சென்னையில் ஆட்டுக்கறிக்கு பதிலாக பூனைக்கறி விற்பதாக எழுந்துள்ள புகாரையடுத்து, சென்னையில் பூனைக்கறி விற்பவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த சில மாதங்களாக பல இடங்களில் பூனைகள் நடமாட்டமே இல்லாமல்போனது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மயிலாப்பூர், அண்ணாநகர், கோட்டூர்புரம், ராயப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகளைக் காணவில்லை எனப் புகார்கள் எழுந்தன. இந்நிலையில் சென்னை செங்குன்றம், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஹோட்டல்களில் மட்டன் பிரியாணி எனக் கூறி பூனைக்கறி பிரியாணி பரிமாறப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த ஹோட்டல்களுக்குச் சென்று விசாரணை நடத்தியதில், பூனைகளை சப்ளை செய்யும் கும்பல் செங்குன்றத்தைச் சேர்ந்த நாடோடிகள் எனத் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் தங்கியிருந்த இடத்தில் சோதனை செய்த போலீசார், சாக்குமூட்டையில் கட்டப்பட்டிருந்த 12 பூனைகளைப் பறிமுதல் செய்தனர். மேலும் மூன்று பூனைகள் இறந்த நிலையில் மற்றொரு பையில் வைக்கப்பட்டிருந்தது. மீட்கப்பட்ட பூனைகள் செங்குன்றத்திலுள்ள மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் ஹோட்டல்களில் சென்று பிரியாணி சாப்பிடும் மக்களிடையே அச்சத்தை உண்டாக்கியுள்ளது.









