ஜெ. நேர்காணல் லைவ் ரிப்போர்ட்
அதிமுக செய்தியுடன் ஆன்லைனில் வந்தது வாட்ஸ் அப். ‘‘போயஸ் கார்டனில் படுஜோராக நேர்காணலை நடத்தி வருகிறார் ஜெயலலிதா. நேற்று, தர்மபுரி மாவட்ட நிர்வாகிகளைச் சந்திப்பதாக இருந்தது. ஆனால், அவர்களைச் சந்திக்கவில்லை. இன்று காலை 11 மணிக்கு வரச்சொல்லி திருப்பி அனுப்பிவிட்டார்கள். இன்று காலை 11 மணிக்கு நேர்காணலுக்குப் போனவர்களை 12 மணிக்குத்தான் பார்க்க ஆரம்பித்திருக்கிறார். போயஸ் கார்டன் ரிசப்ஷனில் உட்கார வைக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கே அவர்களுக்கு தர்ப்பூசணி ஜூஸ் கொடுத்தார்களாம். ஒவ்வொருவராக பெயரைப் படித்து மாடிக்கு அனுப்பியிருக்கிறார்கள். ஹால் போன்ற பெரிய அறை அது. அங்கே, ஜெயலலிதா மட்டுமே இருந்தாராம். நேர்காணலுக்குப் போனவர் உள்ளேபோனதும் சாஷ்டாங்கமாக ஜெயலலிதாவை நோக்கி விழுந்து வணங்கியிருக்கிறார்கள். உள்ளே நடந்த உரையாடலை தர்மபுரி மாவட்டத்தில் இருந்து நேர்காணலுக்குப்போன ஒருவர் என்னிடம் அப்படியே சொன்னார்.
ஜெயலலிதா : வாப்பா…
தர்மபுரிக்காரர் ; (குனிந்தபடியே). வணக்கம்மா,,,
ஜெயலலிதா : வீட்டுல எல்லோரும் எப்படி இருக்காங்க?
தர்மபுரிக்காரர் : நல்லா இருக்காங்கம்மா…
ஜெயலலிதா : என்ன படிச்சிருக்கே?
தர்மபுரிக்காரர் : பி.எஸ்.சி- ஃபிசிக்ஸ்மா…
ஜெயலலிதா : எவ்வளவு வருஷமா கட்சியில இருக்கே?
தர்மபுரிக்காரர் : 13 வருஷமா இருக்கேம்மா.
ஜெயலலிதா : இதுவரைக்கும் என்ன பதவியில இருந்திருக்கே?
தர்மபுரிக்காரர் : ————– ( பதவிகளைச் சொல்கிறார்)
ஜெயலலிதா : எவ்வளவு செலவு செய்யமுடியும்?
தர்மபுரிக்காரர் : ரெண்டு கோடிம்மா…
ஜெயலலிதா : கட்சியில நல்லா வேலை செய்… நல்லது நடக்கும்.
தர்மபுரிக்காரர் : (மறுபடியும் விழுந்து கும்பிடுகிறார்)
ஜெயலலிதா : போய்ட்டு வா…
அவ்வளவுதான் நேர்காணல் முடிந்துவிடுகிறது. ஒருவருக்கு அதிகபட்சம் மூன்றில் இருந்து ஐந்து நிமிடங்கள் வரை ஆகிறது. யாருக்கும் போட்டோ எடுப்பது இல்லை. ‘‘செய்தியைப் படித்த ஃபேஸ்புக் அதை ஷேர் செய்துகொண்டது. அத்துடன் லைக்கும் போட்டது.
அப்படியே ஸ்டேட்டஸ்க்கும் தயாரானது. ‘‘கோபாலபுரத்தில் இன்று கருணாநிதியை ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு ஆகியோர் சந்தித்தனர். அப்போது காங்கிரஸ்-க்கு எத்தனை இடங்கள் ஒதுக்குவது என்பது பற்றி ஆலோசனை நடந்திருக்கிறது. ‘அவங்க 45 கேட்கிறாங்க. அவ்வளவு எப்படி கொடுக்கமுடியும்?’ என்று, ஸ்டாலின் கேட்டதாகச் சொல்கிறார்கள். அத்துடன் ஸ்டாலின் சில கணக்குகளையும் சொன்னாராம். அதன்படி பார்த்தால் 25 சீட்டில் இருந்து 35 வரை இறங்கி வரலாம் எனத் தெரிகிறது. காங்கிரஸ் அதற்கு ஒப்புக்கொள்ளுமா? என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது. வீட்டில் இருந்து வெளியே வந்தபோது பத்திரிகையாளர்களிடம் ஸ்டாலின் பேசும்போது, தமாக-வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக யார் சொன்னது. அப்படி எதுவும் இல்லை. நீங்களாகவே எதாவது கற்பனையாகப் பேசாதீர்கள்’ என்று சற்றுக் கோபமாகவே சொன்னார். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நாளை முடிந்துவிடுமா? என்று கேட்டதற்கு, ‘முடிந்ததும் நானே சொல்கிறேன்’ என்று பிடிகொடுக்காமலேயே பேசிவிட்டுப் போயிருக்கிறார். காங்கிரஸ்-க்கு 25 சீட், தமாக-வுக்கு 25 சீட் என, திமுக வட்டாரத்தில் ஒரு தகவல் பரவியது. இது, தமாகா-வினரே கிளப்பிவிட்டது என்ற டென்ஷனில்தான் ஸ்டாலின் அப்படி பேசியிருக்கிறார். அதிமுக-வில் தங்களது டிமாண்டை அதிகமாக்கிக்கொள்ள தமாகா-வினர் இப்படி செய்திருக்கலாம் என திமுக வட்டாரத்தில் நினைக்கிறார்கள். அதனால், தமிழ் மாநில காங்கிரஸ் இனி வேண்டாம் என்ற முடிவுக்கும் திமுக வந்துவிட்டதாகவே தெரிகிறது’’ என்பதை போஸ்ட் செய்தது.
ட்விட்டர் ட்விட்டுடன் ரெடியாக இருந்தது. ‘’இன்று காலை 10.20 மணிக்கு டெல்லியில் இருந்து கிளம்பும் விமானத்தில் சென்னைக்கு வருவதற்கு டிக்கெட் போட்டிருந்தாராம் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். ஆனால், கடைசி நேரத்தில் அதை கேன்சல் செய்துவிட்டார். ‘நீங்க அங்கேயே இருந்து ராகுலைச் சரி பண்ணுங்க. திமுக-வில் 35 சீட் வரைக்கும் நாங்க பேசுறோம்’ என்று கோபண்ணா சொன்னதாகச் சொல்கிறார்கள். 36 சீட் கொடுத்துட்டாங்கன்னா ராகுல் சமாதானம் ஆகிவிடுவார்’ என்று திருநாவுக்கரசரும் சொன்னாராம். இதற்கிடையில் டெல்லியில் குலாம்நபி ஆசாத்தை சந்தித்த தங்கபாலு, ‘ 50 சீட் வேண்டும் என்பதில் உறுதியாக இருங்க. அதுக்கு குறைச்சலா வாங்க வேண்டாம்.’ என்று சொல்லிட்டு வந்திருக்கிறார். எல்லா குழப்பங்களுக்கும் தீர்வு சொல்வதாக இருந்திருக்கிறது இன்று சோனியாவுடன் நடந்த திடீர் சந்திப்பு. இன்று சோனியாவை இளங்கோவன் சந்தித்தபோது, ‘திமுக-வுடன்தான் கூட்டணி என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அதை எப்படி சுமூகமாக கொண்டு போறதுன்னு பாருங்க!’ என்று சொன்னாராம் சோனியா. ‘அதெல்லாம் எதுவும் பிரச்சினை வராது மேடம்’ என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறார் இளங்கோவன்’’ என்ற ட்விட் வந்து விழுந்தது.

ஆஃப் லைனுக்குப் போவதற்கு முன்பாக வாட்ஸ் அனுப்பிய தகவல் இது .’’வாசன் அமைதியாகவே இருக்க என்ன காரணம் தெரியுமா? திமுக-வில் காங்கிரஸ்க்கு எவ்வளவு சீட் ஒதுக்குகிறார்கள் என்பதைப் பார்த்துவிட்டு கூட்டணி பற்றி பேசலாம் என நினைக்கிறார். திமுக-வில் காங்கிரஸ்-க்கு ஒதுக்கும் இடங்களைவிடக் குறைவாக வாங்கக் கூடாது என்பதால்தான் அதிமுக-வில் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறாராம் வாசன்!’’,”









