மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரான வைகோ தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு இன்று பேட்டியளித்தார். அப்போது, பேட்டி கண்ட நிருபர், “ திமுக தரப்பில் 500 கோடி ரூபாயும் 80 இடங்களும் கொடுக்க முன் வந்தார்கள் என்பது உங்களது குற்றச்சாட்டு. அதிமுகவின் பி- டீமாக செயல்படுகிற திரு.வைகோ தலைமையிலான அந்த அமைப்புக்கு 1500 கோடி ரூபாய் பணம் கொடுக்கப்பட்டது என்று” தனது கேள்வியை முடிப்பதற்குள் சட்டையில் மாட்டியிருந்த மைக்கை அவசர அவசரமாகக் கழட்டி எறிந்த வைகோ, “நான் இந்த இண்டர்வியூவ இதோட கேன்சல் பண்ணிக்கிற” என்று சொல்லி விட்டு படப்பிடிப்பு அறையில் இருந்த கேமராவைத் தாண்டி அவசரகதியில் வெளியேறினார். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
ஒரு அரசியல் பிரமுகர் மீது பொதுத்தளத்தில் கூறப்படும் குற்றச்சாட்டை அந்த அரசியல் பிரமுகர் முன், கேள்வியாக முன் வைப்பதென்பது ஊடக மரபு. ஆனால் நிருபரின் கேள்விக்கு பதில் கூறாமல், குறைந்த பட்சம் அதற்கு மறுப்பு கூட தெரிவிக்காமல் தனது கேள்வியை முடிப்பதற்குள் வெளியேறியது சரியா? என்று ஒரு பக்கம் விமர்சனங்கள் எழுந்தாலும், இது முழுமையான வீடியோ அல்ல, நிருபர் கேட்ட கேள்விகள் வீடியோவில் எடிட் செய்யப்பட்டிருப்பதால் முழுமையான வீடியோவை பார்த்த பிறகே கருத்து தெரிவிப்பது சரியாகும். எது எப்படி என்றாலும் திமுக தலைவர் கருணாநிதி மீது ஒரு குற்றச்சாட்டை வைக்கும் வைகோ அதே போன்றதொரு குற்றச்சாட்டு தன் மீது வைக்கப்படும் போது, அதை எதிர்கொள்ளும் முறை நிச்சயமாக இது அல்ல.









