டாஸ்மாக் போராட்டம்: அதிமுகவினரை ஊருக்குள் விடமாட்டோம்

By Balaji

|

Published on 13 Apr 2016, 12:00 AM

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே நுள்ளிவிளை மற்றும் கட்டிமாங்கோடு ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளால் அப்பகுதியைச் சுற்றியுள்ள 25க்கும் மேற்பட்ட கிராமத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நடத்திய தொடர் போராட்டத்தால் 2 கடைகளையும் 30 நாட்களுக்குள் அகற்றிவிடுவோம் என கடந்த அக்டோபர் 15ம் தேதி அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால் இதுவரை மதுக்கடை அகற்றப்படவில்லை.

இந்நிலையில் அப்பகுதி பொதுமக்கள், டாஸ்மாக் ஒழிப்பு பெண்கள் முன்னணியினர் மற்றும் மாவட்ட மக்கள் அதிகார இயக்கத்தினர் ஒன்று திரண்டு நுள்ளிவிளை மற்றும் கட்டிமாங்கோடு ஊராட்சி பகுதிகளில் அமைந்துள்ள டாஸ்மாக் மற்றும் பேயன்குழி – காரங்காடு சாலை ஓரத்தில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையையும் முற்றுகையிட்டு மதுபான கடைகள் முன்பு நேற்று காலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

ADVERTISEMENT

சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பொதுமக்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் 2 கடைகளும் தற்காலிகமாக 3 தினங்களுக்கு மூடப்படும் என்றும் அடுத்த கட்டமாக அரசின் உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். அப்போது இரு தரப்பினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் எஸ்.பி இன் உத்தரவுப்படி, பெண்கள் உட்பட போராட்டக்காரர்கள் அனைவரும் அடித்து இழுத்து வேனில் ஏற்றப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் குளச்சல் தொகுதியில் ஓட்டு கேட்டு வரும் அதிமுகவினரை ஊருக்குள் நுழைய விடமாட்டோம் என்று தெரிவித்தனர்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel