கால்நடை மருத்துவப் படிப்பு: தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

By Balaji

|

Published on 4 Jul 2018, 12:00 AM

கால்நடை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதற்கான கலந்தாய்வு, ஜூலை மூன்றாம் வாரத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மருத்துவம் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சித்த, ஆயுர்வேத மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், கால்நடை மருத்துவப் படிப்பிற்கு நீட் தேர்வு கிடையாது.

ADVERTISEMENT

தமிழகத்தில் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு, உணவுத் தொழில்நுட்பப் பட்டப்படிப்பு, கோழியின தொழில்நுட்பப் பட்டப்படிப்பு மற்றும் பால்வள தொழில்நுட்பப் பட்டப்படிப்பு என மொத்தம் 460 இடங்கள் உள்ளன. இந்தப் படிப்புகளில் சேர மே 21ஆம் தேதி முதல் தொடங்கி, ஜூன் மாதம் 6ஆம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டது.

விண்ணப்பம் சமர்ப்பித்துக் கட்டணம் செலுத்திய பின், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தகுந்த சான்றிதழ் நகல்களைச் சேர்க்கைக்குழு தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடைப் பராமரிப்பு உள்ளிட்ட பட்டப்படிப்புகளுக்கு மாணவர்களிடம் இருந்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் விண்ணப்பங்களைப் பெற்றது. ஜூலை முதல் வாரத்தில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவித்திருந்த நிலையில், விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பாலச்சந்திரன் சென்னையில் நேற்று (ஜூலை 3) வெளியிட்டார்.

ADVERTISEMENT

கால்நடை மருத்துவப் படிப்புக்கான தரவரிசையில் ஈரோடு பழனிசாமி ஸ்ரீ கார்த்திகா முதலிடமும், சேலம் ரஜினி ரகு இரண்டாமிடமும், நாமக்கல் இந்துமதி மூன்றாமிடமும் பெற்றுள்ளனர். தொழில்நுட்பப் படிப்புக்கான தரவரிசையில் பெரம்பலூர் பூஜிதா முதலிடமும், ராமநாதபுரம் மணிவாசகம் இரண்டாமிடமும், வேலூர் இலக்கியா மூன்றாமிடமும் பெற்றுள்ளனர். இந்த தரவரிசைப் பட்டியலை www.tanuvas.tn.nic.in என்னும் இணையதளத்தில் காணலாம்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel