டிஜிட்டல் திண்ணை -தனித்துப் போட்டி? விஜயகாந்த் திடீர் மூவ்!

By Balaji

|

Published on 12 Apr 2016, 12:00 AM

’பிஜேபியுடன் பேச்சுவார்த்தை நடத்த, தேமுதிக-வில் இருந்து யாரும் டெல்லிக்குப் போகவில்லை!’ தேமுதிக-வில் இருந்து இப்படி அறிக்கை இன்று மதியம் வந்தது. ஆனால், சுதீஷும், பிரேமலதாவும் டெல்லியில் இருப்பதை பிஜேபி-யில் உள்ள சிலர் உறுதியாகச் சொல்ல ஆரம்பித்துள்ளனர்! என்ற தகவலுடன் ஆன்லைனில் வந்தது வாட்ஸ் அப்.

அதேநேரத்தில், தேமுதிக தகவல்களுடன் ஸ்டேட்டஸ் அப்டேட் செய்திருந்தது ஃபேஸ்புக். ‘’மார்ச் 1ம் தேதி, தேமுதிக நேர்காணல் முடிந்துவிட்டது. ஆனாலும் கோயம்பேட்டில் உள்ள அலுவலகம் தேமுதிக அலுவலகத்துக்கு ஆட்கள் வந்துபோனபடியேதான் இருக்கிறார்கள். கடந்த 2ம் தேதியில் இருந்தே ஆட்கள் காரில் வருவதும், கையில் மஞ்சள் பை, கேரி பேக் சகிதமாக உள்ளேபோவதும் வருவதுமாக இருக்கிறார்கள். கோயம்பேடு பக்கமுள்ள ஒரு டீ கடையில் ஒதுங்கினேன். அங்கே வந்த தேமுதிக-வினர், 234 தொகுதிக்கும் வேட்பாளர்களை விஜயகாந்த் தேர்வு செய்துவிட்டதாகச் சொல்கிறார்கள். ஒவ்வொரு தொகுதிக்கும் 2 வேட்பாளர்களை தேர்வு செய்திருக்கிறாராம் விஜயகாந்த். இரண்டில் ஒன்று யார் என்பதையும் முடிவு செய்துதான் சென்னைக்கு வரச் சொல்லியிருக்கிறார்கள். பொதுத் தொகுதிக்கு போட்டியிடப் போகிறவர்களை 50 லட்சம் ரூபாயும், தனித் தொகுதிகளில் போட்டியிடப் போகிறவர்களை 25 லட்சம் ரூபாயும் உடனடியாக கட்டச் சொல்லியிருக்கிறார்கள். அந்தப் பணத்தை கட்டுவதற்காகத்தான் வந்திருப்பதாக அவர்கள் சொல்கிறார்கள். ‘எப்படியும் திமுக-வோட கூட்டணி முடிவாகிடும்… எம்.எல்.ஏ. ஆகிடலாம்!’ என்று உற்சாகமாகப் பேசியபடி போனார்கள் பணம்கட்டிய சிலர்.

ADVERTISEMENT

கட்சி ஆரம்பித்ததும் 2006 தேர்தலில் எப்படி 234 தொகுதிகளிலும் தேமுதிக, எப்படி தனித்துப் போட்டியிட்டதோ அந்த வேகத்துடன் இப்போது வேலைகள் நடக்கிறது. மாவட்டம் தோறும் உள்ள கட்சி அலுவலகங்களில் பேனர்கள், கொடிகள் எல்லாம் தயாராக இருக்கிறது. சமூக வலைதளங்கள் உள்ளிட்ட டெக்னிக்கலான விஷயங்களையும் அப்டேட் செய்தபடியே இருக்கிறார்கள். பிரச்சாரத்துக்கான வேன், குறும்படங்கள் என எல்லாமே ரகசியமாகத் தயார் செய்யப்பட்டுவிட்டது.

சில தினங்களுக்கு முன்பு கொள்கை பரப்புச் செயலாளர் சந்திரகுமார் பெயரில் ஒரு அறிக்கை வந்தது. அதில், ‘கேப்டன் தைரியமாக முடிவை அறிப்பார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தைரியமாக எந்த முடிவையும் எடுக்கக்கூடியவர் என்று எல்லோருக்கும் சொல்லாமல் சொல்லவே, அந்த வார்த்தையை பயன்படுத்தி இருப்பதாகச் சொல்கிறார்கள். எதுவும் ஒத்துவராதபட்சத்தில் தனித்துப் போட்டி என்ற முடிவையும் விஜயகாந்த் எடுக்கலாம். அதற்கும் அவர் தயாராக இருப்பதாகச் சொல்ல ஆரம்பித்துள்ளனர் தேமுதிக-வினர்.’’

ADVERTISEMENT

‘’அப்படியா?’’ என்று அதிர்ச்சியுடன் வந்து கேட்டது வாட்ஸ் அப். பதிலை அடுத்த ஸ்டேட்டஸாக போட்டது ஃபேஸ்புக்.’’அப்படித்தான். விஜயகாந்த் எது சொன்னாலும் அதற்கு உடனே ரியாக்‌ஷன் செய்வது ஜெயலலிதாதான். காஞ்சிபுரம் மாநாட்டில், ஓ.பன்னீர்செல்வத்தையும், நத்தம் விஸ்வநாதனையும் வறுத்தெடுத்தார் விஜயகாந்த். விஜயகாந்த் பேசிய பிறகுதான் பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும், நத்தம் விஸ்வநாதன் ஆதரவாளர்களும் பொறுப்பில் இருந்து தூக்கப்பட்டார்கள். ஜெயலலிதா யாருடைய பேச்சை கவனிக்கிறாரோ இல்லையோ, விஜயகாந்த் பேச்சை தொடர்ந்து கவனித்து வருகிறார். அதேநேரத்தில் விஜயகாந்த்துக்கு டெல்லியில் உள்ள, அவருக்கு நெருக்கமான வழக்கறிஞர்கள் சிலர் ஒரு தகவலைச் சொல்லியிருக்கிறார்கள். அதுதான், கூட்டணி தொடர்பாக விஜயகாந்த் முடிவெடுக்காமல் இவ்வளவு தூரம் இழுப்பதற்குக் காரணம் என்கிறார்கள். ‘சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையில் எப்படியும் தேர்தலுக்குமுன்பு தீர்ப்பு வந்துவிடும். தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு எதிராக இருக்கும்பட்சத்தில் அது தங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்று விஜயகாந்த் நம்புகிறார். வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 22ம் தேதிதான் தொடங்குகிறது. அதுவரை காத்திருப்போம் என்று கணக்குப் போடுகிறார். திமுக தரப்பில் வராங்க.. பேசிட்டு போறாங்க.. தொடர்ந்து யாரும் ஃபாலோ அப் பண்ண மாட்டேங்குறாங்களே என்பதுதான் விஜயகாந்த்தின் வருத்தமாம்! எப்படிப் பார்த்தாலும் விஜயகாந்த் இழுவை இன்னும் சில வாரங்கள் தொடரும்போலவே இருக்கிறது! ஆனால், இன்னும் ஓரிரு நாட்களில் ஒரு அதிரடி மூவ் இருந்தாலும் ஆச்சர்யமில்லை!’’

ஸ்டேட்டஸ்க்கு லைக் போட்ட ட்விட்டர், பைனல் டச் ஆக அடித்த ட்விட்.’’இரண்டு மாதங்களுக்கு முன்பு அதிமுக-வில் உள்ள சிலரது வீட்டுக்கு ஒரு டீம் போயிருக்கிறது. ‘எலெக்‌ஷனுக்கு எவ்வளவு செலவு பண்ண முடியும்..’ என்று தொடங்கி பல்வேறு கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள். நீங்க யாரு? என்று கேட்டதுக்கு, ’தேவைப்படும்போது சொல்றோம்’ என்று சொல்லிவிட்டுப் போனார்களாம். அதுதான் இளவரசியின் மகன் விவேக் அனுப்பிய டீம் என்கிறார்கள். அந்த டீம் கொடுத்த லிஸ்ட்டை வைத்துத்தான் வேட்பாளர் பட்டியலை ஃபைனல் செய்திருக்கிறார் ஜெயலலிதா. மதுசூதனன், தமிழ்மகன் உசேன், ஜஸ்டின் செல்வராஜ் ஆகிய மூவர் மட்டும்தான் ஜெயலலிதா நேர்காணல் நடத்தியபோது உடனிருந்தவர்கள். அதிமுக-வில் பவர் புல்லாக இருந்த ஐவர் அணிக்கு அழைப்பு இல்லையாம். ’நேர்காணலுக்கே தகவல் இல்லை… சீட் கிடைக்குமா!’ என்று பயத்தில் இருக்கிறது ஐவர் அணி.’’

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel