உருது மொழியைக் கொச்சைப்படுத்தும் மோடி அரசு! எழுத்தாளர்கள் கண்டனம்

By Balaji

|

Published on 12 Apr 2016, 12:00 AM

சிறுபான்மை இசுலாமிய மக்களுக்கு, நாடு முழுவதும் கல்வி வழங்குவதில் உருது மொழி வளர்ச்சிக்கான தேசியக் குழு முக்கியப் பங்காற்றி வருகிறது. மதரஸாக்கள் மற்றும் இசுலாமிய நபர்களால் நடத்தப்படும் பட்டயப் படிப்புகள் இதன்கீழ் வருகின்றன. இவ்வாறு நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான கல்வி அமைப்புகள் செயல்படுகின்றன.

இந்த உருது மொழியில் எழுதப்படும் புத்தகங்களுக்கு நிதி உதவி வழங்குவதுடன், உருது மொழி வளர்ச்சியின்பொருட்டு புத்தகங்களை மொத்தமாகக் கொள்முதல்செய்தும் வருகிறது. இதனால் உருது இலக்கியவாதிகள், கலைஞர்கள், ஓவியர்கள், ஆய்வாளர்கள், வரலாற்றாசிரியர்கள், விமர்சகர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்த உருது மொழி வளர்ச்சிக்கான தேசியக்குழு மத்திய அரசின் மனிதவள வளர்ச்சித்துறையின் முழுக் கட்டுப்பாட்டின்கீழ் வருகிறது. இதற்கான நிதி அமைச்சகம் உள்ளது. இதன் அமைச்சராக ‘சிறுபான்மை மக்கள் வெறுப்பு’ புகழ் ஸ்மிருதி இராணி உள்ளார்.

சில நாட்களுக்குமுன்பு ஸ்மிருதி இராணியின் மனித வள வளர்ச்சித் துறை அமைச்சகத்திடமிருந்து உருது மொழி வளர்ச்சிக்கான தேசியக் குழு நிர்வாகத்துக்கு ஒரு சுற்றறிக்கைப் படிவம் வந்தது. அது ஒரு பிரகடனப் படிவம் ஆகும். நிதி உதவி பெறும் ஒவ்வொரு எழுத்தாளர், கலைஞர் அல்லது வரலாற்றாசிரியர், விமர்சகர் யாராக இருந்தாலும் அதில் கையொப்பமிட்டால்தான் நிதி அளிக்கப்படும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

அதைப்பார்த்த உருது மொழி வளர்ச்சிக்கான தேசியக் குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். இந்த மோடி அரசு நாட்டில் வாழும் இசுலாமியர் குறிப்பாக, உருது பேசும் இசுலாமிய மக்கள்பற்றி என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறது. இவர்கள் எல்லாம் தீவிரவாதிகள் என்றோ அல்லது பயங்கரவாதிகள் என்றோ அல்லது நாட்டுப்பற்று இல்லாதவர்கள் என்றோ முடிவே கட்டிவிட்டதா என்று நினைத்தனர்.

அப் படிவம் வருமாறு:

ADVERTISEMENT

நான், (த.பெ/க.பெ ……………………) உருது மொழி வளர்ச்சிக்கான தேசியக் குழுமம் மொத்தக் கொள்முதல் திட்டத்தின்கீழ் நிதி உதவி பெற்றுள்ள ……………………………. தலைப்பிலான எனது புத்தகம்/ பத்திரிகை/ பிரசுரம் இந்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராகவோ அல்லது தேசிய நலன்களுக்கு எதிராகவோ அல்லது சமூகங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கு எதிராகவோ எக்கருத்தும் கொண்டிருக்கவில்லை என்று உறுதியளிக்கிறேன்.”

இவ்வாறு கூறும் அப் படிவம், இதை மீறுபவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, வழங்கப்பட்ட நிதி திரும்பப் பெறப்படும் என்றும் இந்தப் படிவத்தின் கையெழுத்திடும்போது இரண்டு சாட்சிகள் முன்னிலையில் கையொப்பமிட்டு, சாட்சிகளின் கையொப்பமும் பெற வேண்டும் என்றும் கூறுகிறது.

மத்திய அரசின் இச் சுற்றறிக்கை, நாடு முழுவதும் உள்ள எழுத்தாளர்கள், கலைஞர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. ஏற்கனவே மோடி அரசு, இந்துத்வா கொள்கையை கல்வி வளாகங்களில் திணித்துவருகிறது. பள்ளிகளில் மூன்றாவது மொழியாக கட்டாயம் சமஸ்கிருதம் கற்பிக்கப்பட வேண்டும் என்பது முதல் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் தேசியக் கொடி ஏற்றவேண்டும் என்பதுவரை கல்வியில் தலையிட்டு வருகிறது.

அத்துடன், இந்துத்வா கொள்கைக்கு எதிராகச் செயல்படுபவர்களை வேட்டையாடி வருகிறது. இவ்வாறு தபோல்கர், பன்ஸாரே, கல்புர்கி போன்ற நாடறிந்த எழுத்தாளர்கள் கொல்லப்பட்டனர்.

தேசிய பாடத்திட்டக் குழு, தேசிய வரலாற்றாய்வுக் குழு போன்ற முக்கிய அமைப்புகளில் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள் உயர் பொறுப்பில் நியமிக்கப்பட்டனர்.

அதுமட்டுமல்லாமல், அனைத்து மாநிலங்களிலும் சமஸ்கிருதம், இந்தி கற்றுக்கொடுப்பதைக் கட்டாயமாக்குவது தொடர்பான கேள்விப் படிவத்தை மாநில அரசுகளின் கல்வி ஆராய்ச்சிக் குழுக்களுக்கு அனுப்பியது.

மறுபக்கத்தில், மாட்டுக்கறி பிரச்னையை எழுப்பி உபி-யில் ஒரு சிறுபான்மை சமுதாய முதியவர் படுகொலை செய்யப்பட்டார். மாட்டுக்கறி தின்பவர்களுக்கு எதிராக ஹரியானா அரசு சட்டம் இயற்றியது. காஷ்மீர் மாநில எம்.எல்.ஏ. மாட்டுக்கறி விருந்து வைத்ததற்காக ஸ்ரீநகரிலும் டில்லியிலும் அடித்துத் துவைக்கப்பட்டார்.

இப்போது, உருது மொழியில் எழுதுபவர்கள் அனைவரும் தேசவிரோதிகளாகக் கருதி, இப்படி ஒரு படிவத்தை அனுப்பியுள்ளது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இது, கருத்துச் சுதந்திரத்தின்மீதான தாக்குதலாகக் கருதுகிறார்கள்.

இதையொட்டி, கர்நாடக மாநில உருது எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் சார்பில் பெங்களூருவில் கண்டன ஆர்ப்பாட்டக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஞானபீட விருதுபெற்ற எழுத்தாளர் கிரீஷ் கர்னாட் உள்ளிட்ட எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது, உருது மொழி வளர்ச்சி குழு சுயேட்சையான அமைப்பு என்றும் அதில் மத்திய அரசு தலையிடக்கூடாது என்றும் எழுத்தாளர்கள் தெரிவித்தனர். ஒரு ஜனநாயக நாட்டின் அரசின் செயல்பாடுகளையும் அரசின் கொள்கைகளையும் விமர்சிக்கக்கூடாது என்று கட்டளையிடுவது அநீதியானது என்று அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜாஃபர் மொகியுதீன் கூறினார்.

உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும், மொழிகளிலும் அரசையும் அரசின் கொள்கைகளையும் விமர்சிப்பதற்கான கருத்துரிமை எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், உருது மொழி என்பது ஒரு மதத்துக்கான மொழி அல்ல. வட இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் பேசும் மொழி. எனவே, நாட்டு மக்களுக்கு அரசை விமர்சிக்க உரிமை இல்லையா? என்று கேட்கிறார்கள்.

தேசிய விடுதலைப் போராட்டத்தில் உருது மொழி மக்களின் பங்கு அளப்பரியது. நசுருல் இஸ்லாம் முதல் இக்பால், கே.ஏ.அப்பாஸ்வரை ஏராளமான உருது மொழி எழுத்தாளர்கள் இந்த நாட்டு ஒற்றுமைக்காக அரும்பாடுபட்டுள்ளனர். அவர்களைக் கொச்சைப்படுத்தும்வகையில் மோடி அரசு நடந்துகொள்கிறது என்று மொகியுதீன் கூறுகிறார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel