ஜெயலலிதா கேட்ட க்ரைம் லிஸ்ட்!
”நிலையான சந்தோஷம் என்பது எதுவும் இல்லை. நிலையான துக்கம் என்பதும் எதுவும் இல்லை!’’ என்று ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் போட்டிருந்தது.
‘’அடடே!’’ என, கமெண்ட் போட்டது வாட்ஸ் அப்.
அடுத்த ஸ்டேட்டஸ் டைப் செய்ய ஆரம்பித்தது ஃபேஸ்புக். ‘’மதுரை கிரானைட் வழக்கில் பி.ஆர்.பி-யை விடுதலைசெய்த நீதிபதி மகேந்திரபூபதியை உயர்நீதிமன்றம் சஸ்பெண்ட் செய்திருக்கிறது. இந்த மகேந்திரபூபதி பற்றி கிரானைட் வழக்கை விசாரித்த அதிகாரி சகாயம், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அந்தக் கடிதத்தில், ‘கிரானைட் வழக்கு விசாரணை தொடங்கிய சமயத்தில்தான் மகேந்திரபூபதி மேலூர் நீதிமன்றத்துக்கு மாற்றலாகி வந்தார். அவர் வந்தபிறகுதான் பி.ஆர்.பி-யை ஜாமீனில் வெளியில் விட்டிருக்கிறார். பி.ஆர்.பி. மீது பல்வேறு வழக்குகள் இருந்தும் அவரை சர்வசாதாரணமாக வெளியில் விட்டிருக்கிறார். அரசால் சீல் வைக்கப்பட்ட ஒரு நிறுவனம் மீண்டும் அதே பிசினஸ் செய்கிறது. சட்டங்கள் கடுமையாக இருந்தும் அதில் இருந்தெல்லாம் தப்பித்துவிடுகிறார்கள் குற்றவாளிகள். இதையெல்லாம் ஆராய்ந்து பார்த்தால் குற்றம்சாட்டப்பட்டவர்களின் பின்னணியில், நீதிபதி அவர்கள் இருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. அவரது சொத்து விபரங்கள் பற்றியும், தொடர்புகள் பற்றியும் இங்கே ஆதாரங்களை இணைத்துள்ளேன். நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் ஊழலை ஒழிக்க மேலமைதாங்கிய நீதிபதி நீங்கள், நீதியைப் பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ -என்று குறிப்பிட்டிருந்தார். அந்தக் கடிதத்தின்மீது விசாரணை நடந்தபடியே இருக்கிறது. அதற்குள் நீதிபதி மகேந்திரபூபதி சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி நீதிமன்றத்தில் இருந்து கடந்த 2 வருடங்களுக்குமுன்பு மேலூர் நீதிமன்றத்துக்கு மாற்றலாகி வந்தார் மகேந்திரபூபதி. இவர், பி.ஆர்.பி-யின் சாதியைச் சேர்ந்தவர் என்பதே அவர்மீதான பாசத்துக்கு காரணமாகச் சொல்கிறார்கள். பி.ஆர்.பி-யை விடுதலை செய்தது நீதித்துறை வட்டாரத்தில் கடுமையான சர்ச்சை ஏற்பட்டது. மகேந்திரபூபதிபற்றி உயர்நீதிமன்ற விஜிலன்ஸ் டிபார்ட்மெண்ட் விசாரணையைத் தொடங்கியது. மகேந்திரபூபதி பயன்படுத்திய செல்போனில் இருந்து அதிகப்படியான கால்கள் பி.ஆர்.பி. தரப்புக்குப் போனதை கண்டுபிடித்திருக்கிறார்கள். மகேந்திரபூபதி வாங்கிக்குவித்த சொத்துகள் பற்றிய விபரங்களையும் விஜிலன்ஸ் கையிலெடுத்திருக்கிறது. அதன்பிறகே சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்’’ என்பதை போஸ்ட் செய்தது.
ஸ்டேட்டஸ்க்கு லைக் போட்டது வாட்ஸ் அப். அத்துடன் செய்தி ஒன்றையும் பகிர்ந்தது. ‘‘நேர்காணலை முடித்திருக்கும் ஜெயலலிதாவை இன்று, போயஸ் கார்டனில் மூவேந்தர் முன்னணி கழகத்தைச் சேர்ந்த சேதுராமன், மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமூன் அன்சாரி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி ஆகியோர் சந்தித்தனர். போயஸ் கார்டனில் நேர்காணல் நடந்த அதே அறையில்தான் இந்தச் சந்திப்பு நடந்திருக்கிறது. எடப்பாடி பழனிசாமியும், வைத்திலிங்கமும் மட்டும் உடன் இருந்தார்கள். ஜெயலலிதா ரொம்பவே உற்சாகமாக இருந்ததாகச் சொல்கிறார்கள். ‘சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் உங்களை ஆதரிக்கிறோம்’ என்று ஜான்பாண்டியனும், பூவை மூர்த்தியும் சொன்னார்களாம். ‘ரொம்பவும் சந்தோஷம். உங்கள் ஆதரவுக்கு நன்றி. உங்களுக்கு என்ன செய்யமுடியும் என்பதை நான் விரைவில் சொல்லி அனுப்புகிறேன். உங்கள் எதிர்பார்ப்புகள் நிச்சயம் நிறைவேறும்’ என்று மட்டும் சொன்னாராம் ஜெயலலிதா. ’வெற்றி வாய்ப்புகள் எப்படி இருக்கு? மக்கள் என்ன நினைக்கிறாங்க?’ என்றும் கேட்டிருக்கிறார். ’மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். மறுபடியும் நீங்கள் முதல்வர் ஆவதை யாராலும் தடுக்க முடியாதும்மா..’ என்று சொல்லியிருக்கிறார் சேதுராமன். அவர்கள் உள்ளே வந்தபோதும் சரி.. கிளம்பும்போதும் சரி.. உட்கார்ந்தபடியேதான் ஜெயலலிதா வணக்கம் சொன்னாராம். எடப்பாடி பழனிசாமியும், வைத்திலிங்கமும் மட்டும்தான் எழுந்து நின்று வரவேற்பது, எழுந்து நின்று வழியனுப்புவது என்று இருந்திருக்கிறார்கள். ஆனால், அந்தச் சந்திப்பில் அமைச்சர்கள் இருவரும் எதுவுமே பேசவில்லையாம்.’’
மறுபடியும், ஃபேஸ்புக் ஸ்டேட்டஸுடன் உள்ளே வந்தது. ‘‘தேமுதிக-வில் இருந்து திமுக-வுக்கு தொடர்ந்து தாவியபடியே இருக்கிறார்கள். தேமுதிக-வில் என்ன நடந்தது என்பதை, அப்படி கட்சி மாறும் நபர்கள் பகிரங்கமாகவே போட்டுடைக்க ஆரம்பித்துள்ளனர். ‘தேமுதிக-வுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்துவந்தது அதிமுக-தான். அந்தக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான் தேமுதிக-வில் உள்ள அடிமட்டத் தொண்டனின் விருப்பம். அதனால்தான் நாங்கள் திமுக-வுடன் கூட்டணி இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தோம். ஆனால், கேப்டன் நினைத்தாலும் அதற்கு அண்ணி சம்மதிக்கவில்லை. தேர்தலுக்கு முன்பே வேட்பாளர்களிடம் பணம் வாங்கியது கொடுமையான விஷயம். இவ்வளவுக்கும் நாங்கள் யாரும் அரசியலுக்கு வந்து சம்பாதிக்கவில்லை. இழந்ததுதான் அதிகம். வேறு வழியில்லாமல்தான் திமுக-வுக்கு வந்துவிட்டோம்’ என்று லேட்டஸ்டாக திமுக-வில் இணைந்த தினேஷ் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். மாவட்டச் செயலாளர்கள் யார், எப்போது திமுக-வுக்குப் போவார்கள் என்பது தெரியாத நிலையில்தான் தேமுதிக இருக்கிறது.
‘தேர்தல் நேரத்தில் மாவட்டச் செயலாளர்கள் கட்சியை விட்டுப்போறது நல்லது இல்லை. அவங்க வெளியில் போய் கட்சிக்குள் நடக்கும் விஷயங்களை வெளிப்படையாக மீடியாவில் பேசுறாங்க. இது நமக்கு பாதிப்பை உண்டாக்கும். மாவட்டச் செயலாளர்களுடன் தொடர்ந்து பேசு. தேவைப்பட்டா சொல்லு.. நானும் அவங்களோட பேசுறேன்’ என்று சுதீஷ்-க்கு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்திருக்கிறாராம் விஜயகாந்த். அதனால், தற்போது தினமும் மாவட்டச் செயலாளர்களுக்கு போன் போட்டு நலம் விசாரித்தபடியே இருக்கிறார். சுதீஷிடம் எல்லோரும் சிரித்தபடி பேசினாலும் உள்ளுக்குள் அவர்களில் பலருக்கும் வருத்தம் இருப்பதே உண்மை. அதனால், எந்த நேரத்தில் யார் வெளியில் போவார்கள் என்பது தெரியவில்லை’’ என்று ஸ்டேட்டஸ் போஸ்ட் ஆனது.
ஃபைனல் டச் கொடுக்க வந்தது ட்விட்டர். ‘‘அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதுதான் திமுக பிரசாரத்தில் முன்வைக்கப்போகும் பிரதான விஷயமாக இருக்கும் என்பதை உளவுத்துறை ஜெயலலிதாவுக்கு ரிப்போர்ட்டாகக் கொடுத்திருக்கிறது. கடந்த 5 வருடங்களில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்கள் எவ்வளவு? அதில் குடும்பத் தகராறு காரணமாக கொலையானவர்கள் எவ்வளவு? கண்டுபிடிக்கப்பட்ட குற்றங்கள் எவ்வளவு என்ற புள்ளி விபரங்களையும், அதற்குமுன்பு திமுக ஆட்சியில் நடந்த கொலை, நில அபகரிப்புப் புகார் பற்றிய விபரங்களையும் ஜெயலலிதா கேட்டிருக்கிறாராம். அந்த விவரங்களை அதிகாரிகள் திரட்டி வருகிறார்கள். திமுக இதுபற்றி பேசும்போது, அதற்கு ஜெயலலிதாவும் பதில் கொடுப்பாராம்!’’ என்று ட்விட் அடித்துவிட்டு சைன் அவுட் ஆனது.,”










