தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி மிகப் பெரும் வெற்றியைப் பெறப் போகிறது; இந்த வெற்றிக்கு தமது கட்சியின் உறுதியான நிலைப்பாடும் அணுகுமுறையும் காரணம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக திருமாவளவன் இன்று மே 2-ந் தேதி வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது:
திமுக கூட்டணிக்கு மகத்தான வெற்றி
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றியை பெறப்போகிறது. அதிலே எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
நான் ஏற்கனவே சொன்னது போல் கூட்டணி பலம் அதற்கு முதன்மையான காரணம்.
கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு பெண்களை மையப்படுத்தி தீட்டிய திட்டங்கள், மாணவ செல்வங்களை மையப்படுத்தி தீட்டிய திட்டங்கள், வெற்றிகரமாக அவற்றை நடத்தி நடைமுறைப்படுத்தி நிகழ்த்தியிருக்கிற சாதனைகள் நமக்கு கூடுதல் வலு சேர்ப்பதாக அமைந்துள்ளன.
இந்த கூட்டணி கொள்கை பிடிப்புள்ள ஒரு கூட்டணி என்பதை நாம் அடுத்தடுத்து நடைபெற்ற தேர்தல்களின் மூலம் உறுதி படுத்தி இருக்கிறோம்.
மதச்சார்பின்மையை முன்னிறுத்தி தமிழகத்தில் மதத்தின் பெயரால் சாதியின் பெயரால் சமூகங்களை பிளவு படுத்துவதற்கு இடம் கொடுத்து விடக்கூடாது.
வன்முறை அரசியலுக்கு வழிவகுத்து விடக்கூடாது, வட இந்திய மாநிலங்களில் நிகழ்வது போன்ற வெறுப்பு அரசியல் இங்கே தலை தூக்கி விடக்கூடாது என்கிற பொறுப்புணர்வோடு இந்த ஒரு அணி தொடர்ந்து கடமையாற்றி வருகிறது என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
ஆக இந்த கூட்டணியின் மீதான நன்மதிப்பு ஒரு குட் ஃபெய்த் ஒரு கிரெடிபிலிட்டி நம்பகத்தன்மை மக்களிடையே வளர்ந்து கொண்டிருக்கிறது. அது நம்முடைய கூட்டணியின் வெற்றிக்கு கூடுதல் பலம்.
திமுக கூட்டணியை காப்பாற்றிய விசிக
இவை எல்லாவற்றையும் விட விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்த கூட்டணியை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் எடுத்துக்கொண்ட முயற்சி.
கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை எப்படியாவது சீர்குலைத்து விட வேண்டும், சிதறடித்து விட வேண்டும், பலவீனப்படுத்தி விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு பலர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்கள்.
அவர்களின் டார்கெட் இலக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியாகத்தான் இருந்தது. குறிப்பாக திருமாவளவன். எப்படியாவது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அல்லது திருமாவளவனை அந்த கூட்டணியில் இருந்து வெளியேற்றிவிட்டால் போதும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை சிதறடித்து விட முடியும் என்று கணக்குப் போட்டார்கள்.
அதாவது நம்மை ஒரு துருப்புச் சீட்டாக பயன்படுத்த முயற்சிதார்கள். நம் மூலமாக அந்த கூட்டணியை பலவீனப்படுத்த திட்டம் போட்டார்கள். இது வெறும் ஊகம் இல்லை. அனைவரும் அறிந்த வெளிப்படையான அரசியல் உண்மை.
அதற்கு நாம் கிஞ்சித்தும் இடம் கொடுக்கவில்லை. எந்த ஆசை காட்டுதல் அல்லது மயக்குதல் போன்ற… காட்டி அந்த காரணங்களை முன்னிறுத்தி அதன் மூலம் நம்முடைய இயக்கத் தோழர்களை அந்த கூட்டணியில் இருந்து எப்படி வெளியேற்ற முடியும் என்கிற முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.
எல்லா முயற்சிகளையும் நாம் அமைதி காத்ததன் மூலம் உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக செயல்பட்டதன் மூலம் முறியடித்தோம்.
நம்மைப் பொறுத்தவரையில் தொலைநோக்கு பார்வையோடு இந்த கூட்டணியில் இருக்கிறோம். வேறு எந்த காரணமும் முதன்மையானதாக இல்லை.
மதவாத சக்திகள், சாதியவாத சக்திகள் பல்வேறு முகமூடிகளை அணிந்து கொண்டு களத்திற்கு வந்திருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம்.
அவர்கள் வலுப்பெற்றால் நாம் பேசும் அரசியலுக்கே பெரும் தீங்கு விளைந்துவிடும். எதிர்காலத்தில் இந்த அரசியலையே நம்மால் பேச முடியாத ஒரு சூழல் உருவாகிவிடும்.
சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் சமூக நீதி அரசியலை பின்னுக்குத் தள்ளுகிற சதி முயற்சிகள் பல முனைகளிலிருந்தும் நடந்தன.
அவற்றையெல்லாம் மிக இலகுவாக நாம் புறந்தள்ளிவிட்டு நாம் எடுத்த நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தோம்.
தேர்தல் கால விமர்சனங்கள்
அந்த உறுதிப்பாட்டை பாராட்டுவதற்கு பதிலாக நம்மை கொச்சைப்படுத்துகிற முயற்சிகளில் ஈடுபட்டார்கள். திமுகவுக்கு நாம் துணை நிற்கிறோம் என்கிற அந்த ஒரு கோணத்தில் இருந்து மட்டுமே நம்முடைய நிலைப்பாடுகளை அவர்கள் அணுகினார்கள், அலசினார்கள்.
கூடுதல் இடங்களை பெறுவதற்கு வாய்ப்பிருந்தும் திருமாவளவன் அந்த முயற்சியை மேற்கொள்ளவில்லை. இது ஒரு விமர்சனம்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இந்த அரசு இருக்கிறது, ஆனாலும் திருமாவளவன் அந்த அரசை ஆதரிக்கிறார். அதற்கு வேங்கைவயல் ஒரு சான்று என்று பேசினார்கள்.
இதெல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான நன் நல்லெண்ணத்தின் அடிப்படையில் அல்ல. அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்கிற பொருளில் அல்ல.
நாம் அந்த களத்தில் எவ்வளவு நேர்மையாக நின்றது மக்களுக்காக மக்களோடு நின்று போராடி இருக்கிறோம் என்பதை பாதிக்கப்பட்ட மக்களே நன்கு அறிவார்கள்.
ஆனால் இப்படியெல்லாம் சில காரணங்களை முன்வைத்து நம்மை அந்த கூட்டணியில் இருந்து வெளியேற்றுவதற்கு பெருமுயற்சியை மேற்கொண்டார்கள். நாம் அதற்கு இணங்கவில்லை. உணர்ச்சிவசப்படவில்லை.
அதற்கு ஒரே காரணம் நாம் அங்கம் வகிக்கிற அந்த கூட்டணி நம்முடைய கூட்டணி. நாம் இடதுசாரி சக்திகளோடும் இதர ஜனநாயக சக்திகளோடும் இணைந்து பயணிக்கிற ஒரு கூட்டணி.
விசிகவை யாரும் பாராட்டவில்லை
அந்த கூட்டணியை பலவீனப்படுத்திவிட்டு தற்காலிகமான ஒரு லாபத்திற்காக அல்லது ஆதாயத்திற்காக ஒரு முடிவை எடுத்து காலத்தால் பழிக்கும் அளவுக்கு கலங்கம் உருவாகக்கூடிய அளவுக்கு ஆளாகிவிடக்கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வு. இந்த எச்சரிக்கை உணர்வை சமூக ஊடகங்களில் விவாதிக்கக்கூடியவர்கள் யாரும் சுட்டிக்காட்டி பாராட்டவில்லை. எத்தனையோ வாய்ப்புகள் இருந்தும் எவ்வளவோ ஆசை காட்டியும் கூட, அதற்கு இணங்காமல் தான் எடுத்த நிலைப்பாட்டில் திருமாவளவன் உறுதியாக இருக்கிறார். அந்த உறுதிப்பாட்டை வரவேற்கிறோம், பாராட்டுகிறோம் என்று சொல்லுவதற்கு சமூக ஊடகங்களில் ஆட்கள் இல்லை. மிக மிக சொற்பமாக ஒரு சிலர் அதை உணர்ந்து வெளிப்படையாக சுட்டிக்காட்டி பாராட்டி இருக்கிறார்கள்.
திமுக கூட்டணியின் வெற்றியில் விசிகவின் பங்கு
ஆகவே இன்றைக்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி இந்த மாபெரும் வெற்றியை பெறப்போகிறது, திமுக ஆட்சியை கைப்பற்றப் போகிறது என்று சொன்னால், அதற்கு விடுதலைச் சிறுத்தைகளின் அணுகுமுறையும் விடுதலைச் சிறுத்தைகளின் உறுதிப்பாடான நிலைப்பாடும் ஒரு காரணம் என்பதை யாரும் மறந்துவிட முடியாது, மறுத்துவிட முடியாது. இதை யாரும் சுட்டிக்காட்டி விவாதிக்கப்போவதில்லை. ஆனால் நாம் உணர்ந்தாக வேண்டும், நீங்கள் உணர்ந்தாக வேண்டும். நாம் சராசரி அரசியல்வாதிகளைப் போல் செயல்பட்டிருந்தால், கூடுதல் இடங்களுக்காக ஆசைப்பட்டிருந்தால், மாற்றம் என்கிற பெயரில் நாம் வேறொரு முடிவை எடுத்திருந்தால், தமிழ்நாடு அரசு அரசியல், தமிழ்நாடு அரசியல் தலைகீழாக மாறியிருக்கும் என்பதிலே யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதை நாம் விரும்பவில்லை.
தொகுதிப் பங்கீடு- ஏமாளித்தனமா? பெருந்தன்மையா?
தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையின் போது இரட்டை இலக்கத்தில் நமக்கு இடம் வேண்டும் என்று உயர்மட்டக்குழுவிலே நாம் தீர்மானம் போட்டோம், தொடர்ந்து அதை வலியுறுத்தி வந்தோம். ஆனாலும் நம்மால் இரட்டை இலக்கத்தை எட்ட முடியவில்லை. அதற்கு நான் முரண்டு பிடிக்கவில்லை. பேரம் என்கிற பெயரில் இழுபறி நிலையை உருவாக்கவில்லை. கூட்டணியில் ஒரு சங்கடமான சூழலை உருவாக்க நான் விரும்பவில்லை. அது கூட்டணியை பலவீனப்படுத்துவதற்கு காரணமாக அமைந்துவிடக்கூடாது, யாருக்கும் தீனி போடக்கூடாது என்கிற பொறுப்புணர்வோடு நானே ஒரு முடிவெடுத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன்.
மேலோட்டமாகப் பார்த்தால் அது ஒரு ஏமாளித்தனம் போல் தெரியும். பொறுப்புணர்வோடு ஆய்வு செய்து பார்த்தால், அதில் நம்முடைய பெருந்தன்மையை புரிந்து கொள்ள முடியும். நம்முடைய தொலைநோக்கு பார்வையை புரிந்து கொள்ள முடியும். நம்முடைய கொள்கை பிடிப்பை உணர்ந்து கொள்ள முடியும். நம்முடைய ஆளுமை திறனை அறிந்து கொள்ள முடியும். நமக்கு இருக்கிற அரசியல் புரிதலை உணர முடியும். ஆனால் அதையும் பலர் இங்கே கொச்சைப்படுத்தினார்கள், இன்னும் கொச்சைப்படுத்துவார்கள். அவற்றையெல்லாம் நாம் பொருட்படுத்தத் தேவையில்லை.
எக்ஸிட் போல் முடிவுகள்
இப்போது எக்ஸிட் போல், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளிவந்திருக்கிறது. பல நிறுவனங்கள் திமுக கூட்டணி மகத்தான வெற்றியைப் பெறும், திமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்றெல்லாம் முடிவுகளை வெளியிட்டு இருக்கிறார்கள். ஒரு சில நிறுவனங்கள் ஆர்.எஸ்.எஸ் பின்னணியுள்ள நிறுவனங்கள், பாஜக ஆதரவு நிறுவனங்கள், வலதுசாரி கருத்தியலை உயர்த்தி பிடிக்கிற சில சக்திகள், அதற்கு மாறான கருத்துக்கணிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த கருத்து கணிப்புகளை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை. நாம் களத்தில் இருப்பவர்கள் மக்களோட நிற்பவர்கள். மக்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றவர்கள். நான்கு சுவர்களுக்கு இடையிலே அமர்ந்து அரசியல் கணக்குகளை ஆய்வு செய்யக்கூடியவர்கள் அல்ல. மக்களின் நாடிப் பார்த்து நாம் காய்களை நகர்த்துகிறோம். ஆகவே எப்படி கணக்கு போட்டு பார்த்தாலும் திமுக கூட்டணிதான் பெரும் வெற்றியைப் பெறும் என்பதிலே இரண்டாவது கருத்து இருக்க முடியாது.
களத்தில் திமுக- அதிமுகவுக்கு எதிரான கருத்து
திமுக அல்லது திமுக கூட்டணிக்கு எதிரான வாக்குகளை பலர் போட்டி போட்டு பிரிக்கிறார்கள், பங்கு போடுகிறார்கள். பொதுவாக திராவிடக் கட்சிகளுக்கு திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கு எதிரான ஒரு கருத்து இந்த அரசியல் களத்தில் நீண்டகாலமாக இருந்து வருகிறது. எதிர்ப்பு வாக்குகளும் இருந்து வருகின்றன. அந்த எதிர்ப்பு வாக்குகளை ஒவ்வொரு காலகட்டத்திலும் அவ்வப்போது தோன்றிய மாற்று அரசியல் சக்தி என்று அடையாளப்படுத்திக்கொண்ட அரசியல் கட்சிகள் பெற்றிருக்கின்றன, அல்லது பங்கு போட்டு இருக்கின்றன. ஆகவே இந்த முறை திமுகவை எதிர்த்து அல்லது திமுக கூட்டணியை எதிர்த்து களத்திலே நிற்கும் அதிமுக, அதிமுக தலைமையிலான கூட்டணி, விஜய் தலைமையிலான கட்சி, சீமான் தலைமையிலான கட்சி இவர்கள் அத்தனை பேருக்குமே திமுக எதிர்ப்பு என்பதுதான் பிரதானமான, முதன்மையான அரசியல். அல்லது திமுக கூட்டணி எதிர்ப்பு என்பதுதான் முதன்மையான அரசியல். அவர்கள் மூவரும் அவரவர் சக்திக்கு ஏற்ப இந்த எதிர்ப்பு வாக்குகளை பகிர்ந்து கொள்கிறார்கள், பிரித்துக்கொள்கிறார்கள். புதிதாக களம் காணுகிற தமிழக வெற்றிக்கழகம் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் எதிரான வாக்குகளை பெருவாரியாகப் பிரித்துக் கொள்ள இருக்கிறது.
ஆட்சியை கைப்பற்றுவாரா விஜய்?
ஆனால் தனித்த ஒரு சக்தியாக அவர் திமுக, அதிமுக அல்லது திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி ஆகிய இரண்டு கூட்டணிகளையும் பின்னுக்கு தள்ளி ஆட்சியை கைப்பற்றும் அளவுக்கான வலிமையை அவர் பெற்றிருக்கவில்லை, அதற்கான வாய்ப்பே இல்லை. ஆகவே எப்படி கணக்கு போட்டு பார்த்தாலும் திமுக வெற்றி பெறும், திமுக கூட்டணி வெற்றி பெறும் என்கிற போது, நாம் போட்டியிடக்கூடிய எட்டு தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மிக பிரகாசமாக இருக்கிறது என்று நான் நம்புகிறேன். எனவே அந்த நம்பிக்கையோடு நாம் மே 4-ம் தேதியை வரவேற்போம். முடிவு எதுவாக இருந்தாலும் நம்முடைய அரசியல் களம் நீர்த்துப் போகாது. நம்முடைய பயணம் வழக்கம் போல வேகம் பெறும், இன்னும் தீவிரமடையும். இயக்கத் தோழர்கள் அந்த புரிதலோடு மே நான்காம் தேதியை வரவேற்போம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
விசிகவின் பயணம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒரு நெடும் கால கனவை சுமந்து களத்தில் பணியாற்றி வருகிறது. அண்ணல் அம்பேத்கர் கண்ட கனவான, மதச்சார்பற்ற தேசத்தையும், சமத்துவ இந்தியாவையும் கட்டமைப்பதே கட்சியின் நீண்டகால கனவு. இந்த கனவை நனவாக்கவே அண்ணல் அம்பேத்கர் அவர்கள் அரசமைப்புச் சட்டத்தை வழங்கினார்.
அந்த அரசமைப்புச் சட்டத்தின் மிக முக்கிய கோட்பாடாக விளங்குவது ‘மதச்சார்பின்மை’. இந்தக் கொள்கைக்கு எதிராகச் செயல்படும் உள்நோக்கம் கொண்ட கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு எதிராக களத்தில் நிற்கின்றன. தேர்தல் களத்தில் வெளிப்படையான கூட்டணி அமைத்து நிற்கும் இந்த சக்திகள், அதே சமயம் சமூக நீதி, சமத்துவம், மதச்சார்பின்மை ஆகியவற்றுக்கு எதிரான கருத்துக்களைப் பரப்புகின்றன.
விஜய்யின் நிலைப்பாடு
பாஜக எங்களின் கொள்கை எதிரி என்று விஜய் அவர்கள் குறிப்பிட்டதுடன், அந்த ஒற்றைச் சொல்லைத் தவிர மற்றபடி பாஜகவிற்கு எதிராக அவர் பேசியதில்லை.
அவருடைய நோக்கம் திமுக ஆட்சியை அகற்றுவது மட்டுமே. அந்த ஆட்சி அகற்றப்பட்டால் அடுத்து யார் ஆட்சிக்கு வருவார்கள் என்பதில் அவருக்கு அக்கறை இல்லை.
பாஜக அங்கம் வகிக்கும் அதிமுக வந்தாலும் அவருக்கு பிரச்சனை இல்லை.
எனவே திமுக கூட்டணிக்கு எதிரான கருத்துக்களை உருவாக்கும் சக்திகள் நம்மைச் சுற்றி இருக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார். இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.
