முதல்வர் விஜய்க்கு இன்று முதல் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் நேற்று தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்றார்.
இதைத் தொடர்ந்து, இன்று 17-வது சட்டசபையின் முதல் கூட்டம் தொடங்கிய நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில், முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய்க்கு மத்திய அரசு இன்று காலை முதல் இசட் பிளஸ் (Z+) பாதுகாப்பு வழங்கியுள்ளது.
இசட் பிளஸ் பாதுகாப்பின் சிறப்பம்சங்கள்: 55 மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் 24 மணி நேரமும் முதலமைச்சரின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர்.
முதலமைச்சர் பாதுகாப்புக் குழுவில் 10க்கும் மேற்பட்ட NSG கமாண்டோக்கள் உள்ளிட்ட CRPF, CISF போன்ற மத்திய ஆயுதப்படை வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
MP-5 உள்ளிட்ட அதிநவீன துப்பாக்கிகளுடன் கமாண்டோக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.
முதல்வர் பயணிக்கும் வாகனத்தைச் சுற்றி குறைந்தது 5 குண்டு துளைக்காத பாதுகாப்பு வாகனங்கள் இருக்கும்.
ஒவ்வொரு முதலமைச்சருக்கும் பொதுவாக இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படும் நிலையில், தற்போது முதல்வர் விஜய்க்கும் அதே அளவிலான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
விஜய் கட்சி தொடங்கியவுடன் பிரசாரத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக மத்திய அரசு ஏற்கெனவே ஒய் பிளஸ் (Y+) பாதுகாப்பு வழங்கியிருந்தது.
