2017ஆம் ஆண்டில் இந்தியாவின் கச்சா எஃகு (ஸ்டீல்) உற்பத்தி 10 கோடி டன்களைத் தாண்டியுள்ளது. மேலும், ஸ்டீல் உற்பத்தியில் 6 சதவிகித வளர்ச்சியை இந்தியா பதிவு செய்துள்ளது.
இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இறக்குமதிக் குவிப்புக்கு எதிரான வரி, குறைந்தபட்ச இறக்குமதி விலை, தரக்கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளும் அதில் அடக்கம். மேலும், தேசிய ஸ்டீல் கொள்கை 2017 மூலமாக உள்நாட்டு ஸ்டீல் உற்பத்தி பெருமளவில் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் கச்சா எஃகு உற்பத்தியை 300 மில்லியன் டன்னாக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
மத்திய அரசின் இலக்குப்படி ஸ்டீல் உற்பத்தியை உயர்த்துவதற்கு ரூ.10 லட்சம் கோடி மூலதனம் கூடுதலாகத் தேவைப்படுகிறது. இதன் மூலம் சுமார் 11 லட்சம் பேர் வேலைவாய்ப்புப் பெறுவார்கள் என்று மத்திய அரசு கூறுகிறது. உள்கட்டுமானம், ஆட்டோமொபைல், வீடமைப்பு ஆகிய துறைகளில் ஸ்டீல் பயன்பாட்டை அதிகரிப்பது இத்திட்டத்தின் மற்றொரு நோக்கமாகும். தனிநபர் ஸ்டீல் பயன்பாட்டை 2030-31ஆம் ஆண்டுக்குள் தற்போதுள்ள 61 கிலோ என்ற அளவிலான 160 கிலோவாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.









