– ரவிக்குமார் எம்.பி
“பல்கலைக்கழகங்களின் வேந்தராக (Chancellor of Universities) முதலமைச்சரே (Chief Minister) இருக்கவேண்டும் என்ற முந்தைய அரசின் நிலைபாட்டைப் பின்பற்றவேண்டியதில்லை” என உயர்கல்வித்துறை அமைச்சர் திரு விசுவநாதன் கூறியிருக்கிறார். இந்தக் கூற்று மாநில உரிமைகளுக்காகத் தமிழ்நாடு போராடிப் பெற்றதைக் கைவிடுவது மட்டுமல்ல, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் அவமதிப்பதுமாகும்.
ஒன்றிய பாஜக அரசு ஆளுநர்களைக் கருவியாக வைத்துக்கொண்டு மாநிலங்களின் உயர்கல்விச் சூழலைச் சீரழித்துவருகிறது. அதன் ஒரு அங்கமாகத் தமது வருணாசிரமக் கொள்கையை நடைமுறைப்படுத்தக்கூடிய நபர்களைப் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களாக நியமித்து வருகிறது. அதற்கு பாஜக அல்லாத மாநில அரசுகள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தன. தகுதியில்லாத நபர்களைத் துணைவேந்தர்களாக நியமிப்பதற்கு அன்றைய ஆளுநர் ஆர்.என்.ரவி முயற்சித்தபோது அதற்கு அப்போதிருந்த திமுக அரசு உடன்படவில்லை.
பல்கலைக் கழகங்களின் வேந்தர் பொறுப்பிலிருந்து ஆளுநரை விடுவித்து அன்றைய திமுக அரசு 10 சட்டங்களை இயற்றியது. தமிழ்நாடு அரசு இயற்றிய சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆண்டுக் கணக்கில் அன்றைய ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டிருந்தார். அது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோரைக் கொண்ட அமர்வு 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் நாள் வரலாற்றுச் சிறப்புவாய்ந்த தீர்ப்பு ஒன்றை வழங்கியது ( WRIT PETITION (CIVIL) NO. 1239 OF 2023 நாள் 08.04.2025 ) அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 142 உச்சநீதிமன்றத்துக்கு வழங்கியுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த 10 மசோதாக்களும் சட்டங்கள் ஆகிவிட்டதாக அறிவித்தது. அந்தப் பத்து சட்ட மசோதாக்களிலும் ‘வேந்தர்’ என்ற சொல்லுக்குப் பதிலாக ‘அரசாங்கம்’ என்ற சொல் இடம்பெறும் எனத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு இல்லையென்பதால் குடியரசுத் தலைவரின் மூலம் விளக்கம் கேட்பதுபோல இதை மாற்ற பாஜக அரசு முயன்றது. ஆனால் அதற்கு விளக்கமளித்த உச்சநீதிமன்றமும் இந்தத் தீர்ப்பு மாற்ற முடியாதது என்பதை உறுதி செய்துவிட்டது.
ஒரு மாநிலத்தின் ஆளுநர் அந்த மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் வேந்தராக செயல்படுவதற்கு அரசமைப்புச் சட்டத்தில் எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. ஆளுநரின் அதிகாரத்தையும், கடமையையும் வரையறுத்திருக்கிற அரசமைப்புச் சட்ட உறுப்புகளில் பல்கலைக்கழக வேந்தராக அவர் இருப்பதைப் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை. மாநிலப் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற பொறுப்பு மாநில அரசு இயற்றுகிற பல்கலைக்கழகங்களுக்கான சட்டங்களின் மூலம் தான் ஆளுநருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
2007 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசினால் அமைக்கப்பட்ட நீதிபதி பூஞ்ச்சி தலைமையிலான ஆணையம் ஆளுநர்களை வேந்தர்களாக நியமிப்பதில் உள்ள சிக்கலைப் பற்றி விரிவாக ஆராய்ந்திருக்கிறது.
“ ஒரு மாநிலத்தில் கல்வி நிர்வாகத்தில் ஆளுநருக்கு ஏதேனும் பங்கு இருக்க வேண்டுமா என்பது ஆளுநரைப் பொறுத்தவரை எழும் ஒரு முக்கியமான கேள்வி. மாநிலப் பல்கலைக் கழகங்களில் ஆளுநர்கள் வழக்கமாக வேந்தர்களாக நியமிக்கப்படுவதால் இந்தக் கேள்வி எழுகிறது. “ எனத் தெரிவித்துள்ள பூஞ்ச்சி ஆணையம், ‘ஆளுநர்கள் மாநிலப் பல்கலைக்கழகங்களில் வேந்தராக நியமிக்கப்படும் போது அவர் அமைச்சரவையின் ஆலோசனைகளின் படி செயல்படத் தேவையில்லை’ என்று இரண்டு நீதிமன்றத் தீர்ப்புகள் தெரிவிக்கின்றன. அரசமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள அவரது கடமைகளில் ஒன்றாக அது இல்லை என்பதால் இத்தகைய தீர்ப்பை நீதிமன்றங்கள் வழங்கியுள்ளன’ எனக் கூறியுள்ளது.
ஆளுநர் அதிகாரம் (Governor)- பூஞ்சி ஆணையம் சொல்வது என்ன?
“மாநில சட்டமன்றங்களால் ஆளுநருக்கு சட்டப்பூர்வ அதிகாரங்களை வழங்குவது அந்த அதிகார ஆற்றலை அவருக்குத் தருகிறது. அது தவிர்க்கப்பட வேண்டும்” என பூஞ்ச்சி ஆணையம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாகப் பின்வரும் பரிந்துரையை பூஞ்ச்சி ஆணையம் முன்வைத்துள்ளது: “ ஆளுநரைப் பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆக்குவதும், அதன் மூலம் வரலாற்று ரீதியாகச் சில பொருத்தப்பாடுகளைக் கொண்ட அதிகாரங்களை அவருக்கு வழங்குவதும் காலங்கள் மற்றும் சூழ்நிலைகளின் மாற்றத்தால் இப்போது தேவையற்றவை ஆகிவிட்டன. பல்கலைக்கழகக் கல்வியை ஒழுங்குபடுத்துவதில் அமைச்சர்கள்தான் இயல்பாக ஆர்வம் காட்டுவார்கள். ஆளுநரை வேந்தராக நியமித்து பல்கலைக் கழக நிர்வாகச் செயல்பாடுகளில் அதிகார மோதல் ஏற்படும் சூழ்நிலையை உருவாக்க வேண்டிய அவசியமில்லை” எனத் தெரிவித்துள்ள பூஞ்ச்சி ஆணையம்,
“ எந்தவொரு சட்டத்தின் கீழும் ஆளுநருக்கு சாதாரணமான பணிகள் ஒதுக்கப்படக்கூடாது என்று ஆணையம் கருதுகிறது. அவரது பங்கு அரசமைப்புச் சட்டத்தில் விதிக்கப்பட்டவற்றோடு மட்டுப்படுத்தப்பட வேண்டும்” எனப் பரிந்துரைத்துள்ளது.
சுருக்கமாகச் சொன்னால் , ஆளுநரை மாநிலப் பல்கலைக் கழகங்களின் வேந்தராக நியமிப்பதென்பது எரியும் கொள்ளியை எடுத்துத் தலையில் வைத்துக்கொள்வதற்குச் சமம் ஆகும்.
10 பல்கலைக் கழகங்களின் வேந்தர் பொறுப்பிலிருந்து ஆளுநரை விடுவித்து சட்டத் திருத்தம் செய்ததுபோலவே எஞ்சியுள்ள மாநிலப் பல்கலைக் கழகச் சட்டங்களிலும் தமிழ்நாடு அரசு திருத்தம் கொண்டுவர வேண்டும். ஒத்திசைவுப் பட்டியலில் உள்ள கல்வி அதிகாரத்தை முழுமையாகத் தன் வசப்படுத்திக் கொள்வதற்காக ஒன்றிய பாஜக அரசு பள்ளிக் கல்வியிலும் உயர் கல்வியிலும் பல்வேறு மாற்றங்களைச் செய்துவருகிறது. சாதாரண மக்களைக் கல்வியிலிருந்து அப்புறப்படுத்துவதற்காக பாஜக அரசு செய்யும் சூழ்ச்சிக்குத் தமிழ்நாடு அரசு பலியாகிவிடக் கூடாது. உயர்கல்வித் துறை அமைச்சர் சொன்னது தமிழ்நாடு அரசின் நிலைபாடு அல்ல என முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்.
கட்டுரையாளர் குறிப்பு:

முனைவர் டி.ரவிக்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் (விழுப்புரம் மக்களவைத் தொகுதி), எழுத்தாளர்-மொழிபெயர்ப்பாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர்.
