புகார் அளித்த பெண்ணுக்கு நள்ளிரவில் ஆபாச மெசேஜ்: பழனி உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்!

Published On:

| By Pandeeswari Gurusamy

palani

பழனி அருகே காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு ஆபாசமான செய்தி அனுப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், பழனி தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜகோபால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியில் தாலுகா காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு காவல் நிலைய உதவி ஆய்வாளராக ராஜகோபால் பணியாற்றி வந்தார். இந்தக் காவல் நிலையத்திற்குச் சில மாதங்களுக்கு முன்னர் இளம் பெண் ஒருவர், குடும்பப் பிரச்சினை காரணமாகப் புகார் அளிக்கச் சென்றுள்ளார்.

ADVERTISEMENT

அப்போது பெண்ணின் புகாரைப் பெற்ற காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜகோபால், அப்பெண்ணின் அலைபேசி எண்ணையும் பெற்றுள்ளார். அதன்பின், அவ்வப்போது அந்தப் பெண்ணை இரவு நேரத்தில் அலைபேசியில் அழைத்துத் தொந்தரவு செய்துள்ளார். மேலும், அவருக்கு ஆபாசக் குறுஞ்செய்தியும் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அப்பெண், வேறு வழியின்றித் தனது தந்தையிடம் விபரத்தைக் கூறியுள்ளார். இதைக் கேட்டுப் பெண்ணின் தந்தை அதிர்ச்சியடைந்தார். இதையடுத்துப் பாதிக்கப்பட்ட பெண், தனது தந்தையுடன் சென்று பழனி டி.எஸ்.பி-யிடம் ஆதாரங்களுடன் புகார் அளித்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில், பழனி தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜகோபாலை இடைநீக்கம் செய்து டி.ஐ.ஜி சசி மோகன் உத்தரவு பிறப்பித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் இந்தத் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share