“தனிநபர் விமர்சனங்கள் கூடாது. பாமக அப்படியான அரசியலை செய்வதில்லை” என்று திருச்சியில் நேற்று காலை பேசிய பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி, அன்று மாலை நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியிலேயே, “ தமிழகத்தில் நான்கு முதலமைச்சர் வேட்பாளர்கள் உள்ளனர். அதில் ஒருவர் , உட்கார முடியாதவர், ஒருவர் நடக்க முடியாதவர், ஒருவர் நிற்க முடியாதவர். நான் ஒருவன் தான் ஓடி உழைக்கும் நபராக இருக்கிறேன்” என்று உடற்குறையைச் சுட்டிக்காட்டி மோசமான தனி நபர் தாக்குதலில் ஈடுபட்டார்.
இந்நிலையில், தேமுதிக -மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘தோல்வி பயத்தால், மக்கள் நலக் கூட்டணி குறித்து அன்புமணி ராமதாஸ் தனிப்பட்ட முறையிலான அவதூறுகளைப் பரப்பி வருகிறார். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் வணிகர்களை பாதிக்கின்ற வகையில் உள்ளது. தேர்தல் முறைகேடுகளை, சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்தும் வலிமையுடன் தேர்தல் ஆணையம் இல்லை. தேர்தல் ஆணையம் கார்பரேட் நிறுவனம் போல் நடந்து கொள்கிறது’ என்றார்.









