தமிழகத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் சுமார் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. 234 தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
ஙதமிழகத்தில் அடுத்து யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைத்துத் தரப்பு மக்களிடையேயும் எழுந்துள்ள நிலையில், நாளை காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு 234 வாக்கு எண்ணும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதே வளாகங்களில் தபால் வாக்குகளை எண்ணும் வகையில் கூடுதலாக 240 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பதிவான வாக்குகளை எண்ணும் பணிக்கு 3,324 மேஜைகள் பயன்படுத்தப்பட உள்ளன.
வாக்கு எண்ணும் பணிகள்தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்படும். இந்தப் பணிக்காக மொத்தம் 10,545 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையை உறுதி செய்ய 4624 நுண் பார்வையாளர்கள் துணையாக இருப்பார்கள். நாளை காலை 8 மணி அளவில் தபால் வாக்கு எண்ணிக்கையுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. அதைத் தொடர்ந்து 8.30 மணி அளவில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கும்.
அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் சுற்று வாரியான முடிவுகள், சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரால் அந்தந்த மையங்களில் உள்ள பொது ஒலிபெருக்கி அமைப்பு மூலம் அறிவிக்கப்படும். நாளை வாக்கு எண்ணும் மையங்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் காலை முதல் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவழதும் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் மட்டும் 18,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 40க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினர் துப்பாக்கி ஏந்திய நிலையில் பணியில் இருப்பார்கள்.
நாளை தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான உத்தரவை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் பிறப்பித்துள்ளார்.
