MLA வாக பதவி ஏற்காமல் கிளம்பிய சிவி சண்முகம்.. என்ன நடக்கிறது அதிமுகவில்?

Published On:

| By Pandeeswari Gurusamy

CV shanmugam

தமிழகத்தின் 17-வது சட்டசபையின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் நடைபெற்ற சட்டசபைக் கூட்டத்தொடரில் முதல்வர் ஜோசப் விஜய் பங்கேற்றார்.

சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய்க்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா வாழ்த்து தெரிவித்தார். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 233 எம்எல்ஏக்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்து வருகிறார். முதல்வர் விஜய் இன்று பெரம்பூர் தொகுதியில் எம்எல்ஏவாகப் பதவியேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து, விஜயின் அமைச்சரவையில் நேற்று பதவியேற்ற ஆதவ் அர்ஜுனா, சிடி நிர்மல் குமார், அருண்குமார், செங்கோட்டையன் உள்ளிட்டோர் எம்எல்ஏக்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

ADVERTISEMENT

இதைதொடர்ந்து திமுக சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இன்று எம்எல்ஏக்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

தொடர்ச்சியாக எம்எல்ஏக்கள் பதவியேற்று வரும் நிலையில், அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம் சட்டசபையில் இல்லை. சட்டசபைக்கு வந்த சி.வி. சண்முகம், பாதியிலேயே புறப்பட்டுச் சென்றார்.

ADVERTISEMENT

முன்னதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி தொடர்ந்து தோல்விகளைச் சந்திப்பதால் கட்சிக்குள் அதிருப்தியான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், இன்று சட்டமன்றக் கூட்டத்தொடருக்கு அதிமுகவின் 47 எம்எல்ஏக்களும் இரண்டு கோஷ்டிகளாக வருகை தந்தனர். இதனால் அதிமுகவில் பிளவு ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி எம்எல்ஏவாகப் பதவியேற்கும் போது சிலர் மட்டுமே எழுந்து நின்று வரவேற்பு தெரிவித்தனர். எஸ்.பி. வேலுமணி எம்எல்ஏவாகப் பதவியேற்கும் போது பெரும்பாலான எம்எல்ஏக்கள் மேஜையை தட்டி வரவேற்றனர். இதனிடையே, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் சட்டப்பேரவைக்கு வந்தும் எம்எல்ஏவாகப் பதவியேற்காமல், தற்போது ஆர்.ஏ.புரத்தில் உள்ள தனது வீட்டிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது கவனம் ஈர்த்துள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share