அமைதியான அறையில் உட்கார்ந்திருக்கும்போது திடீரென வயிற்றிலிருந்து ‘குர்ர்… குர்ர்’ என்று சத்தம் வந்தால், பக்கத்தில் இருப்பவர்கள் கேட்டுவிடுவார்களோ என்று சங்கடமாக இருக்கும்.
வயிறு காலியாக இருந்தால்தான் இந்தச் சத்தம் வரும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் சாப்பிட்ட பிறகும், பசி இல்லாத நேரத்திலும் இது வரலாம். இதற்குப் பின்னால் இருப்பது நம் செரிமான மண்டலத்தின் இயல்பான செயல்பாடுகள்தான்.
இந்தச் சத்தத்தின் மருத்துவப் பெயர்
வயிறு, குடலிலிருந்து வரும் இந்தச் சத்தத்துக்கு மருத்துவத்தில் ‘Borborygmi’ என்று பெயர். செரிமானப் பாதையில் உணவு, திரவம், வாயு நகரும்போது இந்த ஒலி உருவாகிறது.
வயிறு, குடலில் உள்ள தசைகள் அலை மாதிரிச் சுருங்கி விரிகின்றன. இதற்குப் ‘பெரிஸ்டால்சிஸ்’ (Peristalsis) என்று பெயர். இந்த இயக்கம் உணவைச் செரிமானப் பாதையில் முன்னோக்கித் தள்ளுகிறது. அப்போது வாயுவும் திரவமும் சேர்ந்து நகர்வதால் சத்தம் கேட்கிறது.
பசி இல்லாமலும் ஏன் சத்தம் வருகிறது?
சாப்பிட்ட சில மணி நேரத்துக்குப் பிறகு, வயிறும் சிறுகுடலும் ஒரு சுத்தப்படுத்தும் இயக்கத்தைத் தொடங்குகின்றன. இதை ‘Migrating Motor Complex’ என்கிறார்கள். செரிமானப் பாதையில் மிச்சமிருக்கும் உணவுத் துகள்கள், திரவம், வாயு ஆகியவற்றை அடுத்த பகுதிக்குத் தள்ளுவதுதான் இதன் வேலை. வயிறு காலியாக இருக்கும்போது இந்த இயக்கத்தின் சத்தம் அதிகமாகக் கேட்கலாம். அதனால் ஒவ்வொரு முறையும் வயிறு சத்தமிடுவது பசியின் அறிகுறி என்று சொல்ல முடியாது.
எந்த உணவுகள் சத்தத்தைக் கூட்டும்?
சில உணவுகள் செரிமானத்தின்போது அதிக வாயுவை உண்டாக்கலாம். பீன்ஸ், பட்டாணி, முட்டைக்கோஸ், காலிஃபிளவர், ப்ரோக்கோலி போன்றவை சிலருக்கு வயிற்றில் வாயுவைக் கூட்டலாம். வேகமாகச் சாப்பிடுவது, நன்றாக மெல்லாமல் விழுங்குவது, கார்பனேற்றப்பட்ட குளிர்பானம் குடிப்பது போன்ற பழக்கங்களும் செரிமானப் பாதைக்குள் கூடுதல் காற்றைக் கொண்டுபோகும். இதனாலும் சத்தம் கூடலாம்.
எப்போது டாக்டரைப் பார்க்க வேண்டும்?
வயிற்றில் சத்தம் மட்டும் கேட்பது பொதுவாகப் பிரச்சினை இல்லை. ஆனால் அதோடு தொடர்ந்து வயிற்றுவலி, ரொம்ப உப்புசம், வாந்தி, நீண்ட நாள் வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் இருந்தால் கவனம் தேவை.
உடனே மருத்துவ உதவி: கடுமையான வயிற்றுவலி, வயிறு வீக்கம், தொடர்ந்து வாந்தி, மலம் அல்லது வாயு வெளியேறாமல் இருப்பது போன்றவை இருந்தால் தாமதிக்காதீர்கள். குடல் அடைப்பு போன்ற பிரச்சினைகளிலும் இந்த அறிகுறிகள் வரலாம்.
சத்தத்தைக் குறைக்க என்ன செய்யலாம்?
- சாப்பாட்டை நிதானமாக, நன்றாக மென்று சாப்பிடுங்கள்.
- ரொம்ப நேரம் சாப்பிடாமல் இருக்காதீர்கள்.
- போதுமான தண்ணீர் குடியுங்கள்.
- எந்த உணவு சாப்பிட்டால் வாயு கூடுகிறது என்று கவனித்து, தேவைக்கேற்ப உணவுப் பழக்கத்தை மாற்றுங்கள்.
- சாப்பிட்ட பிறகு கொஞ்ச நேரம் நடப்பது செரிமானத்துக்கு உதவும்.
நினைவில் வையுங்கள். வயிற்றில் கேட்கும் ஒவ்வொரு சத்தமும் நோயின் அறிகுறி இல்லை. பெரும்பாலான நேரங்களில் அது உங்கள் செரிமான மண்டலம் வேலை செய்துகொண்டிருப்பதன் இயல்பான ஒலிதான்.








