’’சொன்னபடியே விஜயகாந்த்க்கும் கலாநிதி மாறனுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையை அப்படியே கொடுத்துவிட்டீர்.. சூப்பர். இன்னைக்கு ஊரெல்லாம் இதுதான் பேச்சு…’’ பொக்கே சிம்பள் அனுப்பியது வாட்ஸ் அப். அத்துடன் ஒரு தகவலையும் தட்டிவிட்டது.
‘’பேச்சுவார்த்தை முடிந்துவிட்டாலும் அதை விஜயகாந்த் காட்டிக்கொள்ளாமல் இருக்கிறார். நேற்று காலை திருக்கோவிலூருக்குக் கிளம்பும்போது ‘என்னய்யா… எல்லோரும் திமுக, திமுகன்னு சொல்றீங்க. அவங்க யாரும் பேசுறதுக்கு வரவே மாட்டேங்குறாங்களே!’ என்று அங்கிருந்தவர்களிடம் கேட்டிருக்கிறார். ‘தெரியலையே கேப்டன்’ என்று அங்கிருந்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள். சினிமாவில் ஓகே… அரசியலிலும் விஜயகாந்த் நன்றாகவே நடிக்கிறார். சுதீஷிடம் மாவட்டச் செயலாளர்கள் சிலர் தொடர்ந்து பேசி வருகிறார்கள். அவர்கள் எல்லோரிடமும், ‘நல்லதே நடக்கும் கவலைப்படாதீங்க!’ என்று சொல்லி வருகிறார் அவர். கலாநிதி மாறனுடம் நடந்த பேச்சுவார்த்தையின்போது உள்ளாட்சியில் 30 சதவிகிதம் கேட்டார் அல்லவா விஜயகாந்த்!. அதில்தான் ஸ்டாலினுக்கு கொஞ்சம் நெருடல் இருக்கிறது. அங்க கேட்ட 59 கணக்குப்படி பார்த்தால் 25 சதவிகிதம்தானே வருது என்று, அவர் சொல்லியிருக்கிறார். அதனால் உள்ளாட்சியில் இடம் ஒதுக்குவது தொடர்பான பேச்சுவார்த்தை மட்டும் இன்னும் இழுபறி நீடிக்கிறது’’
சைன் இன் ஆன ஃபேஸ்புக், வாட்ஸ் அப் தகவலைப் படித்துவிட்டு போட்டது ஸ்டேட்டஸ். ‘’திமுக- தேமுதிக கூட்டணி அமைந்துவிடக்கூடாது என்பதில் அதிக அக்கறை காட்டுவது அதிமுக-தான். காவல் துறையில் உள்ள சிலர், அமைச்சர்கள் என்று ஒவ்வொருவரும் தங்கள் பங்குக்கு இறங்கி வேலை பார்க்கிறார்கள். தென்மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர், ‘திமுக-வை நம்பிப் போகாதீங்க. உங்க எதிர்காலமே வீணாகிடும். திமுக வேண்டாம்னு சொல்லுங்க.. உங்களுக்கு என்ன வேணுமோ நான் செய்யுறேன்’ என்று தேமுதிக மாவட்டச் செயலாளர் ஒருவரிடம் பேசியிருக்கிறார். அதற்கு அந்த மாவட்டச் செயலாளரோ, ‘போன தடவை நீங்கதான் அதிமுக வேணும்னு கேப்டன்கிட்ட பேசச் சொன்னீங்க. நாங்க எல்லோரும் பேசினோம். கூட்டணி அமைஞ்சுது. நீங்க எல்லோரும் ஜெயிச்சு மந்திரி ஆகிட்டீங்க. அதுக்குப் பிறகு எங்களை கொஞ்சமாவது கண்டுக்கிட்டீங்களா? எது நல்லதுன்னு எங்களுக்குத் தெரியும்’ என்று கோபமாகவே சொல்லிவிட்டாராம். இப்படித்தான் தூது வருபவர்களிடம் எல்லாம் பேச ஆரம்பித்துள்ளனர் மாவட்டச் செயலாளர்கள்.
இன்னொரு பக்கம் பிஜேபி-யிடம் அதிமுக-வின் மேல்மட்டத்தில் உள்ள சிலர் பேசியிருக்கிறார்கள். ‘எப்படியாவது தேமுதிக கூட்டணியைப் பேசி முடிங்க. அவங்க என்ன சொன்னாலும் ஓகே சொல்லுங்க’ என்று சொன்னதாகச் சொல்கிறார்கள். அந்த அசைன்மெண்ட்டுக்காகத்தான் ஜவ்டேகர் சொல்லாமல் கொள்ளாமல் வருவதும், பின்வாசல் வழியாக ஓடுவதும், காரில் யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக படுத்துக்கொண்டு பயணிப்பது என்றெல்லாம் சர்க்கஸ் வேலை காட்டி வருகிறார்.’’
சிரித்தபடியே லைக் போட்டது ட்விட்டர். ‘’அதிமுகவில் யாருக்கு சீட் என்ற விவாதம் கார்டனில் சீரியஸாக நடக்கிறது. விருப்பமனு கொடுத்தவர்களின் விபரங்கள் ஜெயலலிதா பார்வைக்குப் போய்விட்டது. அதுதவிர, மாவட்டச் செயலாளர்களிடம் இருந்தும் ஒரு லிஸ்ட் வாங்கியிருக்கிறார் ஜெயலலிதா. உளவுத்துறை மூலமாகவும் ஒரு லிஸ்ட் போயிருக்கிறது. எல்லாவற்றையும் வைத்து வேட்பாளர்களை டிக் அடித்து வருகிறார். புகார்களில் சிக்கிய சில சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் பெயர்கள் அந்த லிஸ்டில் இல்லை. சின்னையா, ரமணா, செந்தில்பாலாஜி, பரஞ்ஜோதி, சண்முகநாதன் ஆகியோருக்கு சீட் இல்லை என்று சொல்கிறார்கள் கார்டன் வட்டாரத்தில். அந்த லிஸ்டில் முக்கியமான அமைச்சர்கள் இருவர் சேர்ந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை’’ என்று அடித்தது ட்விட்.,”









