டிஜிட்டல் திண்ணை

By Balaji

|

Published on 12 Apr 2016, 12:00 AM

விடாப்பிடியாக ராகுல்!

திமுக- காங்கிரஸ் கரெண்ட் நிலவரம்

ADVERTISEMENT

லாக் இன் ஆனது ஃபேஸ்புக். ஸ்டேட்டஸ் தயாராக இருந்தது. ‘’அதிமுகவில் நடந்த நேர்காணல் முடிவுக்கு வந்திருக்கிறது. இன்னும் புதுச்சேரி, கேரளா மாநிலங்களுக்கு மட்டும் நேர்காணல் நடக்கவில்லை. அத்துடன் தமிழகத்தில் பல தொகுதிகளுக்கு யாரையும் நேர்காணலுக்கு அழைக்கவே இல்லை. அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள். இதுவரை ஜெயலலிதா நேரில் சந்திக்காத புதுமுகங்களை மட்டுமே நேர்காணலுக்கு அழைத்திருக்கிறார். சிட்டிங் எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் என்று அறிமுகமான முகங்கள் யாரையும் அவர் மீண்டும் சந்திக்கவில்லை. சந்திக்காதவர்களுக்கு சீட் இல்லை என்பது அர்த்தமல்ல… அவர்களைப் பற்றி தெரியும் என்பதால் பார்க்கத் தேவை இல்லை என ஜெயலலிதா சொன்னதாக சொல்கிறார்கள் கார்டன் வட்டாரத்தில்.

ஒருகாலத்தில் ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளையாக வலம் வந்தவர் செந்தில்பாலாஜி. கரூர் மாவட்டச் செயலாளரான இவர் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். இளவரசி குடும்பத்தில் ஏற்பட்ட சில பிரச்னைகளால் செந்தில்பாலாஜிக்கு பதவி பறிக்கப்பட்டது. கட்சியில் இருந்தும் ஓரங்கட்டப்பட்டார். ஒரு வருடத்துக்கு முன்பு வரை பவர்ஃபுல்லாக வலம் வந்த செந்தில்பாலாஜியை தற்போது கரூரில் கண்டுகொள்ளக்கூட ஆள் இல்லை. தனியே தன்னந்தனியே என வலம் வருகிறார். செந்தில்பாலாஜியிடம் பேசினால் கூட அம்மாவுக்கு கோபம் வந்துவிடுமோ என கட்சிக்காரர்கள் அவரைப் பார்த்தால் தலைதெறிக்க ஓடுகிறார்கள். ஆனால், செந்தில்பாலாஜி மீண்டும் கார்டனில் ஐக்கியமாகிவிட்டார் என்பதே லேட்டஸ்ட் தகவல். இளவரசி குடும்பத்துடன் இருந்த மன வருத்தங்கள் நீங்கிவிட்டதால், செந்தில்பாலாஜி மீண்டும் பவர்புல் பாலாஜி ஆகப் போகிறார் என்று சொல்கிறார்கள். கரூரில் மறுபடியும் செந்தில்பாலாஜிக்கு சீட் உறுதியாகிவிட்டதாக தகவல் பரவ ஆரம்பித்துள்ளது. செந்தில்பாலாஜியை விட்டு விலகியவர்கள் எல்லாம் மறுபடியும் அவரைத் தேடிப்போக ஆரம்பித்துள்ளனர். அதேபோல செங்கோட்டையன் தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கும் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதிக்கும் யாரையும் நேர்காணலுக்கு அழைக்கவில்லை. அதனால், செங்கோட்டையனுக்கும் மீண்டும் வாய்ப்பு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. ஜெயலலிதாவின் டூர் புரோகிராமை வடிவமைக்கும் சாரதி மீண்டும் லைம் லைட் வெளிச்சத்துக்கு வரப்போகிறார் என்று சொல்ல ஆரம்பித்துள்ளனர் அவரது ஆதரவாளர்கள்’’ என்பதை போஸ்ட் செய்தது. அதற்கு லைக் போட்ட வாட்ஸ் அப் அடுத்த செய்தியை கொட்டியது.

ADVERTISEMENT

’’மக்கள் நல கூட்டணியின் தேர்தல் அறிக்கை சில தினங்களில் வர இருக்கிறது. அந்த அறிக்கை எப்படி தயார் செய்கிறார்கள் தெரியுமா? ஒவ்வொரு கட்சியிலும் இரண்டு பேர் கொண்ட ஒரு ட்ராப்டிங் கமிட்டி போட்டுருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய நோக்கங்களில் இருந்து திட்டங்களை கொடுப்பார்கள். அந்த கருத்தோடு ஒத்து போகும்போது அதை ஏற்றுக்கொண்டும் மாற்று கருத்து இருந்தால் அதை அக்கட்சியிடம் முறையிடுவார்கள். பின் அதுகுறித்து அனைவரும் பேசி அந்த குறிப்பிட்ட விசயத்தில் அனைவருக்கும் ஒத்த கருத்து உருவாகும்போது அடுத்த திட்டத்திற்கு செல்வார்கள். இப்படிதான் வாக்குறுதிகளுக்கான வேலைகள் நடந்து வருகின்றன. ஈழம், கூடங்குளம் போன்ற மாற்று கருத்து கொண்ட விசயங்களில் குறைந்தபட்ச நன்மை என்ற அடிப்படையில் ஒரு பொது திட்டம் வகுக்க உள்ளதால் தான் அறிக்கை தாமதமாகிறது’’

‘’கம்யூனிஸ்ட்கள் தனியார்மயத்தை ஆதரிக்க மாட்டார்கள். ஆனால் விஜயகாந்த் தனியார்துறையை ஆதரித்து தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருக்காரே’? ‘’ என பேஸ்புக் கேட்க

ADVERTISEMENT

‘’ம்.. இதைப்பற்றி கூட திருமாவளவன் ,’ நாங்க வெற்றிப் பெற்று ஆட்சிக்கு வரும்போது அதுகுறித்து பொதுவா ஒரு முடிவு எடுத்து உடன்பாடுகொள்வோம்’ன்னு பேசியிருக்காரு. இதையேதான் வை.கோவும் ஆமோதிக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சிகளைப் பொறுத்தவரை விஜயகாந்த் தேமுதிக உடன் மக்கள் நலக் கூட்டணி தொகுதி உடன்பாடு வைத்துக்கொண்டுள்ளது. எனவே ஏற்கெனவே அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் சில மாற்றங்கள் செய்ய முடியுமா என விஜயகாந்த்திடம் கோரிக்கை வைத்துள்ளனர். தனியார்மய அபாயத்தை பற்றியும் ஜி.ஆர் எடுத்துப் பேசியுள்ளார். இதை கூர்மையாக கேட்டுக்கொண்டார் விஜயகாந்த். எனவே நம்பிக்கையில் தான் உள்ளனர். அப்படி அதை மாற்றாமலே விஜயகாந்த் இருந்தால் நம்முடைய தேர்தல் வாக்குறுதிகளையும் மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் அறிக்கையை மட்டும் மக்களிடம் எடுத்து சொல்லி பிரசாரம் செய்யலாம்..தேமுதிகவின் தேர்தல் அறிக்கையை பற்றி பேச வேண்டாம் என முடிவு செய்துள்ளனர்.’’ என்று பதில் தகவலை தட்டிவிட்டது வாட்ஸ் அப்.

டெல்லி தகவல்களுடன் எண்ட்ரி ஆனது ட்விட்டர். ‘’சோனியாவை ஈவிகேஎஸ்.இளங்கோவன் சந்தித்ததாக நான் நேற்று சொல்லியிருந்தேன்.அது தவறு. தவறான செய்தியை சொன்னதற்காக வருந்துகிறேன். சோனியாவை சந்திக்க இளங்கோவன் காத்திருந்தார். ஆனால், சோனியா சந்திக்கவில்லை. உம்மன்சாண்டி மட்டும் ராகுலிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். அப்போது குலாம்நபி ஆசாத் உடன் இருந்திருக்கிறார். அந்த மீட்டிங் முடிந்து வெளியே வந்த குலாம்நபி ஆசாத், ‘45 சீட்டுக்கும் குறைவாக முடியாது!’ என்று அங்கே காத்திருந்த இளங்கோவனிடம் சொல்லியிருக்கிறார். மறுபடியும் இன்று குலாம்நபி ஆசாத்திடம் பேசுவதற்காக இளங்கோவன் காத்திருந்தார். ஆனால், ஆசாத் அஸ்ஸாம் கிளம்பிப்போய்விட்டாராம். இன்று இரவுதான் திரும்பவர் அவர் டெல்லி வருகிறார். அவரைப் பார்த்துவிட்டுதான் இளங்கோவன் சென்னைக்குத் திரும்புவார். இதற்கிடையில் ஆசாத்துடன் தொடர்ந்து பேசி வரும், தங்கபாலு, ‘50 சீட்டுக்கும் குறையாமல் கேளுங்க. அதுதான் விஜயகாந்த் கூட்டணிக்கு வரவில்லையே.. அப்புறம் 50 சீட் நமக்கு கொடுக்கிறதுக்கு என்ன?’ என்று உசுப்பியபடியே இருக்கிறார். ஆசாத்த்தும் விடாப்பிடியாக இருக்கிறார்.’’ என்ற ட்விட் அடித்தது.

வாட்ஸ் அப் அதன் ஃபாலோ அப் தகவல்களுடன் வந்தது. ”கோபாலபுரத்தில் இருந்து நேற்று டெல்லிக்குப் போன். பேசியவர் கனிமொழி. எதிர்முனையில் குலாம்நபி ஆசாத். ‘ராகுல் சொன்ன விஷயங்களை ஆசாத் கனிமொழியிடம் சொல்லியிருக்கிறார். நான் அப்பாகிட்ட சொல்றேன் என்று கனிமொழி சொன்னதாகச் சொல்கிறார்கள். இதுதவிர காங்கிரஸுடம் இழுபறி நீடிக்க இன்னொரு முக்கிய காரணம், தேர்தல் அறிக்கை. ‘ராஜுவ் காந்தி கொலையாளிகள் என்ற பெயரில் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்வோம்’ என்பது தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டும் என திமுக தரப்பில் பேசியதாக சொல்கிறார்கள். அதற்கு காங்கிரஸ் தரப்பிலோ, ‘உங்க தேர்தல் அறிக்கையில் வேண்டுமானால் அதைச் சொல்லுங்க. நாங்க அதை சொல்லமுடியாது’ என காங்கிரஸ் மறுத்து வருகிறதாம். காங்கிரஸ் அந்த விஷயத்தைச் சொன்னால் தேர்தல் நேரத்தில் சரியாக இருக்கும் என திமுக நினைக்கிறது. அதைத்தான் திமுக தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறதாம்.’’ என்று சொல்லிவிட்டு ஆஃப் லைனுக்குப் போனது.,”

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel