சட்டசபைக்கு 2 கோஷ்டிகளாக வந்த அதிமுக- எஸ்பி வேலுமணி தலைமையில் அதிக எம்.எல்.ஏக்கள் திரண்டதால் பரபரப்பு!

Published On:

| By Mathi

AIADMK MLAs Arrives in Two Factions at Assembly

17-வது தமிழக சட்டசபையின் முதலாவது கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்துக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் 47 பேரும் 2 கோஷ்டிகளாக பிரிந்து வந்தனர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 5 எம்.எல்.ஏ.க்கள் வருகை தந்தனர். ஆனால் எஸ்பி வேலுமணி தலைமையில் அதிமுகவின் பெரும்பாலான எம்.எல்.ஏக்களும் சட்டசபைக்கு வருகை தந்தனர்.

ADVERTISEMENT

சட்டசபை தேர்தலில் அதிமுக

சட்டசபை தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இடம் பெற்றிருந்தது. அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார்.

  • அதிமுக மொத்தம் 167 இடங்களில் போட்டியிட்டது.
  • ஆனால் 47 தொகுதிகளில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது.
  • சென்னை உட்பட பல மாவட்டங்களில் அதிமுகவின் வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

இதனையடுத்து அதிமுகவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கலகம் வெடித்தது.

ADVERTISEMENT

அதிமுகவில் கலகம்

எடப்பாடி தலைமையில் அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால் அவரது பொதுச்செயலாளர் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அக்கட்சியின் எம்.எல்.ஏக்களே அணி திரண்டுள்ளனர்.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அணிக்கு சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி, சி.விஜயபாஸ்கர் தலைமை வகிக்கின்றனர். எடப்பாடி பழனிசாமிக்கு 13 எம்.எல்.ஏக்கள் மட்டுமே ஆதரவு தருகின்றனர். ஆனால் சிவி சண்முகம் தலைமையிலான மூவரணியில் 34 எம்.எல்.ஏக்களும் உள்ளனர்.

ADVERTISEMENT

அதிருப்தி அணியின் கோரிக்கை என்ன?

அதிமுக அதிருப்தி அணியைப் பொறுத்தவரையில் பொதுச்செயலாலர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி விலக வேண்டும் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவு தந்து அமைச்சர் பதவிகளைப் பெற வேண்டும் என்பதுதான்.

தவெக அமைச்சரவையில் அதிமுக இணையுமா?

தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களைப் பெற்ற தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கான 118 இடங்களைப் பெற போராடியது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், திமுக கூட்டணியில் உள்ள சிபிஐ, சிபிஎம், விசிக மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளின் ஆதரவை கோரி பெற்றார்.

அதேநேரத்தில் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் விஜய் வெளிப்படையாக ஆதரவு கேட்கவில்லை.

இருந்த போதும் அதிமுகவில் அதிருப்தி அணியில் உள்ள 34 எம்.எல்.ஏக்கள் தாங்கள் விஜய் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாக கடிதங்களைக் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பேச்சுவார்த்தைகளில் அதிமுகவின் 34 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கொடுக்கும் போது 4 பேருக்கு அமைச்சர் பதவி தருவது என முடிவாகி உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

இந்நிலையில் 17-வது தமிழக சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் இன்று மே 11-ந் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத் தொடருக்கு அதிமுகவின் 47 எம்.எல்.ஏ.க்கள் 2 கோஷ்டிகளாக வருகை தந்தனர். இதனால் அதிமுகவில் பிளவு ஏற்பட்டிருப்பது உறுதியாகி உள்ளது.

அதிமுகவில் அடுத்து என்ன நடக்கும்?

அதிமுகவில் சேலம், திருவண்ணாமலை மாவட்ட செயலாளர்கள் மட்டுமே தற்போதைய நிலையில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளனர். இதனால் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் கூட்டப்படும் நிலையில் எடப்பாடி பழனிசாமியின் பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share