துணைவேந்தர் நியமன வழக்கு : ஆளுநர் மாளிகைக்கு உத்தரவு!

Published On:

| By Kavi

தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமனம் செய்வது தொடர்பான வழக்கில் மத்திய அரசு, ஆளுநர் மாளிகை மற்றும் யுஜிசி பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Vice Chancellor appointment case

தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் தமிழக அரசு சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றியது. இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை.

இந்த சூழலில் சட்டப்பேரவையில் இருந்து அனுப்பி வைக்கும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதில்லை என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்து தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, ஒன்பது மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கியது.

இந்த சூழலில் திருநெல்வேலியைச் சேர்ந்த வெங்கடாஜலபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு விசாரணையின் போது, “பல்கலைக்கழகங்களை அரசியல் சக்திகளிடமிருந்து பாதுகாக்கவே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. துணைவேந்தர் நியமனம் தொடர்பான பல்கலைக்கழக மானிய குழு விதிமுறைகளுக்கு முரணாக தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளது” என்று வாதிக்கப்பட்டது.

இதற்கு உயர்கல்வித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன், “ஆளுநரை பல்கலைக்கழக வேந்தர் என்ற நிலையில் இருந்து நீக்கவில்லை. ஆனால் துணைவேந்தர் நியமன அதிகாரம் மட்டுமே அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. மனுதாரர் கையில் இருக்கும் அரசிதழ் ஜோடிக்கப்பட்டது. அது உண்மையானது அல்ல. இது மனுதாரருக்கு எப்படி வந்தது என விசாரிக்க வேண்டும்” என்று வாதிட்டார்.

பல்கலைக்கழக மானிய குழு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல் சுந்தரேசன் ஆஜராகி, “தமிழக அரசின் சட்டம் பல்கலைக்கழக மானிய குழு விதிகளுக்கு முரணானது” என்று வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் தொடர்ந்து, துணைவேந்தர்களின் நியமிக்கும் வேந்தரின் அதிகாரத்தை அரசுக்கு வழங்கி நிறைவேற்ற சட்டப்பிரிவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.வி.நரசிம்மா ஆர்.மகாதேவன் அமர்வில் இன்று (ஜூலை 4) விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசின் மனுவுக்கு ஆளுநர் மாளிகை, யுஜிசி, மத்திய அரசு, உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த வழக்கின் மனுதாரர் வெங்கடாஜலபதி ஆகியோர் 4 வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும், துணைவேந்தர் நியமனம் தொடர்பான விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிப்பது குறித்து அடுத்த விசாரணையின் போது முடிவு செய்யலாம் என்று கூறி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர். Vice Chancellor appointment case

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share