கருணாநிதிக்கு ஸ்டாலின் கொடுத்த உறுதி
ஆன்லைனில் வந்தது வாட்ஸ் அப்.
‘‘தர்மபுரி மாவட்டத்திலும் களையெடுக்கத் தொடங்கிவிட்டார் ஜெயலலிதா. நீக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவருமே உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பனின் ஆதரவாளர்கள். ஐவர் அணியில் இருந்து கழட்டிவிடப்பட்டவர்களில் அமைச்சர் பழனியப்பனும் ஒருவர். ஐவர் அணியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தையும், நத்தம் விஸ்வநாதனையும் கார்டனுக்கு அழைத்து திட்டித் தீர்த்தார் ஜெயலலிதா. அத்துடன் இருவரிடமும் சில விஷயங்களை எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பிவிட்டார். அதில், மிச்சமிருந்தது பழனிப்பன் மட்டும்தான். பழனியப்பனின் ஆதரவாளர்கள், அவரால் பொறுப்புக்கு வந்தவர்கள் என, ஒவ்வொருவரையும் பார்த்துப்பார்த்து நீக்க ஆரம்பித்துள்ளார் ஜெயலலிதா. அமைச்சர் பழனியப்பனுக்கு உள்ள சொத்து விபரங்கள் தொடர்ந்து பிட் நோட்டீஸ்களாக கொடுக்கப்பட்டு வருகிறது. இன்று மதியம் போயஸ் கார்டனுக்கு அழைக்கப்பட்டார் பழனியப்பன். ‘உங்களை நம்பி எவ்வளவு பெரிய பொறுப்பை ஒப்படைச்சேன். ஆளாளுக்கு தனிக் கட்சி நடத்த ஆரம்பிச்சுட்டீங்களா?’ என்று, ஜெயலலிதா கோபத்தின் உச்சிக்கே போனதாகச் சொல்கிறார்கள். பழனியப்பன் படாரென காலில் விழுந்துவிட்டாராம். ஆனாலும் ஜெயலலிதா கோபமாகவே இருந்தார் என்று சொல்கிறார்கள்.’’ என்ற தகவலைத் தட்டிவிட்டது.
சைன் இன் ஆன ஃபேஸ்புக்.
‘‘அமைச்சர்கள் பற்றி தினம் ஒரு விமர்சனம் வந்துகொண்டிருக்க…இன்று, எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றியிருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ். ’உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் கடந்த 6 நாட்களாக எங்கிருக்கிறார் என்பதே தெரியவில்லை என்றும், அவரும் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. மூத்த அமைச்சர்களிடமிருந்து பறிக்கப்பட்ட பணம் மற்றும் சொத்துகளின் மதிப்பு ரூ.30,000 கோடி என்றும், அப்பணம் மேலிடத்தின் கணக்கில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலிடத்துக்குத் தெரியாமல் 5 அமைச்சர்கள் பதுக்கிவைத்த பணத்தின் மதிப்பு மட்டுமே இவ்வளவு என்றால், 5 ஆண்டுகளில் நடந்த மொத்த ஊழலின் மதிப்பைக் கணக்கிடும்போதே தலைசுற்றுகிறது. அமைச்சர்களின் ஊழலில் ஜெயலலிதாவுக்கும் தொடர்பு உண்டு என்பதால் அவர்மீதும், மூத்த அமைச்சர்கள் 5 பேர்மீதும் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்த வேண்டும். அமைச்சர்களிடம் இருந்து சட்டவிரோதமாக மீட்கப்பட்ட பணம் மக்களுக்குச் சொந்தமானது என்பதால் அதன் மதிப்பை வெளிப்படையாக அறிவித்து அரசுக் கருவூலத்தில் செலுத்த வேண்டும்’ என்று அவர் சொல்லியிருக்கிறார். இது, ஜெயலலிதாவின் கோபத்தை அதிகப்படுத்தியிருக்கிறது. ஓபிஎஸ், நத்தம் விஸ்வநாதன், தாம்பரம் சின்னையா, புதுக்கோட்டை விஜயபாஸ்கர், பழனியப்பன் ஆகியோர்மீது புகார்கள் வரிசைகட்டி வந்தாலும், சின்னையாவின் அமைச்சர் பதவியையும், விஜயபாஸ்கரின் கட்சிப் பதவியையும் மட்டும் தூக்கினார் ஜெயலலிதா. இப்போது பழனியப்பனிடம் விசாரணை நடக்கிறது. தேர்தல் நேரத்தில் இந்த சர்ச்சைகளுக்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பது என்பதுபற்றி ஜெயலலிதா ஆலோசித்து வருகிறாராம்!’’ என்ற ஸ்டேட்டஸைப் பதிவிட்டது.
ட்விட்டர் அடித்த ட்விட் இது. ‘‘அதிமுக-வில் நேர்காணல் நடத்துகிறார் ஜெயலலிதா. 23ம் தேதி பௌர்ணமி. அன்று, பங்குனி உத்திரமும் வருகிறது. பகல் 11.05 முதல் 12.52 மணி வரை மங்கள நேரம் என, ஜோதிடர்கள் நேரம் குறித்துக் கொடுத்திருக்கிறார்களாம். அந்த நேரத்தில் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிடத் திட்டமிட்டுள்ளாராம் ஜெயலலிதா. முதல் பட்டியலைப் பொருத்தவரை சசிகலா கொடுத்த லிஸ்ட்டில் இருப்பவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு என்கிறார்கள். அந்தப் பட்டியலோடுதான் சசிகலா கோயில் கோயிலாக ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறார். சசிகலா கோயிலுக்குப்போக பட்டியல் காரணம் அல்ல. சுப்ரீம் கோர்ட்டில் நடக்கும் வழக்கில் தீர்ப்பு சாதகமாக வரவேண்டும் என்பதுதான் வேண்டுதலாம்!’’
ட்விட்டை படித்துவிட்டு, திமுக சப்ஜெக்டுக்குத் தாவியது ஃபேஸ்புக். ‘‘திமுக-வின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. கலைஞர், பேராசிரியர் க.அன்பழகன், மு.க. ஸ்டாலின், துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி ஆகியோர் சூழ்ந்த அரங்கில்தான் 65 மா.செ.க்களும் ஆஜராக, ‘பழம் நழுவி பாலில் விழும்…விழப் போவது….இதெல்லாம் வெளிய சொல்லிக்கொண்டு இருப்போம்….அது வேற விஷயம்….ஆனா, நீங்க அதையே நினச்சுக்கிட்டு இருக்கக்கூடாது…இப்போ வந்த லெட்டர் பேடு கட்சிங்ககூட தனித்து நிக்குறோம்னு காலரத் தூக்கிவிட்டுக்கிட்டு நிக்குறாங்க. 65 ஆண்டு பாரம்பரியம்கொண்ட நாம, கூட்டணிய மட்டுமே எதிர்பார்த்துக்கிட்டு இருக்கிறதா?” என, கொஞ்சம் காட்டமாவேதான் ஆரம்பித்திருக்கிறார் மு.க. ஸ்டாலின்.
தொடர்ந்து “மரியாதை நிமித்தமா நாம அவங்கள சந்திச்சு (தேமுதிக) பேசினோம். அவங்களும் நம்மள சந்திச்சுப் பேசினாங்க. சில டிமாண்ட் வெச்சாங்க. நாம சிலவற்றைப் பேசினோம். அதன்பின், அவங்க தனித்த முடிவச் சொல்லிட்டாங்க. இத, நீங்க பெரிசா எடுத்துக்க வேணாம்…அவங்க மீண்டும் வந்தா அதை நாங்க பார்த்துக்கிறோம். இதப் போட்டு நீங்க குழப்பிக்க வேணாம். நீங்க ஒவ்வொருவரும் 2 தொகுதிகளின் வெற்றிக்கு உறுதியெடுத்து மிக கடுமையா வேலை செய்தாலே, 130 தொகுதிகளில் நாம ஜெயிச்சு சோலோவாவே ஆட்சி அமைக்கலாமே…! மதுக் கொடுமை, வேலைவாய்ப்பின்மை, மழை வெள்ளம் என, மக்களோட பிரச்சினைகளைப் பேசுங்க. ஒருகாலத்துல சிங்கிள் டீ யை மட்டுமே குடிச்சுக்கிட்டு கழக பணியாற்றி வளர்ந்த கட்சி இது. அத ஒவ்வொருத்தரும் மனசுல வெச்சுக்கோங்க. டோர் டூ டோர் மக்களைப் பாருங்க. ஒவ்வொருவரும் இரண்டு தொகுதிகளை ஜெயிச்சே தீரனும்’..இதில் நீங்க தோல்வியடைஞ்சா மன்னிக்கவும், உங்க மா.செ. பதவி பறிக்கப்படும். இத, என்னுடைய அன்புக் கட்டளையா எடுத்துக்கோங்க’ என, கறார் உத்தரவிட்டுருக்காரு ஸ்டாலின். கடந்த, சில நாட்களாகவே தன்னைச் சந்திக்கவரும் மாவட்டச் செயலாளர்கள் எல்லோரிடமும் இதே விஷயத்தைத்தான் சொல்லி வருகிறார் ஸ்டாலின். தற்போதுள்ள மாவட்டச் செயலாளர்களில் 8 பேர்மீது பல்வேறு புகார்கள் இருக்கிறதாம். அதனால் அந்த 8 பேருக்கு மட்டும் இந்தமுறை சீட் கிடையாதாம்!’’ என்று ஸ்டேட்டஸ் போட்டது.

‘‘திமுக, அதிமுக இரண்டுமே ஊழல் கட்சிகள். இரண்டு கட்சிகளுக்கும் ஓட்டுப் போடாதீங்க.. என்று கேப்டன் டிவி பேட்டியில் நேற்று விஜயகாந்த் சொல்லியிருக்கிறார். ஆனால், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முடிந்தபிறகு தேமுதிக-வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்கிறது என்று செய்தியாளர்களிடம் சொல்லியிருக்கிறார் கருணாநிதி. இது எப்படி?’’ என்று கமெண்டில் கேள்விகேட்டது வாட்ஸ் அப்.
பதிலை ஸ்டேட்டஸாகப் போட்டது ஃபேஸ்புக். ‘‘தேமுதிக தனித்துப் போட்டி என்று அறிவித்திருக்கிறார்கள். அவர்கள் உங்கள் கூட்டணிக்கு வருவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தீர்கள். இந்த நிலையில் உங்கள் நிலைப்பாடு என்ன? என்று செய்தியாளர்கள் கேட்டார்கள். அதற்கு கருணாநிதி, ‘நான் தெரிவித்த நம்பிக்கையை என்னைப் பொறுத்தவரையில் இன்னும் இழந்துவிடவில்லை. கூட்டணி வரலாம்!’ என்று சொன்னார். விஜயகாந்த் பேசியது கருணாநிதிக்கும் தெரியாமல் இல்லை. ‘25ம் தேதிக்குள் விஜயகாந்தை கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டியது என்னோட பொறுப்பு. நான் பேசிக்கிறேன்!’ என்று கருணாநிதியிடம் உறுதி கொடுத்திருக்கிறாராம் ஸ்டாலின். அந்த தைரியத்தில்தான் கருணாநிதி அப்படியொரு பதிலைச் சொல்லியிருக்கிறார்!’’ என்று சொல்லிவிட்டு சைன் அவுட் ஆனது.









