தமிழக சட்டபேரவையில் நாளை சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஜேசிடி பிரபாகரை தவெக களம் இறக்கி உள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. தமிழக முதல்வராக நேற்று விஜய் பதவியேற்றுக் கொண்டார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்எல்ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சி தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் நடைபெற்று வருகிறது. பெரம்பூர் தொகுதியில் விஜய் எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 232 எம்எல்ஏக்களும் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகருக்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது.
சபாநாயகர் பதவிக்கு ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ ஜே.சி.டி. பிரபாகரை போட்டியிட வைக்க தவெக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான ஜே.சி.டி. பிரபாகருக்கு அதிமுக உறுப்பினர்களின் ஆதரவும் கிடைக்கும் என்பதால் இந்த முயற்சியில் தவெக இறங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
யார் இந்த ஜே.சி.டி பிரபாகர்?
எம்ஜிஆர் காலத்து அரசியல் முகங்களில் ஒருவராக பார்க்கப்பட்டவர் ஜேசிடி பிரபாகர். சென்னையைச் சேர்ந்த இவர் அதிமுகவில் அமைப்புச் செயலாளராக இருந்தவர். சென்னையில் உள்ள வில்லிவாக்கம் தொகுதியில் இரு முறை எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் முதல் முறையாக 1980ம் ஆண்டு அதிமுக சார்பில் வில்லிவாக்கம் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாகத் தேர்வானார். அதைத் தொடர்ந்து 1984 மற்றும் 1989ல் இதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2011ம் ஆண்டு திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டபோது அவரை எதிர்த்து களமிறங்கினார் ஜே.சி.டி. பிரபாகர். அந்தத் தேர்தலில் 68,612 ஓட்டுகள் பெற்று பேராசிரியர் அன்பழகனை 10,782 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். இதன் மூலம் தமிழக அளவில் கவனம் பெற்றார்.
இதைத் தொடர்ந்து 2016ல் மு.க. ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஸ்டாலின் 91,303 வாக்குகள் பெற்ற நிலையில், ஜே.சி.டி. பிரபாகர் 53,573 வாக்குகளை மட்டுமே பெற்றார்.பின்னர் 2021ம் ஆண்டு வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றியழகன் 76,127 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இதையடுத்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஜே.சி.டி. பிரபாகர், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணியில் இணைந்து செயல்பட்டார். அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கி செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில், விஜய் முன்னிலையில் ஜனவரி 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இதைத் தொடர்ந்து தவெக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு, திமுக வேட்பாளர் எழிலன் நாகநாதனை 15,141 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தற்போது தமிழக சபாநாயகராக ஜே.சி.டி பிரபாகரை களம் இறக்க தயாராகி வருகிறது.
