வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது. வந்ததும் கொட்டிய முதல் செய்தி இது. ’’ஸ்ரீரங்கத்தில் காரில் கொண்டுசென்ற, கணக்கில்வராத 5 கோடி ரூபாய் பணம் பறிமுதல்… சென்னையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச்சென்ற தங்கம் பறிமுதல்… இப்படியான செய்திகள் கணக்கில்லாமல் வந்தபடி இருக்கின்றன.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், தமிழகம் முழுக்க அதிகாரிகள் சோதனையில் ஈடுபட ஆரம்பித்தனர். இதற்காக, ஏ.டி.ஜி.பி. ஆபாஷ் குமார் தலைமையில் மூன்று ஐ.ஜி-க்கள் அடங்கிய டீம் அமைக்கப்பட்டுள்ளது. ஏடிஜிபி ஆபாஷ்குமாருக்கு டிஜிபி அலுவலகத்திலேயே அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கிருந்தபடிதான் அவர் வேலைகளை முடுக்கிவிடுகிறார். அதெப்படி பணம் கொண்டுபோகும் காரை மட்டும் இவர்கள் கரெக்ட்டாக மடக்கிப் பிடிக்கிறார்கள் என்ற சந்தேகம் எல்லோருக்கும் உண்டு. நானும் அதுபற்றி விசாரித்தேன். ஒருவர் பணம் கொண்டுபோகும் விஷயம் அவருக்கு நெருக்கமானவருக்கோ அல்லது அவருக்கு வேண்டாதவருக்கோ தெரியும். அப்படி தெரியும்பட்சத்தில், அவர்கள் கொடுக்கும் தகவலை வைத்துத்தான் பறக்கும் படை கார்களை வழிமறித்துப் பிடிக்கிறது. சிம்பிளாகச் சொல்லவேண்டுமானால், பாண்டிச்சேரியில் இருந்து சரக்கு வாங்கிக்கொண்டு வந்தால் போலீஸ் பிடிப்பார்களே… அதுபோல!. அதிகமாக யாராவது சரக்கு வாங்கிக் கொண்டு கிளம்பினார் என்றால் அந்தக் கடைக்காரரே போலீஸுக்கு போன் போட்டு கார் அல்லது பைக் நெம்பர் உட்பட எல்லாவற்றையும் சொல்லிவிடுவார். போலீஸ் காத்திருந்து கரெக்டாக பிடித்துவிடும். தமிழகத்தில் இப்போது நடப்பதும் அதே கதைதான். பறக்கும் படையை பொறுத்தவரை பணம், பொருள் இருக்கிறதா என்பதை மட்டுமே சோதனையிடுகிறது. ஆர்.சி. புக், லைசன்ஸ் பற்றியெல்லாம் அவர்களுக்குக் கவலை இல்லை. இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு லோக்கல் போலீஸாரும் இன்னொரு பக்கம் களமிறங்கியுள்ளனர். அவர்கள், தங்கள் பங்குக்கு வாகனங்களை நிறுத்தி சோதனை என்ற பெயரில் டார்ச்சரை ஆரம்பித்துள்ளனர். எப்படிப் பார்த்தாலும் இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான்!’’
‘‘ஓ.. அதிகாரிகளைப் பற்றி ஆரம்பிச்சுட்டீங்களோ… அப்போ நானும் அதே லைன்ல வரேன்!’’ என்று சைன் இன் ஆனது ஃபேஸ்புக். ‘‘தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ஜாலியாக இருப்பது தலைமைச் செயலக ஊழியர்கள்தான். பைலை எல்லாம் எடுத்து மூடிவெச்சுட்டு ஹாயாக இருக்காங்க. இன்னும் இரண்டு மாசத்துக்கு எந்தப் புதிய திட்டங்களும் வரப்போறது இல்லை. அதனால் அவர்களுக்கு வேலைகள் பெருசாக எதுவுமே இல்லை. பெண்டிங் இருக்கும் ஃபைலை மட்டும் பார்த்துட்டு, அடிக்கடி கேண்டீன் போய்ட்டு வந்தபடியே இருக்காங்க. திமுக-வுடன் தேமுதிக கூட்டணி சேர்ந்தால், திமுக ஆட்சி வந்துவிடும் என, சில அதிகாரிகள் நினைச்சாங்க. அதனால, திமுக-வில் யாரையெல்லாம் பார்த்து வெச்சுக்கணும் என்பதைப் பற்றி யோசிச்சு, அதற்கான வேலைகளையும் செஞ்சிட்டு இருந்தாங்க. இப்போ, கூட்டணி இல்லை என்றதும் அவர்களுக்கு குழப்பம் வந்துடுச்சு.
வழக்கமாக, தேர்தல் முடிவுகள் வரும் சமயத்தில் உயரதிகாரிகள் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சோழா ஹோட்டலில் ரூம் போட்டு தங்குவார்கள். தேர்தல் முடிவு திமுக-வுக்கு சாதகமாக வந்தால், ரோட்டை கிராஸ் செய்து பொக்கேவுடன் கோபாலபுரத்துக்குப் போய்விடுவார்கள். அதிமுக-வுக்குச் சாதகமாக வந்தால், அப்படியே பின்பக்கம் கார்டனுக்குப் போவார்கள். இந்தத் தேர்தலிலும் அதே திட்டத்துடன் அதிகாரிகள் இருக்கிறார்கள். அதனால்தான், சோழா ஹோட்டலில் தேர்தல் முடிவு வெளியாகும் நாள் அன்று சிலரின் பெயரில் இப்போதே ரூம் புக் செய்யப்பட்டுள்ளது’’ என்று ஸ்டேட்டஸ் போஸ்ட் ஆனது.
‘‘தேர்தல் கமிஷனில் உள்ள அதிகாரிகள்?”’ -வாட்ஸ் அப் கமெண்ட்டில் கேட்டது இப்படியொரு கேள்வி.
‘‘இப்போ அவங்கதான் ரொம்பவும் பிஸி. காலையில் அலுவலகத்துக்கு வந்தால் இரவு எட்டு மணியைக் கடந்தும் வேலை பார்த்து வருகிறார்கள். தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி, தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் யாரும் செல்போனை ஆஃப் செய்யக்கூடாது. 24 மணிநேரமும் அலர்ட் ஆக இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளாராம். ஒவ்வொரு மாவட்டங்களிலும் அந்த மாவட்ட ஆட்சியர்தான் தேர்தல் அதிகாரியாக இருப்பார். அதனால், மாவட்டங்களில் உள்ள அரசு ஊழியர்களுக்கு வேலைப் பளு அதிகமாகியிருக்கிறது. பல மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வேலை பார்க்கிறார்கள் ஊழியர்கள். இதற்கிடையில், நான்கு மாவட்ட கலெக்டர்கள் உட்பட சில காவல்துறை அதிகாரிகளும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்கள் என்றும், அவர்களை உடனடியாக மாற்றம் செய்யவேண்டும் எனவும் திமுக சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதுபற்றியும் தேர்தல் ஆணையம் விசாரித்து வருகிறது!’’ என்று அடுத்த ஸ்டேட்டஸும் அப்டேட் செய்தது ஃபேஸ்புக்.
அதற்கு லைக் போட்ட வாட்ஸ் அப், ‘‘விழுப்புரம் சரகம் டி.ஐ.ஜி. அனிஷா ஹுசேன் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள டி.எஸ்.பி.களைத் தொடர்புகொண்டு, உங்கள் உட்கோட்டத்தில் உள்ள 109, 110, லிஸ்ட்டுகளை சரியான விலாசம், புகைப்படத்துடன் வாட்ஸ்அப்-க்கு உடனடியாக அனுப்பி வையுங்கள் என்று உத்தரவு போட்டுள்ளார். டி.எஸ்.பி.கள் இன்ஸ்பெக்டரிடம் உங்கள் காவல் நிலையம் லிமிட்டில் உள்ள 109,110, சரியான, லிஸ்ட் எடுத்து புகைப்படத்துடன் அனுப்புங்கள் என்று, 110 என்றால் ரவுடிகள், 109 என்றால் திருடு, கொள்ளையில் ஈடுபடுவது என்று அர்த்தம். தமிழகம் முழுவதுமே இந்த லிஸ்ட் தயாராகி வருகிறதாம்’’ என்ற தகவலைத் தட்டிவிட்டது.
எல்லாவற்றையும் நிதானமாகப் படித்துவிட்டு ட்விட்டர் அடித்த ட்விட் இது. ‘’புதுச்சேரியிலிருந்து தமிழகத்துக்கு சரக்கு எடுத்துப்போனால் செக்போஸ்ட்டில் போலீஸ் பிடித்துவிடுகிறது, இப்போது தேர்தல் ஆணையமும் இருப்பதால் கெடுபிடி அதிகம். புதுச்சேரியில் போலி மதுபானம் தயாரிக்கும் ஆட்களுக்கு நிறைய ஆர்டர் வந்தும், சரக்கை வெளியே கொண்டுபோக முடியாமல் திண்டாடுகிறார்களாம். போலி மது தயாரிக்கும் கூட்டத்தைப் பிடிக்க போலீஸ் அதிகாரிகள் தீவிரக் கண்காணிப்பில் இருக்கிறார்கள். விரைவில் சிக்குவார்கள்! இதில், சில அரசியல் புள்ளிகள் மாட்டினாலும் ஆச்சரியமில்லை!’’ என்றதோடு சைன் அவுட் ஆனது.,”









