மேற்கு வங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை செயல்பாட்டில், மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களை தேர்தல் ஆணையம் நியமித்ததை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது.
மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது. இதற்கிடையே மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜிக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் இடையே மோதல் போக்கு வெடித்தது.
தற்போது தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில், கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் திரிணமூல் காங்கிரஸ் ஒரு மனுவை தாக்கல் செய்தது.
வாக்கு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு மேசையிலும் வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர் மற்றும் வாக்கு எண்ணிக்கை உதவியாளர் ஆகிய இருவரில் ஒருவர் மத்திய அரசு அல்லது மத்திய பொதுத்துறை நிறுவன ஊழியராக இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்ததை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை கொல்கத்தா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திரிணமூல் காங்கிரஸ் மேல்முறையீடு செய்தது.
இந்த மனு நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் இன்று (மே 2) விசாரணைக்கு வந்தது.
அப்போது, திரிணமுல் காங்கிரஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் 4 அம்சங்களை முன்வைத்தார்.
1.மத்திய அரசு ஊழியர்களை நியமிக்கும் சுற்றறிக்கை, ஏப்ரல் 13-ம் தேதியே மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், இது ஏப்ரல் 29-ம் தேதி தான் வெளிச்சத்திற்கு வந்தது.
2.ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் முறைகேடுகள் நடக்கும் என்ற அச்சம் இருப்பதாகத் தேர்தல் ஆணையம் கூறுகிறது.
3.ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மேசையிலும் ஏற்கனவே மத்திய அரசின் பிரதிநிதி ஒருவர் இருப்பார்.
4.தேர்தல் ஆணையத்தின் சுற்றறிக்கையில் மாநில அரசு பிரதிநிதியை நியமிக்க இடமிருந்தும், ஆணையம் ஒருவரைக்கூட நியமிக்கவில்லை.
முறைகேடுகள் நடக்கும் என அஞ்சுவதால், அவர்கள் மற்றொரு மத்திய அரசுப் பிரதிநிதியை நியமிக்கவிருப்பதாக கூறுகிறார்கள். இது நேரடியாக மாநில அரசை நோக்கி விரல் நீட்டுவது போல உள்ளது.
ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் முறைகேடு நடக்கும் என்கிற அச்சம் எங்கிருந்து வந்தது? இதை அவர்கள் வெளிப்படுத்தவில்லை. மேலும், மத்திய அரசுப் பிரதிநிதி ஒருவரை நியமிக்கப் போகிறோம் என்பதை ஏன் மாநில அரசிடம் சொல்லவில்லை? என்று கேள்விகளை எழுப்பினார்.
கபில் சிபலின் வாதத்தை கேட்ட நீதிபதி ஜாய்மால்யா பக்சி, “மத்திய அல்லது மாநில அரசு அதிகாரிகளில் யாரை வேண்டுமானாலும் நியமிக்கலாம் என்றே விதிமுறைகள் கூறுகின்றன. வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர் மற்றும் உதவியாளர் ஆகிய இருவருமே மத்திய அரசு ஊழியர்களாக இருக்கலாம் அல்லது மாநில அரசு ஊழியர்களாக இருக்கலாம். அப்படி இருக்கும்போது தேர்தல் ஆணையத்தின் முடிவு விதிமுறைகளுக்கு எதிரானது என்று நீதிமன்றத்தால் கருத முடியாது” என்று கூறினார்.
இதையடுத்து மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “தேர்தல் ஆணையத்தின் சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, மாநில அரசுப் பிரதிநிதியை அங்கிருப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தாமா சேஷாத்ரி நாயுடு, “தேர்தல் நடத்தும் அலுவலருக்கு கூடுதல் அதிகாரம் உள்ளது, அவர் மாநில அரசுப் பணிப்பிரிவைச் சேர்ந்தவர். அதோடு ஒவ்வொரு வேட்பாளருக்கும் தனித்தனியாக வாக்கு எண்ணிக்கை முகவர்கள் இருப்பார்கள். எனவே, முறைகேடு நடக்கும் என்கிற அச்சம் முற்றிலும் தேவையற்றது” என்று வாதிட்டார்.
இந்நிலையில் மாநில அரசின் பிரதிநிதியும் இருப்பார் என்று தேர்தல் ஆணையம் கூறியதை ஏற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள், திரிணமூல் காங்கிரஸ் மனு மீது எந்த உத்தரவை பிறப்பிக்க மறுத்துவிட்டனர்.
தேர்தல் ஆணையத்தின் சுற்றறிக்கை எழுத்துப்பூர்வமாகவும் அதன் உண்மையான நோக்கத்தோடும் பின்பற்றப்படும் என்ற வழக்கறிஞர் தாமா சேஷாத்ரி நாயுடுவின் வாதத்தை நாங்கள் பதிவு செய்து கொள்கிறோம் என்றும் கூறினர்.










