தமிழகம் முழுவதும் கடந்த ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் பதிவான வாக்குகள் நாளை காலை எண்ணப்பட உள்ளது.
தமிழகத்தில் நாளை நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின் போது பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மற்றும் தமிழக டிஜிபிக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “தமிழ்நாட்டில் நாளை வாக்கு எண்ணிக்கையைச் சீர்குலைத்து சட்டம் ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் பாஜகவும் சில கட்சிகளும் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன. இதனை முறியடிக்கத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
வாக்கு எண்ணும் மையங்கள் மற்றும் அரசியல் கட்சி அலுவலகங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “இந்தியத் தேர்தல் ஆணையம் பாஜகவின் ‘பி’ டீமாகச் செயல்படுகிறது” என்ற குற்றச்சாட்டுகள் உள்ளதால், இதில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கடிதத்தில் கோரியுள்ளார்.
இதைத் தொடர்ந்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ். பாரதி, “ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. அனைத்துத் தரப்பு மக்களும் ஸ்டாலின் தான் இரண்டாவது முறையாகத் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வரப்போகிறார் என்று கருத்து தெரிவித்து வரும் நிலையில், நாளைய வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. சமூக ஊடகங்களில் வரும் செய்திகளைப் பார்க்கும்போது, பாஜகவும் அதன் கூட்டணியினரும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் ஏதேனும் செய்யக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே, தேர்தல் ஆணையம் எந்தப் புகார் வந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரத்தை கையில் வைத்துள்ள பாஜக எதையும் செய்யும்” என்று தெரிவித்தார்.தொடர்ந்து அவர், “தேர்தல் ஆணையம் பாஜகவின் ‘பி’ டீமாகச் செயல்படுகிறது என்று நான் மட்டும் சொல்லவில்லை. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. உச்ச நீதிமன்றமே தேர்தல் ஆணையத்தைப் பல சந்தர்ப்பங்களில் கண்டித்துள்ளது. திமுக எதையும் சந்திப்பதற்குத் தயாராக உள்ளது” என்றும் வலியுறுத்தினார்.
