திமுக விட்டுக்கொடுத்த சீக்ரெட் பின்னணி
பூங்கொத்துகளை அனுப்பியபடியே ஆன்லைனில் வந்தது வாட்ஸ் அப். ‘‘ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து குஷ்பு போட்டியிடப் போகிறார் என்ற செய்தியை முதலில் சொன்னது மின்னம்பலம்தான். வாழ்த்துகள்!’’
சற்றுநேரத்தில் அடுத்த செய்திக்கு செண்ட் கொடுத்தது வாட்ஸ் அப். ‘‘கடந்த தேர்தலில் ஜாதகம் பார்த்து ஸ்ரீரங்கத்தில் போட்டியிட்டார் ஜெயலலிதா. ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால் பதவி இழந்தார். பிறகு, வழக்கில் இருந்து விடுதலையாகி வந்தவர் மீண்டும் ஸ்ரீரங்கத்துக்குப் போகவில்லை. அதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், முதல் காரணம் ஜெயலலிதாவின் உடல்நிலை. நீண்டதூரப் பயணம், நீண்டநேரம் நிற்பது எல்லாம் அவரால் முடியவில்லை. அதனால், சென்னைக்குள் ஒரு தொகுதியில் போட்டியிட்டால், பிரச்சாரத்துக்குப் போவதும் எளிது என ஜெயலலிதா நினைத்தார். ஜெயலலிதாவை நீதிமன்றம் விடுதலை செய்தது 11ம் தேதி. அதனால், அந்த நெம்பரே அவரது ராசியான எண் என்று ஜோதிடர்கள் சொல்ல ஆரம்பிக்க ஜெயலலிதாவும் அதை நம்பினார். அதனால், சென்னைக்குள் தொகுதியை தேர்வு செய்யும்போதும் இந்த விஷயத்தை அவர் மறக்கவில்லை. சட்டமன்றத் தொகுதிகள் பட்டியலில் 11ம் இடத்தில் இருந்தது ஆர்.கே.நகர். அந்த காரணத்தினாலேயே யாரும் கண்டுகொள்ளாமல் வட சென்னையில் இருந்த ஆர்.கே.நகரை ஓ.கே. செய்தார். இடைத் தேர்தலில் ஜெயித்தார். ஆர்.கே.நகர் மிளிர ஆரம்பித்தது. இதோ, மீண்டும் அதே ஆர்.கே.நகரில் ஜெயலலிதா போட்டியிடுகிறார்.
தமிழகம் முழுக்க 14 நகரங்களில் ஜெயலலிதா பிரச்சாரம் செய்கிறார். ஒவ்வொரு ஊருக்குப் போகும்போதும் அந்த ஊருக்கு அருகேயுள்ள தொகுதி வேட்பாளர்களை வரவழைத்து அறிமுகம் செய்கிறார். ஒவ்வொரு பிரச்சாரத்துக்கும் இடையில் இரண்டு நாட்கள் பிரேக் எடுத்துக் கொள்கிறார். காரணம், அவரது உடல்நிலைதான். சென்னையில் இருந்து காலையில் கிளம்பி, மாலைக்குள் சென்னைக்குத் திரும்பி விடுவதுதான் ஜெயலலிதா பிளான். வெளியூரில் இரவு தங்குவது இல்லை. மதுரை, தூத்துக்குடி, கோவை, சேலம் ஆகிய ஊர்களுக்கு விமானத்திலும், அங்கிருந்து மீட்டிங் நடக்கும் இடத்துக்கு ஹெலிகாப்டரிலும், ஹெலிபேடில் இருந்து மேடைவரை காரிலும் செல்வது திட்டம்.’’
வாட்ஸ் அப்பில் வந்த செய்தியைப் படித்து ஷேர் செய்தது ஃபேஸ்புக். அப்படியே ஸ்டேட்டஸும் தயாராக வைத்திருந்தது.
‘‘ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவை எதிர்த்து யாரை நிறுத்தலாம் என திமுக-வில் கடந்த ஒரு வாரமாகவே டிஸ்கஷன் நடக்கிறது. முதலில் முன்னாள் மேயர் மா.சுப்ரமணியன் பெயரைத்தான் சிலர் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், ஜெயலலிதாவை எதிர்த்து ஒரு பெண் வேட்பாளரை களமிறக்கலாம் என ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். அப்போது உச்சரிக்கப்பட்ட பெயர், தமிழச்சி தங்கபாண்டியன். முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியனின் மகள். மேடைப் பேச்சாளர், கவிஞர், பேராசிரியர் எனப் பல முகங்களுக்குச் சொந்தக்காரர். இவரது கணவர் சந்திரசேகர்தான் கடந்த திமுக ஆட்சியில் உளவுத்துறை எஸ்.எஸ்.பி. ஆக இருந்தவர். இவருக்கு ராஜ்யசபா எம்.பி. கொடுக்கலாம் என்று கடந்தமுறை பேசப்பட்டது. ஆனால், ஏதோ காரணத்தால் அது அப்போது நடக்கவில்லை. ‘படிச்சவங்களுக்கு தமிழச்சியை நல்லாத் தெரியும். ஆனால், ஆர்.கே.நகர் ஸ்லம் ஏரியா. அங்கே இருக்கும் மக்களுக்கு தமிழச்சியை நாம் அறிமுகம் செய்வதற்குள் எலெக்ஷன் முடிஞ்சிடும்’ என்று முன்னாள் அமைச்சர் ஒருவர் சொல்லியிருக்கிறார். அந்த நேரத்தில்தான், ‘குஷ்புவை நிறுத்தினால் என்ன?’ என்ற பேச்சு வந்திருக்கிறது. ‘நல்ல சாய்ஸ்… ஜெயலலிதாவை எதிர்த்து துணிச்சலாகப் பேசுறதுக்கு அவர்தான் சரியாக இருப்பாரு. இளங்கோவனிடம் பேசுவோம்’ என்று சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். கடந்த சனிக்கிழமை இரவு ஈவிகேஎஸ்.இளங்கோவனிடம் ஸ்டாலின் பேசி, ‘குஷ்புவை ஆர்.கே.நகர் தொகுதியில் நிறுத்தினால் சரியா இருக்கும் என்று நாங்க நினைக்கிறோம்’ என்று சொன்னாராம். அதற்கு இளங்கோவன், ‘நான் குஷ்புவிடம் பேசுறேன். இதுபற்றி எங்க கட்சி தலைமையிலும் பேசிடுறேன்’ என்று சொல்லியிருக்கிறார்.
குஷ்புவிடம் இளங்கோவன் விஷயத்தைச் சொன்னபோது, ‘கொஞ்சம் டிஸ்கஷன் பண்ணிட்டுச் சொல்றேன்’ என்று அவர் சொன்னாராம். அதன்பிறகு ஞாயிறு அன்று காலை, ஓ.கே. சொல்லியிருக்கிறார் குஷ்பு. அதன்பிறகுதான் இளங்கோவன் டெல்லிக்குப் பேசியிருக்கிறார். ‘குஷ்புகிட்ட கேளுங்க. அவர் விரும்பினால் தாராளமாக நிற்கட்டும்’ என்று சொல்லிவிட்டார்களாம். டெல்லியில் இருந்து கிரீன் சிக்னல் வந்துவிட்டதாம்.
இளங்கோவன் விஷயத்தை ஸ்டாலினிடம் சொல்ல, உடனடியாக கருணாநிதியைச் சந்திக்க ஏற்பாடு நடந்தது. இன்று காலை கோபாலபுரத்துக்கு வந்தார் இளங்கோவன். ஆர்.கே.நகரில் குஷ்பு போட்டியிடுவதுபற்றி சொல்லியிருக்கிறார். ’எனக்கு மிகுந்த மகிழ்ச்சி!’ என்று சொன்னாராம் கருணாநிதி. ‘‘இந்த ஸ்டேட்டஸ்தான் போஸ்ட் ஆனது.
‘‘ஆர்.கே.நகர்தான் திமுக-விடம் இருந்த தொகுதியாச்சே?’’ கமெண்ட் ஆக கேள்வியைத் தட்டியது வாட்ஸ் அப்.
பதிலை அடுத்த ஸ்டேட்டஸாகப் போட்டது ஃபேஸ்புக்.
‘‘இதுபற்றியும் இன்று பேசியிருக்கிறார்கள். ‘ஆர்.கே.நகர் தொகுதியை நாங்கள் விட்டுக் கொடுக்கிறோம். அதற்குப் பதிலாக நீங்க எங்களுக்கு ராயபுரம் தொகுதியைக் கொடுத்துடுங்க’ என்று திமுக தரப்பில் இருந்து கேட்டிருக்கிறார்கள். இளங்கோவனோ, ‘முசிறி தொகுதியை நீங்க எடுத்துக்கோங்க’ என்று சொன்னதாகச் சொல்கிறார்கள். ஆனாலும் அதுபற்றி தொகுதி பங்கீட்டுக் குழுவுடன் பேசிவிட்டுச் சொல்வதாக இளங்கோவன் சொல்லியிருக்கிறார். அதில் எதுவும் சிக்கல் இருக்காது என்று சொல்கிறார்கள். ஜெயலலிதாவை எதிர்த்து நின்று ஜெயிப்பது சற்று கஷ்டம் என்பது தெரிந்தும் குஷ்பு, இதற்கு எப்படி ஓ.கே. சொன்னார் என்ற கேள்வியை காங்கிரஸ்காரர்களே பலரும் கேட்க ஆரம்பித்துள்ளனர். ஆனால், குஷ்பு தெளிவாக இருக்கிறார். அவருடைய டார்கெட் டெல்லி அரசியல்தான். அதனால் இங்கே நின்று தோற்றாலும் அதைப்பற்றி அவர் கவலைப்படவில்லை. ஜெயலலிதாவை எதிர்த்து நிற்பது என்பது அவரது அரசியல் பயணத்தில் ஒரு மைல்கல்லாகவே நினைக்கிறார். ஜெயலலிதாவுக்கு எதிராகப் பேச மழை என்ற முக்கியமான விஷயம் கையில் இருக்கிறது. அதைவைத்து ஆர்.கே.நகர் மக்களின் பார்வையைத் தன்பக்கம் திருப்பிவிடலாம் எனவும் யோசிக்க ஆரம்பித்துவிட்டார் குஷ்பு. ஆர்.கே.நகரில் ஜெயலலிதா போட்டியிடுகிறார் என்பதால் திமுக-வினர் சற்று சுணக்கமாகவே இருந்தனர். திமுக கூட்டணியில் குஷ்பு என்று தெரிந்ததும் அவர்களும் உற்சாகமாகிவிட்டனர்’’ ஸ்டேட்டஸ்க்கு போஸ்ட் கொடுத்தது.
கிளைமாக்ஸில் வந்தது ட்விட்டர். ‘‘திமுக-வின் தேர்தல் அறிக்கைபற்றி கடந்த சனிக்கிழமை டிஜிட்டல் திண்ணையில் விலாவாரியாக இருந்தது. ‘அதிமுக-வை மிரட்டும் திமுக தேர்தல் அறிக்கை!’ என்பதுதான் அன்று வைத்த தலைப்பு. அது, நூறு சதவிகிதம் நிஜமாகியிருக்கிறது. விவசாயக் கடன் ரத்து, மதுவிலக்கு, மாவட்டம்தோறும் வேலைவாய்ப்பு ஏற்படுத்துவது என்று அதில் சொல்லப்பட்டிருந்த அத்தனை விஷயங்களும் நேற்று கருணாநிதி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அப்படியே இருந்தது. உண்மையிலேயே, திமுக-வின் தேர்தல் அறிக்கையைப் பார்த்து ஜெயலலிதா ஜெர்க் ஆகித்தான் இருக்கிறார்!’’ என்று, ட்விட் அடித்துவிட்டு சைன் அவுட் ஆனது.,”










