தமிழ்நாட்டில் இளைஞர்களிடம் கொந்தளிப்பான சூழ்நிலை இருக்கிறது; மாற்றம் வேண்டும் என்கிற எழுச்சி இருக்கிறது; இதை பாராட்டி வரவேற்கிறோம் என்று சிபிஎம் கட்சியின் மூத்த தலைவர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் திமுகவையும் கே.பாலகிருஷ்ணன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் இன்று கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது: தேர்தல் கருத்துக்கணிப்புகள் பல சொல்லப்பட்டிருந்தாலும், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்று திராவிட முன்னேற்ற கழகம் தமிழ்நாட்டின் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்ற நிலைமை ஏற்பட்டு இருக்கிறது என்பதையும் இந்த கருத்துக்கணிப்புகள் மட்டுமல்ல தேர்தல் பரப்புரையில் நாங்கள் போகிறபோது மக்கள் மனநிலையை நாங்கள் புரிந்து கொண்ட வகையில், அந்த மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்பதை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
திராவிட முன்னேற்ற கழக அரசு மீண்டும் ஆட்சி அமைப்பதற்கு எங்களுடைய வாழ்த்துக்களை நாங்கள் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.
இடதுசாரிகளுக்கு அங்கீகாரம் தராத திமுக
ஆனால் அதே சமயத்தில்
- வருகிற காலத்தில் திராவிட முன்னேற்ற கழகம் எப்படிப்பட்ட ஆட்சியை கடைபிடிக்க போகிறது என்பதை நாம் நிதானமாக பொறுத்திருந்து பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
- இந்த தேர்தலில் கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் குறைந்தபட்சம் ஆறு இடங்களையாவது ஒதுக்கி தர வேண்டும் என்று நாங்கள் எவ்வளவு வற்புறுத்திய போதும் கூட திராவிட முன்னேற்ற கழக தலைமை அதற்கு இடம் கொடுக்கவில்லை.
- இடதுசாரிகளுக்கு உரிய அங்கீகாரத்தை தருவதற்கு திராவிட முன்னேற்ற கழகம் மறுத்துவிட்டது என்பதுதான் எதார்த்தமான உண்மை.
- சிபிஎம்-க்கும் சிபிஐ-க்கும் ஒன்று இரண்டு தொகுதிகளை கொடுப்பதால் திமுக கூட்டணியில் பெரிய குழப்பம் வந்துவிடாது. ஒரு இடத்தை அதிகரித்து கொடுக்க முடியாத சூழ்நிலை, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கிறது என்று எங்களால் கருத முடியவில்லை. ஆனாலும் திமுக உறுதியாக மறுத்தது.
- பாஜகவுக்கு தமிழ்நாட்டில் இடம் அளித்துவிட கூடாது என்கிற அடிப்படையில் இந்த மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியோடு இணைந்து நாங்கள் தேர்தலில் போட்டியிட்டோம்.
- கடைசி வரை எந்தவிதமான பிசிரும் இல்லாமல் எந்தவிதமான குறைபாடும் இல்லாமல் பாஜகவை எதிர்த்தது இந்த அணி.
திமுக ஆட்சி எப்படி இருக்கும் என்பது கேள்விக்குறி
வெற்றி பெறுகிற இந்த ஆட்சி எப்படிப்பட்ட ஆட்சி அமையப்போகிறது என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.
- வேலையில்லா திண்டாட்டத்தை தீர்ப்பதற்கும் எந்த உருப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- இந்த ஆண்டு அரசாங்கத்துடைய புள்ளிவிவரத்தையெல்லாம் தமிழ்நாடு அமைச்சர்கள் ரொம்ப சிலாகித்து பேசுகிறார்கள். தமிழ்நாடு மீண்டும் இரட்டை இலக்கத்தில வளர்ச்சி விகிதம் உருவாகியிருக்கு என்று பெருமை பேசுகிறார்கள்.
- இந்த இரட்டை இலக்கத்தில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது எனில் அதற்கு அடிப்படையான காரணமே தமிழ்நாட்டில் இருக்கிற உழைப்பாளி வர்க்கமும், தொழிலாளி வர்க்கத்தினுடைய உழைப்புதான்.
- இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி எதனால் ஏற்படுகிறது? அப்படி இரட்டை இலக்க உற்பத்தி வளர்ச்சியைத் தரக்கூடிய தொழிலாளர்களுக்கு நம்முடைய அரசு என்ன கொடுக்கிறது என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.
புதிய அரசியல் சூழ்நிலை வரும்- இளைஞர்களிடம் எழுச்சி
- தமிழகத்திலே புதிய அரசியல் சூழல் உருவாகுற வாய்ப்பு என்பது இருக்கும் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.
- இன்றைக்கும் தமிழ்நாட்டில் இளைஞர்கள் மத்தியில் ஒரு கொந்தளிப்பான சூழ்நிலை என்பது ஏற்பட்டு இருக்கிறது.
- வேறு எந்த தேர்தலை விட இந்த தேர்தலில் இளைஞர்கள் மத்தியில் ஒரு பெரிய எழுச்சி ஏற்பட்டிருக்கிறது என்பதை நம்மால் பார்க்க முடிகிறது.
- தேர்தல் நேரத்துல இளைஞர்கள் வேற எங்கயாவது இருப்பார்கள். ஆனால் இந்த முறை அப்படி இல்லாமல் இளைஞர்கள் மத்தியில ஒரு எழுச்சி ஏற்பட்டிருக்கு, தமிழ்நாட்டுல ஒரு மாற்றம் வேணும் என்கிற மாதிரியான ஒரு அரசியல் புரிந்துணர்வு ஏற்பட்டிருக்கிறது என்பதைத்தான் நாம் வந்து பார்க்க முடியும்.
- அப்படிப்பட்ட இளைஞர்கள் ஒரு அரசியல் ரீதியாக இப்போ தேர்தலில் வாக்களிப்பது, ஒரு மாற்றம் வேணும் என்ற முறையில ஒரு நோக்கத்திற்கு வந்திருப்பது என்பது இளைஞர்கள் மத்தியில ஏற்பட்ட எழுச்சி வரவேற்கத்தக்கது, பாராட்டத்தக்கது.
- இளைஞர்களில் ஒரு பகுதியினர் விஜய் பின்னால் போயிருக்கலாம். ஆனால், ஏதோ ஒரு எதிர்பார்ப்பு இளைஞர்கள் மத்தியில் இருக்கிறது. ஒரு மாற்றம் வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது. அந்த இளைஞர்களை அணி திரட்டுவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்வோம். இவ்வாறு சிபிஎம் மூத்த தலைவர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
