காஷ்மீரில் எதிரெதிர் கொள்கைகளைக் கொண்ட பிடிபி கட்சியும், பாஜகவும் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வந்தன. முதல்வராக இருந்த பிடிபி தலைவர் முப்தி முகமது சயீத், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஜனவரி, 7ம் தேதி மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து அவரது மகள் மெகபூபா முப்தி, முதலமைச்சராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மெகபூபாவின் நிபந்தனைகளை ஏற்க பாஜக மறுத்தது. இதனால் ஆட்சி அமைப்பதில் கால தாமதம் ஏற்பட்டதால், கவர்னர் ஆட்சி நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில் மெகபூபா முப்தி, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று நேரில் சந்தித்தார். 30 நிமிடம் நீடித்த இந்த சந்திப்பு தனக்கு திருப்தி அளிப்பதாக உள்ளது என்று மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். இதனால், காஷ்மீரில் விரைவில் ஆட்சி அமைவதற்கான சூழ்நிலை உருவாகி உள்ளது.









