உச்சநீதிமன்றத்தில் சமஸ்கிருத மொழியை உயர்த்திப் பேசிய வழக்கறிஞருக்கு நீதிபதி மகாதேவன் தமிழின் பெருமைகளை விவரித்து பதிலடி தந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் நுழையலாம் என்ற முந்தைய தீர்ப்புக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களை, உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீவிரமாக விசாரித்து வருகிறது. இந்த முக்கிய அமர்வில் நீதிபதி ஆர். மகாதேவன் இடம்பெற்றுள்ளார்.
இந்த வழக்கின் விசாரணையின்போது, மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் தனது வாதத்தில், “ஆங்கிலத்தில் வெறும் 26 எழுத்துக்கள் மட்டுமே உள்ளன. ஆனால், சமஸ்கிருதத்தில் 52 எழுத்துக்கள் இருக்கின்றன. எனவே தர்மம் போன்ற ஆழமான வார்த்தைகளை ஆங்கிலத்தில் விளக்க முடியாது. ஆகையால், சமஸ்கிருதம் ஒரு உயர்ந்த மொழி” என்று குறிப்பிட்டார்.
வழக்கறிஞரின் இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதி ஆர். மகாதேவன் உடனடியாகக் குறுக்கிட்டு, ”எழுத்துக்களின் எண்ணிக்கையை வைத்து ஒரு மொழியின் மேன்மையை அளவிடுகிறீர்கள் என்றால், தமிழில் 247 எழுத்துக்கள் உள்ளன. அப்படிப் பார்த்தால் தமிழ் எவ்வளவு பெரிய மொழி?” என பதிலடி கொடுத்தார்.
அத்துடன் இதுபோன்ற மொழியியல் ஒப்பீடுகளுக்குள் செல்ல வேண்டாம் என்றும், எடுத்துக்கொண்ட வழக்கின் சட்ட அம்சங்களில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வழக்கறிஞருக்கு நீதிபதி மகாதேவன் அறிவுறுத்தினார்.
உச்ச நீதிமன்ற வளாகத்தில், சமஸ்கிருதத்தின் எழுத்து எண்ணிக்கையை முன்வைத்து அதன் மேன்மையை வாதிட்ட வழக்கறிஞருக்கு, தமிழின் செழுமையை சுட்டிக்காட்டி நீதிபதி மகாதேவன் அளித்த இந்தப் பதில், பேசு பொருளாகி இருக்கிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
