தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM-கள்) தமிழகம் முழுவதும் உள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அடுத்த முதலமைச்சர் யார் என்ற எதிர்பார்ப்பு அனைத்துத் தரப்பு மக்களிடையேயும் எழுந்துள்ள நிலையில், நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். அதன் பிறகு காலை 8:30 மணி அளவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த முடிவுகளை இ.சி.ஐ. நெட் (ECINET) செயலி வாயிலாகவும், results.eci.gov.in என்ற இணைய தளம் வாயிலாகவும் தேர்தல் முடிவுகளை பார்க்கலாம்.
நாளை தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், 234 தொகுதிகளுக்கான தேர்தல் பார்வையாளர்களுடன் காணொளி வாயிலாக டெல்லியில் இருந்து இந்தியத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள், முடிவுகளை அறிவிப்பதற்கான நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார்.
