சைன் இன் ஆனதும் ஃபேஸ்புக் போட்ட ஸ்டேட்டஸ் இது. ’’ ‘தேமுதிக மக்கள் நலக் கூட்டணியில் சேரவேண்டும் எனக் கூறுவதன் பொருள் மக்கள் நலக் கூட்டணி தேமுதிக தலைமையிலான கூட்டணியில் சேராது என்பதுதான்.’ – இதை நான் சொல்லவில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ரவிகுமார் சொல்லியிருக்கிறார். அவரே, ‘தமிழ்நாட்டில் திமுக அதிமுகவுக்கு மாற்றாக ஒரு அணியை அமைக்கப்போவதாகக் கூறும் தேமுதிக தனது அணியில் சாதி அமைப்புகளை சேர்ப்பதில்லை என அறிவிக்கவேண்டும்.
வெறுப்புக் குற்றங்களுக்கும் கூலிப்படைகளுக்கும் சாதி அமைப்புகளே ஊற்றுக்கண் என்பதை தேமுதிக உணரவேண்டும்’ என்று ஒரு வேண்டுகோளையும் வைத்திருக்கிறார். மக்கள் நல கூட்டணியை பொறுத்தவரை, விஜயகாந்த் வேண்டுமானால் இங்கே வரட்டும். நாம் அங்கே போக வேண்டாம் என்றுதான் நினைக்கிறது. முதல்வர் வேட்பாளர் விஷயத்தில் வைகோவுக்கு மாற்று கருத்து இருக்கிறது. அதைத்தான் மக்கள் நல கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் எப்படி சமாளிக்கப் போகிறதோ?’’
படித்துவிட்டு லைக் போட்ட வாட்ஸ்ட் அப் தான் கொண்டு வந்த் தகவல டைப் செய்ய ஆரம்பித்தது.
‘’திமுகவுடன் தேமுதிக கூட்டணி சேரப் போகிறது, அதற்கான பேச்சுவார்த்தை நடக்கிறது என்று கடந்த சில நாட்களாகவே தேமுதிகவில் உள்ள நிர்வாகிகள் பேசியபடி இருக்கிறார்கள். தேமுதிவில் உள்ள சிட்டிங் எம்.எல்.ஏக்கள் தொடங்கி, மாவட்டச்செயலாளர்கள் என்று முக்கியமானவர்களுக்கும் அந்த நம்பிக்கை இன்னும் இருக்கிறது. அதற்கு என்ன காரணம் என்று விசாரித்தேன். 234 தொகுதிக்கும் வேட்பாளர்களை முடிவு செய்து அவர்களை சென்னைக்கு வரவழைத்து பொது தொகுதிக்கு 50 லட்சமும், தனி தொகுதிக்கு 25 லட்சமும் வாங்கியிருக்கிறார்கள் என்பதை நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். அப்படி பணம் கட்டியவர்களில் சிலர் தொடர்ந்து தேமுதிக அலுவலகத்துக்கு வந்தபடி இருக்கிறார்கள். ‘திமுகவுடன் கூட்டணி முடிவாகிவிடும் என்பதால்தான் நாங்க பணம் கட்டினோம். தனித்து போட்டின்னா எங்களால அவ்வளவு செலவு பண்ண முடியாது. பணத்தை திருப்பி கொடுத்துடுங்க!’ என்று கேட்கிறார்களாம். அப்படி கேட்பவர்களிடம், ‘திமுகவுடன் கூட்டணி இல்லைன்னு இன்னும் உறுதியாக யாரு சொன்னது. எல்லாம் பேசிட்டுதான் இருக்காங்க. எலெக்ஷனுக்கு இன்னும் நாள் இருக்கு. அவசரப்பட வேண்டாம்!’ என்று சொல்லி அனுப்புகிறார்கள் தேமுதிக அலுவலகத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகள் சிலர். அதுதான் இப்போது தேமுதிகவினரின் பேச்சுக்கு காரணமாகி இருக்கிறது.
திமுக வட்டாரத்தைப் பொறுத்தவரை, விஜயகாந்த் வராமல் போனதில் உள்ள கோபம் இன்னும் குறையவே இல்லையாம். தன்னை பார்க்க வரும் முக்கியமானவர்களிடம், ‘இவரு எதுக்கு அவரை அனுப்புறாரு? அவரே போயிருக்கலாம் இல்ல… நமக்கு வேணும்னா நாமதானே போகணும்!’ என்று சொல்லியபடி இருக்கிறாராம்.’’ வாட்ஸ் அப் தகவல் வந்து விழுந்தது.
டாப்பிக்கை அதிமுக பக்கம் திருப்பியது ஃபேஸ்புக். ‘’அதிமுகவின் ஐவர் அணியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், பழனியப்பன் ஆகியோரை அந்த அணியில் நீக்கினார் ஜெயலலிதா. ஆனாலும் ஜெயலலிதாவின் கோபம் குறையவே இல்லை. அதற்கு காரணம், நான் முன்பே சொன்னதுதான்… ‘எம்.எல்.ஏ. சீட் வாங்கித் தருவதாகச் சொல்லி இந்த மூவரும் அதிமுகவினர் பலரையும் தங்களது வீட்டுக்கு வர வழைத்துப் பேசியிருக்கிறார்கள். அப்படியானால் கட்சியை உடைக்கப்பார்க்கிறார்களா? என ஜெயலலிதாவுக்கு கோபம். இன்றும் நத்தம் விஸ்வநாதனின் ஆதரவாளர்கள் பலரை அந்த பொறுப்பில் இருந்து தூக்கியிருக்கிறார் ஜெயலலிதா.திண்டுக்கல் மாவட்ட தகவல் தொழில் நுட்பப் பிரிவு செயலாளர் தர்மலிங்கம், சாணார்பட்டி ஒன்றிய ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் சுப்பிரமணி, நத்தம் சட்டமன்ற தொகுதி பொதுக்குழு உறுப்பினர் மேட்டுக்கடை செல்வராஜ் ஆகியோரின் பதவிகள் பறிபோயிருக்கிறது. பதவி பறிக்கப்பட்ட மூன்று பேரும் நத்தம் விஸ்வநாதனின் மருமகன் கண்ணனுக்கு நெருக்கமானவர்கள். சுப்ரமணி என்பவர் கல்லூரியில் பேராசியராக இருந்தவர். கண்ணனுக்காக வேலையை ராஜினாமா செய்துவிட்டு வந்து கட்சியில் சேர்ந்தார். பணம் தொடர்பான விஷயங்களை டீல் செய்வது இந்த சுப்ரமணிதான். அமைச்சர் சம்பந்தப்பட்ட டெண்டர் விஷயங்களை கவனித்தவர் மேட்டுக்கடை செல்வராஜ். அதேபோல தர்மலிங்கம் என்பவரும் கண்ணனின் நண்பரே. இப்படியாக நத்தம் விஸ்வநாதனுக்கு மிக முக்கியமான ஆட்களாக இருந்த மூன்று பேரின் பதவியையும் பறிபோயிருக்கிறது.
இன்னொரு பக்கம் பழனியப்பன் அமைச்சராக ஆன பிறகு வாங்கிய சொத்துக்கள் என்ன என்ற பட்டியலை எடுக்கப்பட்டுள்ளது. அதில் பழனியப்பனின் பினாமி பெயரில் வாங்கிய சொத்துக்களின் விபரங்களும் அடக்கம். இந்த பட்டியலைப் பார்த்து ஜெயலலிதா அதிர்ந்துவிட்டாராம். அடுத்து பழனியப்பன் வகையறாக்கள் பதவி பறிப்பு அறிவிப்பு வரும் என்று சொல்கிறார்கள். கட்சி நிகழ்ச்சிகள் எதற்கும் இந்த மூன்று அமைச்சர்களுக்கும் அழைப்பு இல்லையாம். எங்கே போவது என தெரியாமல் பன்னீர்செல்வமும், நத்தம் விஸ்வநாதனும் தவிக்கிறார்கள். வீட்டில் தங்கியிருந்தால் கட்சிக்காரர்கள் சந்திக்க வருவார்கள்… தேவையில்லாத சங்கடம் வரும் என்பதால் சென்னையின் பிரபலமான நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் ஏழாவது மாடியில் பன்னீர்செல்வமும், நத்தம் விஸ்வநாதனும் ரூம் போட்டு தங்கியிருக்கிறார்கள்.’’ – ஸ்டேட்டஸ்க்கு லைக் போட்டதுடன் ஷேர் செய்து கொண்டது வாட்ஸ் அப்.
ஃபைனல் டச் கொடுக்க ட்விட்டர் வந்தது. ‘’கடந்த சில நாட்களாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவனுக்கு உடல்நிலை சரியில்லை. மருத்துவமனைக்கு செக் அப்க்கு போயிருக்கிறார். ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டியது அவசரம் என மருத்துவர்கள் சொல்ல.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளங்கோவனுக்கு ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டுள்ளது. தற்போது நலமாக இருக்கிறார் இளங்கோவன்!’’ என்று ட்விட் அடித்துவிட்டு, சைன் அவுட் ஆனது.,”









