத்தகைய பரபரப்புகள் வீடியோக்களாக பகிரும்போது, தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு ரேட்டிங் கூடுவதால் சத்தமில்லாமல் தொலைக்காட்சிகளும் இதை அனுமதிக்கின்றன. இப்போது, இப்படியான சண்டைகள், தனிநபர் தாக்குதல்கள் சகஜமாகிவிட்டன. தொலைக்காட்சிகளும் இம்மாதிரி சண்டைகள் நடந்தால் அவற்றை கூடுதல் முக்கியத்துவத்தோடு ஒளிபரப்புகின்றன.
இங்கே முக்கியமான இன்னொரு கேள்வி எழுகிறது. அரசியல் தலைவர்களாவது வெகுசன மக்களின் மனங்களைக் கவர போட்டி போடுகின்றனர். ஆனால், தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கிற அனைவருமே அறிவுத்துறையினர். அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் என்றாலும்கூட விவாதங்கள் என வரும்போது கோட்பாட்டுரீதியாக, எதிர்தரப்பினர் தங்களின் கட்சி நிலைப்பாடுகள்பற்றி கேள்விகளை எழுப்பும்போது ஆழமான, அர்த்தச்செறிவான பதில்களை இவர்களால் கூறமுடியும் என்பதால்தான், கட்சி மேலிடம் இவர்களை விவாதங்களுக்கு அனுப்புகிறார்கள். இப்படி ஒவ்வொரு கட்சியில் இருந்தும் சில பல நபர்களை அனுப்புகிறார்கள். திமுகவில் இருந்து சரவணன் போன்றோரும் கலந்து கொள்கிறார்கள்.
தமிழக அறிவுத்துறையில் நீண்டகால அனுபவம்கொண்ட பேரா.அருணனும் கொள்கைத் தெளிவு உள்ளவர்தான். அவருக்கு எதிராக அமர்த்தப்பட்ட சீமானோ, பெரியாரின் வழியில் அரசியல்செய்து மொழிவழித் தேசியவாதியாக தன்னை இன்று காட்டிக்கொள்பவர். அவரவர் நம்பும் கொள்கையில் தெளிவுள்ளவர்களாக இவர்கள் இருந்தபோதும், தேர்தல் அரசியலில் தங்களின் கட்சித் தலைமை எடுக்கும் முடிவுகளில் விருப்பம் இருக்கிறதோ, இல்லையோ ஆனால் அந்த கருத்தியல் சுமையை இவர்கள் சுமக்க வேண்டியிருக்கிறது . இப்போது, கட்சியையும் பகைத்துக்கொள்ளாமல் தன் கருத்தையும் சொல்லியாக வேண்டும் இந்த நெருக்கடிதான் பேரா அருணனுக்கு.
சீமானைப் பொருத்தவரை, அவர்தான் கட்சி-அவர்தான் தலைமை எனும்போது, பொதுவெளியில் என்ன நாகரிகத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை அவர், தமிழ்ச் சான்றோர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். பெரியாரும், ராஜாஜியும் அரசியல்ரீதியாக எதிரெதிர் துருவங்களாக இருந்தபோதும், நாகரிக அரசியல் செய்தார்கள். அந்த அரசியல் மரபு அறுந்து, அநாகரிகமான இந்த அரசியலானது மேடைகளிலும் தொலைக்காட்சிகளிலும் எதிரொலிப்பது, நமது சமூகப் பண்பாடும் கலாச்சாரமும் குலைந்துகிடப்பதையே காட்டுகிறது.
இறுதியாக,
ஒவ்வொரு தொலைக்காட்சியும் விருந்தினர்களை அழைக்க வலைவீசுகிறார்கள். அந்தந்த தொலைக்காட்சிகளின் அரசியல் நிலைப்பாடுகளுக்கு ஏற்ற ஒரு நபரைக் கண்டுபிடிப்பது என்பது அறிவுப்பஞ்சம் நிலவும் தமிழகத்தில் சிரமமாகவும் இருக்கிறது. இந்த விருந்தினர்களுக்கு அப்பால், தொலைக்காட்சி விவாதங்களை ஒருங்கிணைத்துச் செல்லும் நெறியாளர்களின் பங்கு மிக முக்கியமானது. சம்பந்தப்பட்ட நிகழ்வில் நெறியாளர் மோதலைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார். அந்தச் சிரிப்பு, அவரைச் சந்தேகப்படவைப்பதோடு, மேலும் நமக்கு ஒன்றை உணர்த்துகிறது. அது, ரேட்டிங் தொடர்பானது மட்டுமல்ல; அரசியல்ரீதியானதும்கூட!
நமது நிருபர்.









