–டி.ரவிக்குமார்
இந்திய உயர்கல்வித் துறை இன்று ஒரு முக்கியமான திருப்புமுனையில் நிற்கிறது.
தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 நடைமுறைக்கு வந்ததன் பின்னர், உயர்கல்வி அமைப்பில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பல்துறை பட்டப்படிப்புகள், நான்கு ஆண்டுகள் கொண்ட பாடத்திட்டங்கள், இடையிலேயே வெளியேறும் வாய்ப்புகள், மாணவர்களுக்கு விருப்பமான பாடத் தேர்வு போன்றவை இந்த மாற்றங்களின் சில முக்கிய அம்சங்களாகும்.
ஆனால், இந்த மாற்றங்கள் உண்மையில் கல்வித் துறையில் எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதைக் கணிக்க வேண்டிய முக்கியமான கருவியான உயர்கல்விக்கான அகில இந்திய அறிக்கையை— AISHE (All India Survey on Higher Education) ஒன்றிய அரசு வெளியிடாமல் தாமதம் செய்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே அந்த அறிக்கை வெளியிடப்படாமல் இருப்பதால் உயர்கல்வியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை நாம் தெரிந்துகொள்ள முடியவில்லை.
AISHE அறிக்கை என்பது இந்தியாவின் உயர்கல்வித் துறையைப் பற்றிய மிக விரிவான தரவுகளை வழங்கும் முக்கியமான தரவுத் தொகுப்பாகும். மாணவர் சேர்க்கை, பாலின விகிதம், சமூகப் பின்னணி, ஆசிரியர் பற்றாக்குறை, கல்வி நிறுவனங்களின் வளர்ச்சி போன்ற பல்வேறு கூறுகளை இந்த அறிக்கை பதிவு செய்கிறது.
இத்தகைய தரவு இல்லாமல், கல்விக் கொள்கைகள் எந்தத் திசையில் நகர்கின்றன என்பது பற்றிய தெளிவான புரிதல் நமக்குக் கிடைக்காது. குறிப்பாக NEP 2020 போன்ற பரந்த அளவிலான மாற்றங்கள் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், அவற்றின் விளைவுகளை மதிப்பிடுவதற்கான நம்பகமான தரவுகள் இந்த அறிக்கை மூலமே நமக்குக் கிடைக்கும்.
உயர்கல்வி குறித்த தரவுகள் இல்லாததால் கிராமப்புற மாணவர்கள், முதல் தலைமுறை கல்லூரி மாணவர்கள், பெண்கள் மற்றும் சமூக ரீதியாகப் பின்தங்கியவர்கள் முதலான பிரிவினர் பாதிக்கப்படுகின்றனர். இவர்கள் பெரும்பாலும் அரசு உதவித்தொகைகளையும், இடஒதுக்கீடுகளையும் சார்ந்திருக்கின்றனர். AISHE தரவுகள் இல்லாததால், பட்ஜெட்டில் படிப்பு உதவித் தொகையை ஒதுக்குவதிலும், சரியான விழுக்காட்டில் இட ஒதுக்கீட்டை நிரப்புவதிலும் பின்னடைவு ஏற்படுகிறது.

ஒன்றிய அரசு மட்டுமின்றி மாநில அரசுகளும் தனியார் கல்வி நிறுவனங்களும் தங்களின் திட்டங்களைத் தரவுகளின் அடிப்படையில் தீர்மானிக்க முடியாமல் திணறுகின்றனர். எந்த மாவட்டத்தில் மாணவர் சேர்க்கை குறைகிறது? எந்தத் துறையில் ஆசிரியர் பற்றாக்குறை அதிகம் இருக்கிறது? எந்தப் பகுதிகளில் பெண்களின் கல்வி பின்தங்கியுள்ளது? முதலான அடிப்படைக் கேள்விகளுக்குப் பதில் கிடைக்காமல் போகிறது. இதனால், உயர்கல்வித் திட்டமிடல் என்பது உத்தேசமான விவரங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகவே இருக்கிறது.
AISHE அறிக்கை வெளியிடப்படாததை சுட்டிக்காட்டி நாடாளுமன்றத்தில் நான் உடுக்குறியிட்ட வினா ஒன்றை 24.07.2023 அன்று எழுப்பினேன். அதற்கு விடையளித்த அமைச்சர் தர்மேந்திர பிரதான் “ கோவிட் பெருந்தொற்றின் காரணமாக அறிக்கை வெளியிடுவதில் தாமதம் ஏற்படுவதாகவும், முன்பு அடோப் அக்ரோபாட் முறையில் அறிக்கை வெளியிடப்பட்டதாகவும் இப்போது அது மாற்றப்பட்டு ‘டேட்டா கேப்சர் ஃபார்மட்’ ( DCF) முறையில் அறிக்கை தயாரிக்கப்படுவதால் தாமதம் ஏற்படுகிறதென்றும் தெரிவித்தார். அதன் பின்னர் அமைச்சரிடம் நான் கடிதமும் அளித்தேன்.
இத்தகைய அழுத்தங்களுக்குப் பிறகே 2021-22 க்கான அறிக்கையை 2024 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு வெளியிட்டது. அதன்பின்னர் வெளியிடப்பட வேண்டிய 2022-23; 2023-24; 2024-25 ஆம் ஆண்டுகளுக்கான அறிக்கைகளை ஒன்றிய அரசு இதுவரை வெளியிடவில்லை.
2021 -22 க்கான AISHE அறிக்கை சில ஆபத்துகளை சுட்டிக்காட்டியது: “ உயர்கல்வியில் மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் (GER): 28.4% மட்டும் தான் என்பதையும்; மாணவர்-ஆசிரியர் விகிதம் 21-லிருந்து (2014–15) 24-ஆக மோசமடைந்துள்ளது என்பதையும்;
வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிவடைந்து வருகிறது என்பதையும் ; பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன” என்பதையும் அந்த அறிக்கை வெளிப்படுத்தியது . 2022 ஆம் ஆண்டுக்குப் பிறகு நிலைமை மேலும் மோசமடைந்திருப்பதாகத் தெரிகிறது. குறிப்பாக உயர்கல்வியில் இடைநிற்றல் விகிதம் அதிகரித்திருப்பதாகக் கல்வியாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

ஒன்றிய அரசு உரிய காலத்தில் AISHE அறிக்கையை வெளியிடாமலிருப்பதற்குத் தரவுகளை அது வெளியிட விரும்பாததே காரணம். உயர்கல்வி மட்டுமின்றி அனைத்துத் துறைகளிலுமே இத்தகையத் தரவு மறைப்புத் தந்திரத்தை அது கையாளுகிறது. இதனால் எல்லா துறைகளிலும் ஓபிசி, எஸ்சி,எஸ்டி பிரிவினரின் வளர்ச்சி பாதிக்கிறது.
கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும் எனக் குரலெழுப்புகிற மாநில அரசுகள் AISHE அறிக்கையைப் போன்றதொரு அறிக்கையைத் தாங்களே வெளியிடுவது அவசியம். அந்த அறிக்கையைத் தயாரிப்பதில் மாநில அரசுகளுக்குச் சிக்கல் ஏதுமில்லை. ஏனென்றால், மாநில அரசுகள் கொடுக்கும் புள்ளிவிவரங்களைக் கொண்டுதான் ஒன்றிய அரசு AISHE அறிக்கையைத் தயாரிக்கிறது.
AISHE அறிக்கை வெளியிடப்படாததற்கு ஒன்றிய அரசு பல்வேறு காரணங்களைக் கூறலாம். ஆனால், அவை ஏற்புடையவை அல்ல. இதுவரை வெளியிடப்படாமலிருக்கும் அறிக்கைகளை உடனடியாக வெளியிடுவதோடு; எதிர்காலத்தில் AISHE அறிக்கைகள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் என்பதற்கான உறுதிமொழியையும் ஒன்றிய அரசு அளிக்க வேண்டும்.இதற்குக் கல்லூரி ஆசிரியர், மாணவர் சங்கங்கள் அழுத்தம் தரவேண்டும். நமது குரல் வலுவாக ஒலித்தால் மட்டுமே ஒன்றிய அரசின் செவிகள் திறக்கும்.
கட்டுரையாளர்:

முனைவர் டி.ரவிக்குமார் – நாடாளுமன்ற உறுப்பினர் (விழுப்புரம் தொகுதி), எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.
