பிரேமலதாவுக்கு எழுந்து நின்று மரியாதை கொடுத்த விஜய்… சட்டப்பேரவை சுவாரஸ்ய நிகழ்வுகள்!

Published On:

| By Kavi

Vijay

புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு இன்று (மே 11) முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது.

இதில் தற்காலிக சபாநாயகராக பொறுப்பேற்ற கருப்பையா அவையை வழி நடத்தினார்.

ADVERTISEMENT

முதலில், எப்படி எம்எல்ஏக்கள் பதவியேற்க வேண்டும் என்று அவர் விளக்கம் அளித்தார்.

பதவிப் பிரமாணம் உறுதி மொழியை தவிர கூடுதலாகவோ குறைவாகவோ வேறு எந்த வார்த்தைகளையும் பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தல்களை வழங்கினார்.

ADVERTISEMENT

முதலாவதாக முதல்வர் விஜய் பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாக பொறுப்பேற்றுக் கொண்டார். நேற்று முதல்வராக பொறுப்பேற்கும் போது கடவுளறிய என்று கூறி உறுதிமொழி ஏற்ற விஜய் இன்று உளமாற உறுதி ஏற்பதாக கூறினார்.

அவரைத் தொடர்ந்து எட்டு அமைச்சர்கள் எம்எல்ஏக்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.

ADVERTISEMENT

அமைச்சர் செங்கோட்டையன் பதவி ஏற்க வரும் போது விஜய் எழுந்து நின்று மரியாதை கொடுத்தார்.

ஒன்பதாவது நபராக அமைச்சர் கீர்த்தனா பதவி ஏற்க வந்தார். ஆனால் சிவகாசி தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அவர் கொண்டு வராததால், அவரால் பதவி ஏற்க முடியவில்லை. பின்னர் அவர் உரிய சான்றிதழுடன் வந்து பதவிஏற்றுக் கொண்டார்.

முன்னாள் அமைச்சர் கே.சி. கருப்பண்ணனும் சான்றிதழை மாற்றி கொண்டு வந்ததால் அவரும் பதவி ஏற்கவில்லை.

முன்னாள் முதல்வரும் போடி தொகுதி திமுக எம் எல் ஏவுமான ஓ பன்னீர்செல்வம் பதவி ஏற்க வரும்போது, முதல்வர் விஜய்க்கு வணக்கம் வைத்தார். பதிலுக்கு விஜய்யும் புன்னகைத்தவாறு ஓபிஎஸ்-க்கு வணக்கம் வைத்தார்.

அதுபோன்று முன்னாள் அமைச்சர்களான ஐ பெரியசாமி, எ. வ.வேலு ஆகியோரும் முதல்வருக்கு வணக்கம் வைத்தனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி பதவியேற்க வரும் போதும், பதவியேற்று விட்டு செல்லும்போதும் இருமுறை விஜய்க்கு வணக்கம் வைத்தது கவனத்தை பெற்றது.

முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளரும் கடவுளறிய என கூறி பதவியேற்ற நிலையில், ஓபிஎஸ் உளமாற எனக் கூறி பதவியேற்றார். வழக்கமாக கடவுளின் பெயரால் என்று கூறி பதவி ஏற்பார் ஓபிஎஸ். ஆனால் இந்த முறை உளமாற என கூறினார்.

‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ எனக் கூறி எம்எல்ஏவாக பதவியேற்றார் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி.

பேரவையில் உறுதிமொழி எடுப்பதற்கு, பக்கத்தில் இருந்தவரின் வெற்றிச் சான்றிதழை வேளச்சேரி தவெக எம்.எல்.ஏ. குமார் எடுத்து சென்றார். இதை கவனித்த முதன்மைச் செயலாளர், எம்.எல்.ஏ குமாரிடம் தெரிவித்ததும், சரியான சான்றிதழை கொடுத்து உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

சட்டப்பேரவைக்கு வந்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜய்காந்த், வாசலின் முதல் படிக்கட்டை தொட்டு கும்பிட்டு உள்ளே வந்தார். பின்னர் பதவி ஏற்ற சமயத்தில் விஜய்யை பார்த்து கையெடுத்து கும்பிட்டார். அப்போது விஜய் எழுந்து நின்று வணக்கம் வைத்து மரியாதை கொடுத்தார்.

ராஜ்மோகன் உள்ளிட்ட தமிழக வெற்றிக்கழக எம்எல்ஏக்கள் விஜயைப் பார்த்து கடவுளறிய என கூறி பதவியேற்று கொண்டனர்.

பெரியகுளம் தவெக சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன் கையெழுத்து போடும் போது பேனாவை கண்ணில் ஒத்தி எடுத்து கையெழுத்து இட்டார்.

சட்டப்பேரவைக்கு தாமதமாக வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், பதவியேற்காமலேயே பாதியிலேயே கிளம்பி சென்று விட்டார்.

தனது ஓட்டுநர் ராஜேந்திரனின் மகனான விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் பதவி ஏற்கும் போது, முதல்வர் விஜய் ரசித்து பார்த்தார்.

இன்று கே சி கருப்பண்ணன், சிவி சண்முகம், சந்திரசேகரன், காமாட்சி, சரவணன் என 6 எம்எல்ஏக்கள் பதவியேற்கவில்லை.

குதிரை பேரம் நடந்ததாக சர்ச்சையை கிளப்பிய அமமுக மன்னார்குடி எம். எல். ஏ காமராஜ் விஜய்யை பார்த்து வணக்கம் வைக்க பதிலுக்கு விஜய்யும் புன்னகையுடன் வணக்கம் வைத்தார்.

கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டு வென்ற தவெக எம்எல்ஏ விஎஸ் பாபு பதவியேற்கும் போது, முதல்வர் விஜய்யை கட்டியணைத்து வாழ்த்து பெற்றார்.

பண்ருட்டி எம். எல். ஏ மோகன், பதவி ஏற்கும் போது சட்டப்பேரவையில் இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை பார்த்து கண் கலங்கினார்.

இவ்வாறு பல சுவாரசியமான நிகழ்வுகள் சட்டப்பேரவையில் நடைபெற்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share