,
அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா நேற்று சென்னையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், ‘அதிமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும்’ என்று கூறினார். மேலும், ‘தமிழ்நாட்டில் மதுவிலக்கை ரத்து செய்து மதுவிற்பனையைக் கொண்டுவந்தது திமுக தலைவர் கருணாநிதிதான்’ என்று குற்றம் சாட்டினார். இதற்கு திமுக தலைவர் கருணாநிதி மறுப்பு தெரிவித்து இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்று போராடிய சசிபெருமாள் உயிர்துறந்தபோது மதுவிலக்கை அமல்படுத்தாதவர், மதுவிலக்குப் பிரச்சாரப் பாடல் பாடிய கோவன் மீது தேசத்துரோக வழக்கு தொடுத்த ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று கூறியதை தமிழக மக்கள் நம்புவதற்கு தயாராக இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘மதுவிலக்கு ரத்து குறித்து பலமுறை பதில் அளித்த பின்னரும், திமுக மீது மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டுகிறார் ஜெயலலிதா. 1971ல் மாநிலத்தின் நிதி நெருக்கடியைக் கருத்தில்கொண்டு மனசாட்சி இடம்கொடுக்காத நிலையில்தான் மதுவிலக்குச் சட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தேன். அதையே, 1974-ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்திலேயே மீண்டும் மதுவிலக்கு அறிவித்தேன் என்பதை ஜெயலலிதா மறைத்துவிடுகிறார். இது வரலாற்றுத் திரிபு’ என்று கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.









